
பாடல்
பிட்டு நேர்பட மண்சு மந்த
பெருந்து றைப்பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்தி லாத
சழக்க னேன்உனைச் சார்ந்திலேன்
சிட்ட னேசிவ லோக னேசிறு
நாயி னுங்கடை யாயவெங்
கட்ட னேனையும் ஆட்கொள் வான்வந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – சிவன் கட்டளைக்கு இணங்கி வாராத குற்றத்தை உடையன் ஆயினும் தனக்கு அருளிய பெருங்கருணையை வியந்து உரைத்தது.
பதவுரை
முழுவதும் கற்று அறிந்தவனே, சிவலோகத்தினை தன் உலகமாக உடையவனே, பிட்டுக்கு மண் சுமந்த பெருந்துறையில் உறையும் பெருமானே! உன் உரைக்கப்படுகின்ற கட்டளைக்கு இணங்கி வாராத குற்றத்தை உடைய நான் உன்னை சார்ந்து அடைந்திலேன்; அத்தகைய குற்றம் உடையவன் ஆகியவனும் சிறுமை உடைய நாயினும் கடைப்பட்ட என்னையும் ஆட்கொள்ளுதல் பொருட்டுத் திருக்கழுக்குன்றில் எழுந்தருளி உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய்; உன் பெருங்கருணையை எவ்வாறு வியந்து உரைப்பது?
விளக்க உரை
- சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 63வது படலம் மண் சுமந்த படலம்
- பிட்டு நேர்பட – உண்ட பிட்டுக்கு அளவுக்கு ஒப்ப
- சழக்கன் – பொய்யன்
- சிட்டன் – உயர்ந்தோன், பெரியோர், கல்வி நிரம்பிய சான்றோர்
- வெங் கட்டன் – கொடிய துன்பத்தை உடையவன்