குருவாகித் தோத்திப் பழவடியார் சூழ்வினையை நீக்கியுரு மாத்தித் தனது வசம் ஆக்கியே சாத்தரிய மானிடச் சட்டை வடிவெடுத்த மாயோகி யானிடப முந்தும் அருள் ஆனந்தன்
அருளிய சித்தர் : திரிகோணச் சித்தர்
பதவுரை
மாபெரும் தவயோகியாகவும், இடபத்தில் வருபவரும், அருளினை அருளக்கூடிய பேரானனந்த வடிவமாக இருப்பவனும் தன்னுடைய உருவத்தினை நீக்கி, மானிட வடிவத்தில் குருவடிவம் கொண்டு தோத்திரப் பாடல்களைப் பாடி தன்னைத் துதிப்பவராகிய பழைய அடியார்களை சூழ்ந்து வரும் வினைகளை நீக்கி தன் வசன் ஆக்குபவன்.
மூலவர் புஷ்பவனேஸ்வரர் – திரிசூலமும், சடைமுடியும் கொண்ட சுயம்புலிங்கத் திருமேனி
பசுவை வதைத்த பாவம் , பித்ரு சாபம் ஆகியவற்றை நீக்கவல்லத் தலம்
வடக்கு நோக்கி உத்தரவாகினியாக பாயும் சிறப்புடைய வைகைக்கரையில் அமைந்துள்ள தலம்
கோபுர விநாயகர், குடைவரை விநாயகர், அனுக்ஞை விநாயகர், மகா கணபதி, இறந்த முன்னோரின் ஆத்மா சாந்தி பெறவும், யாகம் சிறப்புறவும் அருளும் விநாயகர்கள், பாஸ்கர விநாயகர், இரட்டை விநாயகர் உட்பட 14 விநாயகர்கள் அருள்பாலிக்கும் தலம்
திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது வைகை ஆற்றில் கிடந்த மணல் யாவும் சிவலிங்கங்களாக காட்சி அளித்ததால் ஆற்றைக் கடந்து மிதித்துச் செல்லாமல் வைகை ஆற்றின் மறுகரையில் இருந்தபடியே இத்தலத்து இறைவன் மீது பதிகம் பாடியத் தலம்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் சிவனாரை வழிபட ஏதுவாக நந்தி விலகி வழிவிட்டு சாய்ந்தகோலத்தில் இருக்கும் தலம்
பாண்டியநாட்டு தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் மூவராலும் பாடப் பெற்ற தலம்
கிழக்கு நோக்கிய 5 நிலைகளைக் கொண்ட இராஜகோபுரம்
இறந்தவர் முக்தி பெற ஏற்றப்படும் மோட்ச தீபங்கள் – மூலவர் பின்புறம், கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பினபுறம் நட்சத்திர தீபம், 27 விளக்குகள் கொண்ட திருவாச்சி தீபம்
குலசேகர பாண்டியன் இந்நகரில் முடிசூட்டிக் கொண்ட விழாவில் நெற்கதிரை முடியாகச் சூடிக்கொண்டதால் நெல்முடிக்கரை
பொன்னையாள் எனும் பெண் பூவணநாதர் திருவுருவை பொன்னால் அமைத்து வழிபட வேண்டும் என்று ஆசை இருந்தும், போதிய நிதி இல்லாததால் வீட்டில் இருந்த பழைய இரும்பு, செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை இரசவாதம் செய்து தூய பொன்னாக மாற்றிக் கொடுத்து அவளுக்கு அருள் செய்த இடம்(36 வது திருவிளையாடல்)
சுச்சோதி எனும் மன்னன் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திருப்புவனம் வந்து வைகையாற்றங்கரையில் வேண்டுதல் செய்து, ஆற்றில் தட்சணை பொருட்களான பிண்டங்களை கரைக்க முற்பட்டபோது, முன்னோர்களே நேரடியாக வந்து கையில் வாங்கி கொண்டதால் காசியை விட வீசம்(முன்காலத்து அளவை) அதிகம் புண்ணியம் தரும் புஷ்பவன காசி எனும் பெருமைப் பெற்றத் தலம்
சிவலிங்கத்தைக் கதிரவன் (சூரியன்) வழிபட்டு, நவக்கிரகங்களுக்கும் தலைவனாக இருக்கும் வரம் பெற்றத் தலம்
பிரம்ம தேவன் அறிந்து செய்த பாவத்தை நீக்கிய திருத்தலம்
மகாவிஷ்ணு சலந்திரனைக் கொல்ல சக்கராயுதம் பெற்ற திருத்தலம்.
