
பாடல்
முன்னையோ சென்மாந்திர மென்னென்ன பாவங்கள்
மூடனான் செய்த னம்மா
மெய்யென்று பொய்சொல்லி கைதனிற் பொருள்தட்டு
மோசங்கள் பண்ணி னேனோ
என்னமோ தெரியாது இக்கணந் தன்னிலே
இக்கட்டு வந்த தம்மா
ஏழைநான் செய்தபிழை தாம்பொறுத்தருள் தந்து
என்கவலை தீரு மம்மா
சின்னங்களாகுது ஜெயமில்லையோ தாயே
சிறுநாணமாகு தம்மா,
சிந்தனை களென் மீதில் வைத்து நற்பாக்கியமருள்
சிவசக்தி காமாட்சி நீ
அன்னவாகனமேறி யானந்தமாக உன்
அடியன் முன் வந்து நிற்பாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே
காமாட்சியம்மை விருத்தம்
கருத்து – பல ஜென்மாக்களில் தான் செய்த தவறுகளை உரைத்து தனக்கு கதி அளிக்கும்படி வேண்டி நிற்கும் பாடல்.
பதவுரை
அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே! மூடனாக இருந்து முந்தைய பிறவிகளில் செய்த பாவங்களின் காரணமாக இதற்கு முன் எத்தனையோ ஜன்மங்கள் எடுத்து வந்தேன்; பொய்யான ஒன்றை உண்மை என்று உரைத்து கைகளில் பொருள்களை தட்டிப்பறித்து மோசங்கள் செய்தேன்; என்னவென்று தெரியாமல் இக்கணத்தில் இத்துன்பம் வந்தது தாயே; செய்வது அறியாமல் இருக்கும் ஏழை ஆகிய நான் செய்த பிழைகளை பொறுத்து அருள் தந்து என் கவலைகளை நீக்க வேண்டும்; இத்துன்பங்கள் எல்லாம் சேர்ந்து வெற்றி எனும் ஜெயம் இல்லாமல் செய்து வெட்கப்பட வைக்கும் அளவில் தனக்கான அடையாளத்தினை பதிக்கிறது; சிவசக்தி எனும் காமாட்சி ஆகிய நீ பல உயிர்களை காப்பதன் பொருட்டு சிந்தனை கொண்டவளான நீ என்மீதும் சிந்தனை வைத்து எனக்கு நற்பாக்கியத்தினை அருள்வாயாக; உன்னை விரும்பும் உன் அடியவன் ஆகிய என்முன் அன்ன வாகனத்தின் மீது ஏறி ஆனந்தமாக வந்து நிற்பாயாக.