
பாடல்
முல்லையங் கண்ணி முடியாய் போற்றி
முழுநீறு பூசிய மூர்த்தீ போற்றி
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி
ஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி
சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி
சென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி
தில்லைச்சிற் றம்பலம் மேயாய் போற்றி
திருவீரட் டானத்தெஞ் செல்வா போற்றி
ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – ஈசனின் குணங்களை சொல்லி அவரை வணங்குதலைப் பற்றி உரைக்கும் பாடல்.
பதவுரை
திருமுடியில் முல்லை மாலையை சூடியவனே, திருமேனி முழுவதும் திருநீறு பூசியவனே, எல்லை அற்றதான எண்குணங்களை உடையவனே, செங்கோட்டு யாழ் மற்றும் சீறி யாழ்போன்ற ஏழு நரம்புகள் உடைய யாழ் வகையில் ஏழுவகை ஓசையைப் படைத்தவனே, மயிர் நீக்கப்பட்ட உருண்டை வடிவினதாகிய கபாலம் எனும் மண்டை ஓட்டில் உணவு பெறுபவனே, உன்னை வந்து வழிபடுபவர்களின் தீவினைகளை முழுவதும் நீக்குபவனே, ஓதுதலை உடைய தில்லைச் சிற்றம்பலத்தை விரும்பி அடைந்து இருப்பவனே, அதிகை வீரட்டானத்தில் உகந்தருளியிருக்கும் எம் செல்வனே! உன்னை வணங்குகிறேன்.
விளக்க உரை
- படைத்தல் – உடையனாதல்
- சில்லை – வட்டம்
- சிரை – மழிப்பு
- செல்வன் – இன்பத்திற்கு ஏதுவாய் உள்ள பொருளாய் உள்ளவன்
- எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி – சிவனுக்கு உரித்தானதும், சைவ ஆகமத்தில் கூறப்பட்ட முறைப்படியும் எண்வகைப்பட்ட குணங்கள் தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர்-அருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என்பதால் எல்லையற்ற நற்பண்புகளை உடையவனே எனும் பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ள கருத்து விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – முல்லை

புகைப்படம் மற்றும் செய்தி – விக்கிப்பீடியா
- முல்லை என்னும் சொல் காட்டில் மலரும் வனமுல்லையை குறிக்கும்
- பாரி வள்ளல் தன் தேரை வழங்கியது இந்த முல்லைக்குத்தான்
- மருத்துவ குணங்கள் – மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு பெறுதல், தலைவலி நீக்குதல், கண் பார்வை கோளாறு நீக்குதல் போன்றவற்றை செய்யும்