காளிதேவி, சிவலிங்கம் வைத்து பூசித்த திருத்தலம்
தருமஞ்ஞன் என்ற அந்தணன் காசியில் இருந்து கொண்டு வந்த அஸ்திக் கலசத்தில் இருந்த எலும்புகள் பூவாய் மாறிய திருத்தலம்
செங்கமலன் என்பவனின் பாவங்கள் அனைத்தையும் நீக்கிய திருத்தலம்
திருமகளின் சாபம் தீர்ந்த இடம்
பார்வதி தேவி இறைவன் திருவருள் வேண்டித் தவம் செய்த திருத்தலம்
சலந்திரன் என்ற தவளைக்குச் சக்கரவர்த்தியாய் இருக்கும் படியான வரம் அருளப்பட்ட திருத்தலம்
நள மகாராஜாவிற்கு கலிகாலத்தின் கொடுமையை அகற்றி அவனுக்கு மனச்சாந்தி அளித்த திருத்தலம்
மாந்தியந்தின முனிவருக்கும் தியானகாட்ட முனிவருக்கும் சிவபெருமான் சிதம்பர நல் உபதேசம் வழங்கிய இடம்
தாழம்பூ தான் பொய் சொல்லி உரைத்த பாவம் நீங்க வேண்டி, சிவபெருமானை வணங்கி வழிபட்ட திருத்தலம்
உற்பலாங்கி என்ற பெண் நல்ல கணவனை அடையப்பெற்று தீர்க்க சுமங்கலியாய் வாழும் வரம் பெற்றத் தலம்
திருப்பூவணத் திருத்தலத்தின் பெருமைகள் விரிவாகப் பாடும் நூல்கள் – கடம்பவனபுராணம். திருவிளையாடற் புராணம்
கந்தசாமிப்புலவர் எழுதியது – திருப்பூவணநாதர் உலா, திருப்பூவணநாதர் மூர்த்தி வகுப்பு, தலவகுப்பு,திருப்பூவணப் புராணம் என்ற நூல்கள்
மணிகர்ணிகை , வைகை நதி , வசிஷ்ட தீர்த்தம் , இந்திர தீர்த்தம்
விழாக்கள்
வைகாசி விசாகத் திருவிழா, ஆடி முளைக்கொட்டு உற்சவம், ஆடி மாத / நவராத்திரி கோலாட்ட உற்சவங்கள், விநாயகர் சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி காலங்களில் சிறப்பு வழிபாடுகள், புரட்டாசி நவராத்திரி உற்சவம், ஐப்பசி கோலாட்ட உற்சவம், கார்த்திகை மகாதீப உற்சவம், மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம், மாசி மகா சிவராத்திரி உற்சவம், பங்குனி நடைபெறும் 1௦ நாட்கள் உற்சவம்
மாவட்டம்
சிவகங்கை
முகவரி / திறந்திருக்கும் நேரம்
அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில் திருப்பூவணம் அஞ்சல், இராமநாதபுரம் மாவட்டம் PIN – 623611
தேவாரத்தலங்களில் 202 வதுதலம் பாண்டியநாட்டுத் தலங்களில் இத்தலம் 11 வது தலம்
பாடியவர் திருநாவுக்கரசர் திருமுறை 6 பதிக எண் 18 திருமுறைஎண் 1
பாடல்
வடியேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும் வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும் கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங் காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும் இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும் பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே
பொருள்
சோலைகளுடன் இருக்கும் திருப்பூவணம் எனும் திருத்தலத்தில் விரும்பி எழுந்தருளி இருக்கும் புனிதராகிய சிவபெருமான், அடியார்களுடைய மனக்கண்ணின் முன்னர் கூர்மையான மூவிலைச் சூலமும், நீண்டு வளர்ந்ததாகிய சடைமீது அணிந்த பிறையும், நறுமணம் மிக்க கொன்றைப் பூவினால் ஆகிய மாலையும், காதுகளில் கலந்து தோன்றும் வெண்மையான தோடும், இடிபோல பிளிர்தலை செய்து வந்த யானையின் தோலினை உரித்து போர்வையாக போர்த்தியும், அழகு விளங்கும் திருமுடியும், திருநீறணிந்த திருமேனியும் கொன்டவராக காட்சியில் விளங்குகிறார்.
