அமுதமொழி – விகாரி – மார்கழி – 9 (2019)


பாடல்

பொழுது விடிந்த தினிச்சிறிதும்
     பொறுத்து முடியேன் எனநின்றே
அழுது விழிகள் நீர்தளும்பக்
     கூவிக் கூவி அயர்கின்றேன்
பழுது தவிர்க்கும் திருச்செவிக்குள்
     பட்ட திலையோ பலகாலும்
உழுது களைத்த மாடனையேன்
     துணைவே றறியேன் உடையானே.

வள்ளலார் பாடல்கள் (வாதனைக் கழிவு) 

கருத்துதுன்பம் கொண்ட பொழுதில் திருவருள் விரைந்து எய்தாமைக்குத் துணிவுற்று வேறு துணை அறியேன் என்று உரைக்கும் பாடல்.

பதவுரை

எல்லாமும் உடைய பெருமானே, இரவு முழுவதும் துன்பம் கொண்டுக் கிடந்த எனக்குப் பொழுது விடிந்தும் அத்துன்பம் நீங்காமையால் இனிச் சிறிது பொழுதும் பொறுக்க மாட்டேன் என்று கண்களில் கண்நீர் நிறைந்து தொழுதும் அழுதும் நின்னை ஓலமிட்டு கூவி அரற்றியும் சோர்கின்றேன்; நிலத்தை உழுது மெலிவுற்ற மாடு போன்ற யான், உன்னைத் தவிர துணையாக  வேறு ஒருவரையும் காணேன்; அடியார்களின் துன்பத்தினை துடைக்கும் உன்னுடைய திருச்செவியில் என்னுடைய அழுகுரல் கேட்கவில்லையோ;  நின் திருவருளை அளித்து அருள்க என்பது மறை பொருள்.

விளக்க உரை

  • கூவுதல் – பறவை கூவுதல், சத்தமிடுதல், யானை முதலியன பிளிறுதல், ஓலமிடுதல், அழைத்தல்
  • பொழுது விடிந்தது –  இரவெல்லாம் உறக்கமின்றி வருந்தினமை
  • இனிச் சிறிதும் பொறுத்து முடியேன் – இரவு முழுதும் துன்பத்தால் வருந்தினமை
  • பழுது தவிர்க்கும் திருச் செவிக்குள் பட்டதிலையோ – துன்புற்று வருந்துவோர் துயர்களை சொல்லி முடிப்பதற்குள் அத்துயரங்களுக்கு ஏதுவாகிய குற்றத்தைப் போக்கும் அருளாளன் இன்னும் தன் துயரங்களை கேட்கவில்லை எனும் பொருள் பற்றியது

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *