
பாடல்
மின்னே ரனைய பூங்கழல்க
ளடைந்தார் கடந்தார் வியனுலகம்
பொன்னே ரனைய மலர்கொண்டு
போற்றா நின்றார் அமரரெல்லாம்
கன்னே ரனைய மனக்கடையாய்க்
கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த
என்னே ரனையேன் இனியுன்னைக்
கூடும் வண்ணம் இயம்பாயே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – உன்னைப் பற்றி எண்ணாமல் கல்மனம் உடையவனாகி துன்பக்கடலில் உழல்வோனாகிய தன்னைக் காப்பாற்ற வேண்டும் என ஈசனிடம் விண்ணபிக்கும் பாடல்.
பதவுரை
இறைவனே! மின்னலின் அழகை ஒத்த உன்னுடைய திருவடியை அடைந்தவர்கள் இந்த அகன்ற உலகைக் கடந்தார்கள்; தேவர்கள் எல்லாம் பொன் போன்ற நிறத்தினை உடைய மலர்களால் போற்றுதலுக்கு உரிய வகையில் அருச்சனை செய்து வணங்கி நின்றார்கள்; கல்லை ஒத்த மனத்தை உடையவனாய்க் உன்னுடைய திருவருள் கூடாமல் உன்னால் கழிக்கப்பட்டுத் துன்பக் கடலில் வீழ்ந்த யான், இனி உன்னை எவ்வாறு அடைய முடியும் எனும் வகையைச் சொல்வாயாக.
விளக்கஉரை
- மின் ஏர் அனைய – மின்னலினது அழகை ஒத்த
- பொன் ஏர் அனைய மலர் – பொன்னின் அழகையொத்த பூக்கள்; இவை கற்பகத் தரு போன்றவை
- அடியார்கள் அடைந்த பெரும்பேற்றினை. `கடையேனாய்` என உயர்திணையாக
- உரையாமல் சிறுமை கொண்டிருப்பதை வைத்து ‘கடையாய்’ என அஃறிணையாக உரைத்தார்,
- என்நேர் அனையேன் – இழிவினால் எனக்கு ஒப்பார் பிறரின்றி, என்னையே ஒத்த யான்