பாடியவர் சுந்தரர் திருமுறை 7 பதிக எண் 11 திருமுறைஎண் 8
தீய எண்ணங் காரணமாக, தனது இடமாகிய கயிலையை பெயர்த்து எடுக்க முற்பட்ட போது நகை செய்து, அவன் நெரியுமாறு, விரலால் சிறிதே ஊன்றியவனும், தன்னையே உருகி நினைப்பவரது ஒப்பற்ற நெஞ்சிலே உட்புகுந்து, எக்காலத்திலும் நீங்காது உறைபவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியுள்ள `திருப்பூவணம்` என்னும் திருத்தலம் இதுதானோ?
சிந்தை நிலைகெடுமாறு உருகி இன்னிசை பாடி, சிலம்புகள் ஒலிக்குமாறு கூத்துக்கள் நிகழ்த்தி, செழுமையான கங்கையினை சடையின்மேல் மறைத்து வைத்து வெண்ணீற்றினை திருமேனி முழுவதும் பூசி, கந்தை ஆடையினை கோவணமாகஅணிந்து, தோலினால் ஆன சிறுபையினையும், கபாலத்தினையும் யாசகத்திற்காக ஏந்தி திருக்கடையூர் எனும் தலத்தை பதியாக உடைய உயர்ந்தவனே, காலனை துன்பம் கொள்ளச் செய்தவனே! பிறப்பிற்கு காரணமான தந்தையையும், நிரந்தரம் என்று மாயைக்கு உட்பட்டு கருதக்கூடிய மனையையும், இடுப்பில் சுமந்தவளாகிய தாயையும், மழலை மொழி பேசும் குழந்தையும், வினைபற்றி வரும் செல்வத்தையும், இளமையையும், அழகிய வடிவம் கொண்ட பெண்ணையும் அந்தியிலும், பகலிலும் விருப்பமுடன் உடல் வருந்துமாறு சோம்பல் வரும் அளவில் சிந்தையில் கொண்டு ஆழ்கடலில் அலையும் துரும்பு போலாகி அலைக்கழிக்கபடுபவன் ஆகிய என்னை மெய்யறிவு விளங்குமாறு திருத்தி ஆட்கொள்ள நினைக்கவில்லையோ?
கருத்து – போற்றுதல் தாண்டி தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
பராபரமே! வினைகளை அறுத்தல் என்பதை முக்தியினை முன்வைத்து பேரின்பத்தினை தருவதாகிய அருள்தல் எனும் நோன்பினை தராவிட்டால் கெடுவேன்; ஆயினும் என்னுடைய தேகம் விழுந்து விடும் எனில் என்ன செய்வேன்; எனது தந்தையைப் போன்றவனே என்னுடைய தளர்ச்சியினை கண்டும் இன்னும் ஆற்றுப்படுத்தவில்லை ஆயினும் போற்றுதலை வாய்விட்டு உரைத்தல் அன்றி வேறு என் செய்வேன்.
கருத்து – இறைவனின் பல்வேறு குணங்களயும், அதனை உணரும் தன்மை உடையவர்களையும் கூறும் பாடல்.
பதவுரை
உருவ வடிவம் தாங்கும் உடலாகவும், அதில் உறையும் உயிராகவும், அதன் உணர்வாகவும், மவுன நிலைக் கடந்த மெய்யடியார்களிடத்தில் தேன் போன்றவனாகவும், அதனுள் உள் மறைந்திருக்கும் சிற்பரமாக இருப்பவனை பரந்து விரிந்த வானமாகவும், அதை வெளிப்படுத்தும் ஒளியாகவும், காட்சியில் தென்படும் உருவமாகவும், காட்சியில் அன்றி தன்னை வெளிப்படுத்தும் ஒலியாகவும் உணராதவர்கள் எவ்வாறு தெளிவு உடையவர்கள் ஆவார்கள்.
கருத்து – ஈசனை உணர்ந்தவர்கள் துன்ப வெள்ளத்தில் இருந்து வெளியேறுதலையும், உணராதவர்கள் துன்பங்களை அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள் என்பதையும் விளக்கும் பாடல்.
அருள் மிகுத்த ஆகமநூல் படித்து அறியார்! கேள்வியையும் அறியார்! முன்னே இருவினையின் பயன் அறியார்! குருக்கள் என்றே உபதேசம் எவர்க்கும் செய்வார்! வரம் மிகுத்த தண்டலைநீள் நெறியாரே! அவர் கிருபா மார்க்கம் எல்லாம் குருடனுக்குக் குருடன்கோல் கொடுத்துவழி காட்டிவரும் கொள்கை தானே
தண்டலையார் சதகம் – படிக்காசுப் புலவர்
கருத்து – அஞ்ஞானி, இன்னொரு அஞ்ஞானிக்கு உபதேசம் புரிய முடியாததை பழமொழியுடன் இணைத்துக் கூறும் பாடல்.
பதவுரை
கேட்டவற்றியில் மிக்க நன்மை தரக்கூடியதான திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் நீள்நெறி என்னும் திருக்கோயிலிலே எழுந்தருளிய சிவபெருமானே! சொல்லக் கேள்வி எனும் வகையில் வரும் அருள் நிறைந்தாக இருக்கும் ஆகம நூல்களைக் கற்று அறிய மாட்டாதவர்களாகவும், ஆத்ம விசாரம் எனும் சுய கேள்விகளை கேட்டு மெய்ப் பொருளை அறிய மாட்டாதவர்களாகவும், உலகியலில் ஏற்படும் இன்ப துன்பத்திற்கு காரணமான இருவினையின் வினைப் பயன்களையும் அறிய மாட்டாதவர்களாகவும், தன்னை குரு உபதேசம் செய்யத் தக்கவர்கள் என்று எண்ணி, அண்டியவர்களின் தேவைகளின் பொருட்டு உபதேசம் செய்யாமல் எதிர்ப்படும் அனைவருக்கும் உபதேசம் செய்வார்கள்; இவர்கள் அருளக்கூடிய மார்கம் எவ்வாறு எனில் குருடர் ஒருவர்க்கு மற்றொரு குருடர் கோல் கொடுத்து வழிகாட்டி வருவது போன்றதே.
விளக்கஉரை
ஞானி மெய் ஞானம் பெறுவதன் பொருட்டு அஞ்ஞானிக்கு அருள் உபதேசம் புரியலாம். ஆனால் அஞ்ஞானி, இன்னொரு அஞ்ஞானிக்கு உபதேசம் புரிந்தால், இருவருமே நரகம் புகுந்து, பிறவிக் குழியிலும் விழுவர்.
குருடனுக்குக் குருடன் கோல் கொடுத்தல் எனும் பழமொழியை விளக்கும் பாடல்
கருத்து – உன்னைப் பற்றி எண்ணாமல் கல்மனம் உடையவனாகி துன்பக்கடலில் உழல்வோனாகிய தன்னைக் காப்பாற்ற வேண்டும் என ஈசனிடம் விண்ணபிக்கும் பாடல்.
பதவுரை
இறைவனே! மின்னலின் அழகை ஒத்த உன்னுடைய திருவடியை அடைந்தவர்கள் இந்த அகன்ற உலகைக் கடந்தார்கள்; தேவர்கள் எல்லாம் பொன் போன்ற நிறத்தினை உடைய மலர்களால் போற்றுதலுக்கு உரிய வகையில் அருச்சனை செய்து வணங்கி நின்றார்கள்; கல்லை ஒத்த மனத்தை உடையவனாய்க் உன்னுடைய திருவருள் கூடாமல் உன்னால் கழிக்கப்பட்டுத் துன்பக் கடலில் வீழ்ந்த யான், இனி உன்னை எவ்வாறு அடைய முடியும் எனும் வகையைச் சொல்வாயாக.
விளக்கஉரை
மின் ஏர் அனைய – மின்னலினது அழகை ஒத்த
பொன் ஏர் அனைய மலர் – பொன்னின் அழகையொத்த பூக்கள்; இவை கற்பகத் தரு போன்றவை
அடியார்கள் அடைந்த பெரும்பேற்றினை. `கடையேனாய்` என உயர்திணையாக
உரையாமல் சிறுமை கொண்டிருப்பதை வைத்து ‘கடையாய்’ என அஃறிணையாக உரைத்தார்,
என்நேர் அனையேன் – இழிவினால் எனக்கு ஒப்பார் பிறரின்றி, என்னையே ஒத்த யான்
கருத்து – உடலில் மந்திரத்தால் ஆகுதி செய்தல் பற்றிய பாடல்.
பதவுரை
உடலானது அறுபட்டு போகும் காலத்தில், மெய் என்று கருதிய உடலை விட்டு ஆவி பிரிந்து போய் வேறொரு உடலில் புகும்; ஆகையால் கற்ற அனைத்து கலைகளிலும் இருக்கும் சிறப்புகளை யோசித்து தீர்மானமாக தானியம் கொண்டு ஆகுதியை வளர்ப்பது போல் குருவால் உபதேசிக்கப்பட்ட மந்திரத்தால் இந்த உடலில் ஆகுதி செய்து மகிழ்ந்து இருக்க வேண்டும்.
கருத்து – மயக்கம் அறுத்து மெய்யான இன்பம் தந்ததால் தன்னைக் காக்கவேண்டும் என முறையிடும் பாடல்.
பதவுரை
அருட்பெருஞ்சோதியாக விளங்கக்கூடிய ஆண்டவரே, திருஅம்பலத்தில் இருந்து அருளக்கூடியவரே! உறக்கம் போன்ற மயக்க நிலையில் இருந்து எனை எழுப்பி மெய்யான இன்பம் தந்ததால் எனக்கு நாயகராகிய உம்மை நான் ஒருபோதும் விடமாட்டேன்; அதோடு மட்டுமல்லாமல் நெறி பிறழும் என் உடல் பொருள் ஆவி என்ற மூன்றையும் உமக்கே கொடுத்து விட்டேன்; இது உம் மேல் ஆணை; இனிமேல் என்மீது குறைசொல்ல வேண்டாம்; நான் ஏணை எனப்படும் தூளியிருந்து எடுத்த கைப்பிள்ளை போல் இருக்கின்றேன் காண்; இது நாணத்தைத் துறந்து வாய்விட்டு உரைக்கின்ற முறையீடு இதுவாகும்.
விளக்கஉரை
நாண் – நாணம். அடக்கமாகச் சொல்ல வேண்டியதை வாய்விட்டு வெளிப்படையாக உரைப்பது பற்றியது
கோணை உடல் பொருள் ஆவி – உடலும் பொருளும் உயிரும் எப்போதும் நேர்வழியில் செல்லாமல் பிறழ்ந்து செல்லும் இயல்புடையது என்பது பற்றியது.
ஏணை – குழந்தைகளை ஆட்டி உறங்குவித்தற்குத் துணியால் கட்டப்படும் தொட்டில்
விண்ணவராலும் அறிவரி யான்றன்னைக் கண்ணற உள்ளே கருதிடில் காலையே எண்ணுற வாகும் முப் போதும் இயற்றிநீர் பண்ணிடில் தன்மை பராபர னாகுமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – சிவனைச் சார்ந்தவர்களுக்கு எளியன் ஆவான் என்பதை உணர்த்தி ‘அவனைச் சார்ந்து பயன் அடைக` என்பது பற்றி கூறப்பட்டப் பாடல்.
பதவுரை
தேவர்களாலும் அறிவதற்கு அரியவனாகிய சிவனை, அன்னையுடம் தன்னுடலில் பாகத்தில் கொண்ட சிவசக்தி ரூபமாக அகக்கண் கொண்டு கருத்தில் நிறுத்தி உள்ளத்தால் பற்றினால் அக்கணத்திலே அவன் உங்களால் விரும்பப்படும் நிலையில் கால இடைவெளியின்றி வெளிப்பட்டு விளங்குவான். அதன் பின்பு எக்காலத்திலும் நீங்கள் அவனை அகத்தும், புறத்தும் வழிபட்டாலும், உங்களது தன்மை சிவத் தன்மையாய் ஆகிவிடும்.
விளக்கஉரை
விண்ணவராலும் அறிவரி யான்றன்னைக் கண்ணற – விண்ணவராலும் அறிவரியான் அன்னைக் கண்ணற – எனப் பொருளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது – (உம்மையால் மூவர்களாலும்) அறிதற்கரியவனாகிய சிவனை என்று சில இடங்களில் விளக்கங்கள் காணக் கிடைக்கின்றன. சிவசக்தி ரூபம் முன்வைத்து உம்மையால் அறிய இயலாதவன் என்பது பொருந்தாமையால், இவ்விளக்கம் தவிர்க்கப்படுகிறது.
கண் – காலம் பற்றிய இடைவெளி.
காலை – காலம்
இயற்றுதல், பண்ணுதல் – அகம், புறம் நோக்கி உரைக்கப்பட்டது
அகளமய மாய்நின்ற அம்பலத்தெங் கூத்தன் சகளமயம் போல்உலகில் தங்கி – நிகளமாம் ஆணவ மூல மலம்அகல ஆண்டான்காண் மாணவக என்னுடனாய் வந்து
திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்
கருத்து – சிவனே குருவாகி வந்து உயிரைப் பிணித்துள்ள ஆணவமலம் உயிரைவிட்டுக் கழலும் பக்குவத்தை அடையுமாறு மெய்யுணர்வு அளித்து ஆட் கொள்ளுதலைச் சொல்லும் பாடல்.
பதவுரை
நான் கூறுவதை விரும்பி கேட்கும் மாணவனே! அரூபியாய், பேரறிவுப் பொருளாய் நிலைபெற்றுத் திருவம்பலத்திலே அருட்கூத்து இயற்றியருளுகின்ற எம்முடைய கூத்தப்பெருமான், அண்டங்களுக்கும் அப்பால் எவ்விதத் தொடக்கமும் அற்றவனாகவும், தில்லை அம்பலத்தே அம்மையோடு ஆனந்தக் கூத்தாடியவாறும் இருக்கின்றான்; சகளமயம்போல் உலகில் தங்கி சரீரமெடுக்கிறவர்களைப்போல இந்தப் பூமியிலே திருவுருக் கொண்டு, தம்முடைய திருவருளாலே இவ்வுலகில் ஒரு உருவமுடையவன் போல் குருவாக எழுந்தருளி என்னே அநாதியாக பற்றியுள்ள ஆணவமாகிய மூலமலம் என்னைவிட்டு அகலுமாறு செய்து, சுத்தமாக்கி என்னுடனாய் வந்து என்னுடனே கூடியிருந்து தனக்கு அடிமையாகக் கொண்டான்.
விளக்கஉரை
அகளமயம் – களங்கமற்ற தூய்மையுடையதாகிய பேரறிவு
சகளமயம்-உலகியல் பாசத் தொடர்புடைய உருவம்
நிகளம்-விலங்கு
சகளமயம் போல் உலகில் தங்கி – உலகில் பாசத்தொடர்புடைய உருவமாய்த் தோன்றினும் பாசத் தொடர்பு அவனுக்கில்லை என்பது பாடம்.
கருத்து – சக்கராயுதத்தை திருமாலுக்கு வழங்கியவன் திருநன்னிலத்துப் பெருங்கோயிலில் உறைக்கின்றான் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
அறத்தினை முன்வைத்து நன்மையைத் தருகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், பிலம் என்று வழங்கப்படுவதும், பாதாளம் போன்று இருக்கப் பெற்றதுமான வாயைக் கொண்டவனும், பெரிதும் மிகுந்த வலிமையையும் உடைய சலந்தராசுரனது உடலை இரண்டு பிளவாகச் செய்த சக்கராயுதத்தை, முன்னொரு காலத்தில் , மண்ணை உண்டு உமிழ்ந்த திருமகள் கணவனாகிய திருமாலுக்கு அளித்த தலைவன்.
விளக்கஉரை
பிலம் – பாதாளம்; கீழறை; குகை; வளை
நலம் – நன்மை, அறம், சோபனம் என்ற யோகத்தின் தனித்தமிழ் சொல்.
நிலந்தரு – மக்களுக்கு நிலம் முதலிய செல்வத்தைத் தருகின்ற மாமகளுக்கு உரித்தானவன்.
கருத்து – பாவியாகிய தன்னை விடுவிக்கும் எண்ணம் உண்டோ என வினவும் பாடல்.
பதவுரை
கருங்குவளை மலரினை ஒத்த மீன் போன்ற கண்ணையுடைய உமையம்மையின் பாகனே! உன்னுடனே பொருந்தி இருக்கும் அடியார்களில் ஒருவனாக நானும் உண்மையிலே விரும்பி உன்னை அடைந்து உயிரும், அதற்கு ஆதாரமான உடம்பும், நான் எனது என்னும் பற்றுக்களும் சிறிதுமில்லாது அற்றுப்போகும்படி செய்து, உன்னுடைய பெரிய திருவருளால் எப்பொழுதும் நிலைபெற்று இருக்கும் பேரின்பமாகிய பழையகடலை கடக்க பாவியாகிய எனக்கும் உலகியலில் இருந்து அறுதல் உண்டாகுமோ?
தனத்திலே மிகுத்த செழுந் தண்டலையார் பொன்னி வளம் தழைத்த நாட்டில், இனத்திலே மிகும் பெரியோர் வாக்கு மனம் ஒன்று ஆகி எல்லாம் செய்வார்; சினத்திலே மிகும் சிறியோர் காரியமோ சொல்வது ஒன்று! செய்வது ஒன்று! மனத்திலே பகை ஆகி உதட்டிலே உறவாகி மடிவர் தாமே
தண்டலையார் சதகம்
கருத்து – பெரியேர்களுக்கும் சிறியோர்களுக்குமான வித்தியாசங்களை உணர்த்தும் பாடல்.
பதவுரை
பொன்னி எனும் காவிரி நதி பாய்ந்து வளம் தழைத்ததுமான நாட்டில், செல்வத்திலே மிகுந்து இருக்கக்கூடியவரான தண்டலையார் இருக்கும் இடத்தில், சொல் எனப்படுவதான வாக்கும், மனம் ஆகியவை எல்லாம் ஒன்றாகி தம் காரியங்களைச் செய்வர்; சினக்கொண்டு சிறுமை படைத்தவர்களாக இருக்கக்கூடிய சிறியோர்களால் செய்யப்படும் காரியங்கள் சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் இருக்கும்; அதுமட்டுமல்லாமல் மனதில் பகை கொண்டு அது வெளியே தெரியாமல் உதட்டளவில் உறவாடி தாமே மடிவார்கள்.
குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம் வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன பட்டன மீன்கள் பரதன் வலைகொணர்ந்து இட்டனன் யாம்இனி ஏதம் இலோமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – ஐந்திந்திரியங்களை அடக்குதற்கு இறைவனது திருவருளைப் பற்றி நிற்றலே வழி என்பதை விளக்கும்பாடல்.
பதவுரை
ஒவ்வொரு மனித உயிரையும் ஒவ்வொரு நீர்வாழ் உயிராகக் கருதினால் அவ்வுயிர் வாழ்வதற்கு உள்ள குளமும் ஒரு சாண் குறுக்களவுடைய வட்ட வடிவினதாய்த் தோன்றும். அதன் ஆழமும் ஒரு சாணளவே உள்ளதாக மதிக்கப்படும் (கழுத்துக்குக் கீழ்). புறக்குளத்தில் பல மீன்கள் துள்ளிக் குதித்துக் கொண்டிருப்பது போல் இந்த உடலில் புலன்கள் எனும் மீன்கள் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தன. மீனவன் (பரவன்) வந்து ஒரு வலையை வீசுவது போல் சிவபெருமான் அம் மீன்களைச் செம்மைப்படுத்தச் செம்பரவனாகத் தோன்றி வலையை வீசி அருளினன்; குளத்தில் இருக்கும் மீன்கள் அந்த வலையில் சிக்கிக் கொண்டு அவற்றின் துள்ளல் அடங்கியது போல் சிவன் தன்னுடிய ஒப்பற்றதாகிய கருணையினால் தனது சத்தியைச் செலுத்தி எமது ஐம்பொறிகளைத் தன்னையே பற்றியிருக்கச் செய்தான்; ஆதலால் நாமும் நம்முடைய ஐம்புலப்புலன் இன்பம் எனும் நுகர்ச்சி துன்பத்தினின்று நீங்கிச் சிவஇன்ப நினைவில் ஆழ்ந்தோம்.
விளக்கஉரை
தூங்குதல் – ஆழ்தல்
அழுந்தல் – ஐம்புலன் அடக்குமுறைமை
பரவன்: பரதவன்
ஏதம் – துன்பம்
ஐம்பொறிகளும் அமைந்த உறுப்பு முகம் – ஆகவே மனித உயிர்க்கு இடம்
கருத்து – சிவதத்துவம் ஆகிய சுத்தவித்தை, ஈச்சுரம், சாதாக்கியம், விந்து, நாதம் ஆகியவற்றில் சிவசக்தி தத்துவங்கள் செயல்படும் முறையை விளக்கும் பாடல்.
