அமுதமொழி – விகாரி – மார்கழி – 5 (2019)


பாடல்

பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்றதாய்
புத்திகளைச் சொல்லவில்லையோ,
பேய்பிள்ளை யானாலும் தான்பெற்ற பிள்ளையை
பிரியமாய் வளர்க்க வில்லையோ,
கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய் விட்டுக்
கதறி நானழுத குரலில்,
கடுகதனிலெட்டிலொரு கூறுமதிலாகிலுன்
காதினுள் நுழைந்த தில்லையோ
இல்லாத வன்மங்க ளென்மீதி லேனம்மா
இனி விடுவதில்லை சும்மா,
இருவரும் மடிபிடித்துச் தெருவதனில் வீழ்வதும்
இதுதரும மல்ல வம்மா,
எல்லாரு முன்னையே சொல்லியே ஏசுவார்
ஏதும் நீதியல்ல வம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே

காமாட்சியம்மை விருத்தம்

கருத்துஎன் மீது வன்மங்களைக் கொண்டு அருள் புரியாமல் இருந்தாலும் உன்னைவிட்டு விலகமாட்டேன் என்று உரைக்கும் பாடல்.

பதவுரை

அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே! தீய செயல்களில் இருந்து மாறாமல் இருக்கும் கடுமை உடைய பிள்ளை எனினும் பெற்ற தாய் புத்திகளை சொல்லி திருத்தவில்லையா? கடுமையும்  வெறித்தனம் கொண்டு உடைய பிள்ளை எனினும் தான் பெற்ற பிள்ளையை தாய் பிரியமாக வளர்க்க மாட்டாளா? உன்னைப் பற்றி அறியக்கூடியதான அறிவினை பெறாமலும் இடைவிடாமல் மூச்சு விடாமல் வாய்விட்டு கதறி நான் அழும் குரலில் கடுகினில் ஒரு நூறு பகுதி கூட உன் காதில் விழவில்லையா? எதன் பொருட்டு என் மீதினில் இல்லாத வன்மங்களைக் கொண்டு இருக்கிறாய்? நாம் இருவரும் இறந்து போகும்படி சண்டை இட்டுக் கொண்டு தெரிவினில் விழ்வதற்கான தருணம் அல்ல, இது தருமமும் அல்ல; இவ்வாறு நிகழ்வதால் எல்லோரும் உன்னையே சொல்லியே இகழ்ந்து பேசுவார்கள், இது நீதியல்ல. இனி உன்னை விட்டு விலக மாட்டேன்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *