அமுதமொழி – சுபகிருது – புரட்டாசி – 20 (2022)


பாடல்

அறிவெனில் வாயில் வேண்டா அன்றெனில் அவைதாம் என்னை
அறிவதை உதவு மென்னில் அசேதனம் அவைதா மெல்லாம்
அறிபவன் அறியுந் தன்மை அருளுவன் என்னி லான்மா
அறிவில தாகும் ஈசன் அசேதனத் தளித்தி டானே

சிவப்பிரகாசம் – மூன்றாம் சூத்திரம் – ஆன்ம இலக்கணம் – உமாபதி சிவம்

கருத்துஆன்மா அறிவுடைப் பொருள் என்பதை விளக்கும்  பாடல்.

பதவுரை

ஆன்மாவானது தானாக அனைத்தையும் அறிய இயலும் எனில் அதற்கு இந்திரியங்கள் தேவை இல்லை; அதுபோலவே ஆன்மாவிற்கு அறியும் தன்மை இல்லை எனில் இந்திரியங்கள் எதன் பொருட்டு அதனுடன் இணைத்து படைக்கப்பட்டு இருக்கின்றன; இந்திரியங்கள் சடமாவதால் ஆன்மாவுக்கு அறிவை கொடுக்காது;  அனைத்தையும் அறிகின்ற ஈசன் ஆன்மாவுக்கு அறியும் தன்மையைக் கொடுப்பார் எனில்  ஆன்மா இயற்கையில் அறிவில்லாத சடப் பொருளாக இருக்க வேண்டும். ஏனெனில் ஈசன் அறிவில்லா சடப்பொருளாக இருக்க வேண்டும்; ஏனெனில் சிவன் இயல்புக்கு மாறாக  உயிறற்ற பொருள்களுக்கு  உயிர் தன்மையை அருள மாட்டார். எனவே ஆன்மாவானது இயற்கையில் அறிவுடைய பொருள் ஆகும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மார்கழி- 7 (2020)


பாடல்

தூநிழலார் தற்காருஞ் சொல்லார் தொகுமிதுபோல்
தான்அதுவாய் நிற்குந் தரம்

திருநெறி 8 – திருவருட்பயன் – உமாபதி சிவாச்சாரியார்

கருத்துஉயிர் பாசத்தோடு இருந்து வந்துப் பின் விலகி அசுத்தம் நீங்கப் பெற்றப்பின் தெளிவு பெறுதல் குறித்து விளக்கும்  பாடல்.

பதவுரை

சூரியன் வந்த காலத்தில் அதன் கடுமையால் துயர் உற்றவனுக்கு தூயதும், குளிர்ந்ததும் ஆன நிழல் எதிர்ப்பட்டால் அதில் சென்று தங்கி வெம்மையைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்று எவரும் சொல்வதில்லை; இந்த முறைமையைப் போல இருவினை ஒப்புக்குப்பின் ஆன்மாவிடத்தில் திருவருள் வந்து சேர்ந்தப்பின் உலகினை நோக்காது உயர்ந்ததான் திருவருளில் அடங்கி ஒற்றுமை கொண்டு நிற்கும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 4 (2019)

பாடல்

ஒடுங்கிடா கரணம் தாமே ஒடுங்குமா றுணர்ந் தொடுக்க
ஒடுங்கிடும் என்னில் நின்ற தொடுங்கிடா கரண மெல்லாம்
ஒடுங்கிட ஒடுங்க உள்ள உணர்வுதா னொழியும் வேறாய்
ஒடுங்கிடின் அன்றி மற்ற உண்மையை உணரொ ணாதே

திருநெறி 7 – உமாபதி சிவம்

கருத்துமனம், சித்தம், புத்தி மற்றும் அகங்காரம் கொண்ட அந்தக்கரணங்கள் மற்றும் அது சார்ந்த துணைக்கருவிகள் விலக்கி அவைகளை அந்நியமாக்குதலே சிவம் அறியும் வழி என அறிவுறுத்தும் பாடல்.

பதவுரை

அந்தக்கரணத்தின் பகுதி ஆகிய மனம் என்றுமே தானே ஒடுங்காது; கரணங்கள் ஒடுங்கும் வழியை அறிந்து ஒடுக்க அவை ஒடுங்கும் எனில் அதற்கு துணைபுரிவதும், ஆன்ம தத்துவத்தின் குழுக்களில் இடம்பெற்றதும் ஸ்தூல உடல், அதுசார்ந்த பொறிகள்,  பஞ்சபூதங்கள், ஐம்பொறிகள்,  ஒன்பது கருவிகள் ஆகிய துணைக்கருவிகளும் ஒடுக்குதல் இல்லை; தத்துவங்கள் எல்லாம் ஒடுங்கத் தக்கதாக ஒடுங்கினபொழுதே ஆன்மபோதம் ஒடுங்குமென்னில் அப்பொழுது உள்ள பழைய சிற்றறிவு நீங்கி முழுமையான முக்கால அறிவே முத்தியென்கிற நிலையை கொடுத்து விடும். அவ்வாறு இல்லாமல்  அந்தச் சிவத்தை அறிந்து அநுபவிக்கும் வழி எவ்வாறு என்னில்  கரணங்கள் அந்நியமாய் விடும்படி, தரிசனமான ஞானத்தோடும் கூடி நின்று ஒழிவது அல்லாமல் அந்தச் சிவத்தை அறிந்து அதன் உண்மையை அநுபவிக்க இயலாது.

விளக்க உரை

  • கரணம் – கைத்தொழில்; இந்திரியம்; அந்தக்கரணம்; மனம்; உடம்பு; மணச்சடங்கு; கல்வி; கூத்தின்விகற்பம்; தலைகீழாகப்பாய்கை; கருவி; துணைக்கருவி; காரணம்; எண்; பஞ்சாங்கஉறுப்புகளுள்ஒன்று; சாசனம்; கணக்கன்; கருமாதிச்சடங்குக்குரியபண்டங்கள்.
  • கேவலஞானம் – முக்கால் அறிவு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 10 (2018)

பாடல்

மூலம்

கனவு கனவென்று காண்பரிதாங் காணில்
நனவி லவைசிறிதும் நண்ணா – முனைவனரு
டானவற்றிலொன்றா தடமருதச் சம்பந்தா
யானவத்தை காணுமா றென்.

பதப் பிரிப்பு

கனவு கனவென்று காண்பரிதாம் காணில்
நனவில் அவைசிறிதும் நண்ணா – முனைவன்அருள்
தான்அவற்றில் ஒன்றா தடமருதச் சம்பந்தா
யான்அவத்தை காணுமா றென்

திருநெறி 9  – உமாபதி சிவம்

பதவுரை

மருதநகர் வாழ் சம்பந்த மாமுனியே! உயிர் செயல்படும் நிலையைக் கூறுவதாகிய காரிய அவத்தையானது, புருவ மத்தியில் இருந்து செயல்படுவதாகிய நனவு, கண்டத்திலிருந்து செயல்படுவதாகிய கனவு, இருதயத்திலிருந்து செயல்படுவதாகிய உறக்கம், உந்தியிலிருந்து செயல்படுவதாகிய  பேருறக்கம், மூலாதாரத்திலிருந்து செயல்படுவதாகிய உயிர்ப்படக்கம் என விரியும். அவ்வாறு உயிரானது கண்டத்தில் இருந்தில் செயல்படும் நிலை ஆகிய கனவினை காணும் போது கனவில் நின்று  ‘இது கனவு’ என்று அறிய இயலாது. அகம் விழிப்புற்ற நிலையாகிய நனவில் அந்த கனவில் கண்ட காட்சிகள் காண இயலாது. முனைவன் அருள் பெறும் போது  காரிய அவத்தைகள் நீங்கப் பெற்று, காரண அவத்தையின்  கேவல அவத்தை, சகல அவத்தை ஆகியவைகளும் நீங்கப் பெற்று,  பல்வேறு பிறப்பெடுத்துப் படிப்படியாக முக்திப் பேற்றை அடைந்து இறைவனின் திருவருளுக்கு உரியதாகும் நிலை ஆகிய சுத்த அவத்தையை காணுமாறு செய்வாயாக.

விளக்க உரை

  • ‘இத்தகைமை இறையருளால் உயிரறியும்’ எனும் சிவப்பிரகாசரின் வரிகளுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • உயிரானது ‘அறிவித்தால் அறியும் அறிவுடைய ஒரு பொருள்’ எனபதும்,  உயிர் தனித்து இயங்கினாலும், இறைவன் தனிக் கருணையினால் அன்றி அவத்தைகள் விலகி அது நிலை பேறு கிட்டாது என்பதும் விளங்கும்.

சமூக ஊடகங்கள்