பதவுரை
சிவதத்துவங்கள் ஐந்தினில் ஒன்றானதும், இறைவனுடைய ஐந்து தொழில்கள் செய்வதற்குரிய இடங்களில் ஒன்றாகி சிவதத்துவத்தின் பகுதியானதுமான சுத்தவித்தையில் கிரியையின் செயல்பாடுகள் குறைந்து ஞானம் மிகுந்து இருக்கும்; காலத்தால் பகுக்க இயலாத பழமையானதான ஈச்வரத்தில் ஞானம் குறைந்து செயலால் செய்யப்படுவதும், சிவனை ஆகமங்களில் விதித்தவாறு புறத்தொழிலானும் அகத்தொழிலானும் வழிபாடு செய்வதும் ஆன கிரியை உயர்ந்தது நிற்கும்; சிவ சக்தி இணைவால் செயலும், அறிவும் சமநிலையில் காணப்படுவதாகிய சாதாக்கியத்தில் ஞானமும் கிரியையும் சம அளவில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும்; சக்தி தத்துவத்தில் கிரியையை முன்வைத்தும் சிவதத்துவத்தில் அவற்றுக்குக்கு ஆதாரமான ஞானம் முன்வைத்தும் இருக்கும்.
விளக்கஉரை
சைவ நாற்பதங்களின் வரிசையில் கிரியை, ஞான மார்கங்களின் செயல்படு முறை விளக்கங்கள்
கருத்து – ஈசன் தனித்து இருந்து கோடிக்கரையில் உறைதல் குறித்து வினா எழுப்பியப் பாடல்.
பதவுரை
மைபொருந்திய பெரிய கண்களை உடைய உமையம்மை ஆகிய இறைவியின் பாகத்தை உடையவனே! கங்கையும் வேறிடம் இல்லை என்பதை உணர்ந்து உனது அழிவில்லாத திருமேனியில் இருக்கின்றாள்; இவ்வாறு இரு மகளிர் உடம்பிலே நீங்கா திருக்க பூக்கள் பொருந்திய சோலைகளைகளில் இருந்து பூக்களைப் பறித்து சூடி கையில் நிறைந்த வளைகளையுடையவளும் காட்டை உரிமையாக உடையவளும் ஆன காளியோடு கூடிதான கோடிக் கரையையே உறைவிடமாகக் கொண்டாயே, இஃது எவ்வாறு?
ஆசையெனும் பெருங்காற்று ஊடு இலவம் பஞ்சு எனவும் மனது அலையும் காலம் மோசம் வரும் இதனாலே கற்றதும் கேட்டதும் தூர்ந்து முத்திக்கான நேசமும் நல்வாசமும் போய் புலானாயிற் கொடுமை பற்றி நிற்பர் அந்தோ தேசு பழுத்தருள் பராபரமே நிராசை இன்றேல் தெய்வமுண்டோ
தாயுமானவர் பாடல்கள்
கருத்து – ஆசையே எல்லா அழிவுக்கும் மூல காரணம் எனவும் அதனால் மோட்சத்தை அடைவதற்கான விருப்பமும் இல்லாமல் இந்த மாயையிலேயே மூழ்கிக் கிடப்பர் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
ஒளி நிறைந்த அருள் பழுத்த பராபரமே! ஆசை என்று உருவமாக சொல்லப்படுகிற பெரிய காற்றினில் அலையும் இலவம் பஞ்சைப் போல மனமானது அலையும் காலத்தில் மோசம் நேரிடும்; இதனால் முக்தியினை அளிப்பதற்காக கற்கப்பட்ட கல்விகளும், ஞானம் பெறுவதற்காக கேட்ட கேள்விகளும் வீணாகி, முக்தி எனும் மோட்சம் அடைவதற்கான விருப்பமும் அதன் பொருட்டான சிறந்த வாசமும் நீங்கி, ஐம்புலன்கள் பற்றி நின்று அது ஏற்படுத்தும் கொடுமையான துன்பங்கள் பற்றி கொண்டு நிற்பர்; நிறைவேராத ஆசை இருப்போர் முன்னர் எவ்வாறு தெய்வம் தோன்றும்?(தோன்றாது என்பது துணிபு)
விளக்கஉரை
கற்றதும் கேட்டதும் – இதனை இருவிதமாக மாற்றி வாசிக்கலாம், ஒன்று ஞான வழி பற்றி நிற்க கேட்ட கேள்விகளும் அதற்கான பதில் பெற்று கற்றதும் என்று கொள்ளலாம். இரண்டாவது கற்ற வித்தையின் வழி நின்று வைகரி எனும் செவியோசை, மத்திமை எனும் கருத்தோசை, பைசந்தி எனும் நினைவோசை, பரை எனும் நுண்ணோசை ஆகியவற்றை கேட்டல் என்றும் கொள்ளலாம்.