
பாடல்
அருள் மிகுத்த ஆகமநூல் படித்து அறியார்!
கேள்வியையும் அறியார்! முன்னே
இருவினையின் பயன் அறியார்! குருக்கள் என்றே
உபதேசம் எவர்க்கும் செய்வார்!
வரம் மிகுத்த தண்டலைநீள் நெறியாரே!
அவர் கிருபா மார்க்கம் எல்லாம்
குருடனுக்குக் குருடன்கோல் கொடுத்துவழி
காட்டிவரும் கொள்கை தானே
தண்டலையார் சதகம் – படிக்காசுப் புலவர்
கருத்து – அஞ்ஞானி, இன்னொரு அஞ்ஞானிக்கு உபதேசம் புரிய முடியாததை பழமொழியுடன் இணைத்துக் கூறும் பாடல்.
பதவுரை
கேட்டவற்றியில் மிக்க நன்மை தரக்கூடியதான திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் நீள்நெறி என்னும் திருக்கோயிலிலே எழுந்தருளிய சிவபெருமானே! சொல்லக் கேள்வி எனும் வகையில் வரும் அருள் நிறைந்தாக இருக்கும் ஆகம நூல்களைக் கற்று அறிய மாட்டாதவர்களாகவும், ஆத்ம விசாரம் எனும் சுய கேள்விகளை கேட்டு மெய்ப் பொருளை அறிய மாட்டாதவர்களாகவும், உலகியலில் ஏற்படும் இன்ப துன்பத்திற்கு காரணமான இருவினையின் வினைப் பயன்களையும் அறிய மாட்டாதவர்களாகவும், தன்னை குரு உபதேசம் செய்யத் தக்கவர்கள் என்று எண்ணி, அண்டியவர்களின் தேவைகளின் பொருட்டு உபதேசம் செய்யாமல் எதிர்ப்படும் அனைவருக்கும் உபதேசம் செய்வார்கள்; இவர்கள் அருளக்கூடிய மார்கம் எவ்வாறு எனில் குருடர் ஒருவர்க்கு மற்றொரு குருடர் கோல் கொடுத்து வழிகாட்டி வருவது போன்றதே.
விளக்கஉரை
- ஞானி மெய் ஞானம் பெறுவதன் பொருட்டு அஞ்ஞானிக்கு அருள் உபதேசம் புரியலாம். ஆனால் அஞ்ஞானி, இன்னொரு அஞ்ஞானிக்கு உபதேசம் புரிந்தால், இருவருமே நரகம் புகுந்து, பிறவிக் குழியிலும் விழுவர்.
- குருடனுக்குக் குருடன் கோல் கொடுத்தல் எனும் பழமொழியை விளக்கும் பாடல்