அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 11 (2019)


பாடல்

நெஞ்சு கந்துனை நேசித்த மார்க்கண்டர்க்
கஞ்ச லென்ற அருளறிந் தேஐயா
தஞ்ச மென்றுன் சரணடைந் தேன்எங்குஞ்
செஞ்சே வேநின்ற சிற்சுக வாரியே

தாயுமானவர்

கருத்துமனதால் பற்றிய மார்க்கண்டேயருக்கு அருளுய திறம் போலவே தனக்கும் அருள வேண்டும் என விளிம்பும் பாடல்.

பதவுரை

எங்கும் நிறைந்தும் , செம்மை உடைய வீரம் கொண்டும் நின்றும், நன்மையை தரும் நடனம் ஆடுகின்றவரும், கருணை கொண்டவரும் ஆனவரே, மனதினால் உன்னை நினைத்து பற்றிக் கொண்டவராகிய மார்க்கண்டேயருக்கு அஞ்சேல் என்று அருளினை வழங்கிய ஐயனே! உன்னையே தஞ்சம் என்று சரண் அடைந்தேன்.

விளக்க உரை

  • சேவுகம் – ஊழியம், வீரம்
  • வாரி – மடை, நீர், நீர்நிலை, வெள்ளம், கடல், நீர்நிலை, நீர் நிலைகொண்டு இருக்கும் இடம், நூல், கலைமகள், வீணைவகை, இசைக்குழல், யானையகப்படுத்துமிடம், யானைக்கட்டுங்கயிறு, யானைக்கொட்டம், வாயில், கதவு, வழி, தடை, மதில், திற்சுற்று, பகுதி, வருவாய், விளைவு, தானியம், செல்வம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 10 (2019)


பாடல்

ஏசினும் யான்உன்னை ஏத்தினும் என்பிழைக் கேகுழைந்து
வேசறு வேனை விடுதிகண் டாய்செம் பவளவெற்பின்
தேசுடை யாய்என்னை ஆளுடை யாய்சிற் றுயிர்க்கிரங்கிக்
காய்சின ஆலமுண் டாய்அமு துண்ணக் கடையவனே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்துதேவர்களுக்கு அருள் புரிந்த தன்மை உரைத்து தனக்கும் அருள் புரிய வேண்டும் என உரைக்கும் பாடல்.

பதவுரை

செந்நிறமுடைய பவளமலை போன்ற ஒளியுடைய திருமேனியனே, என்னை நினக்கு அடிமையாக ஆக்கிக் கொண்டவனே! தேவர்கள் ஆகிய சிறு உயிர்களுக்கு மனம் இரங்கி அவர்கள் அமுது உண்ணுதல் பொருட்டு எதிர்படுவோரைக் கொல்லும் வேகத்தோடு எழுந்த அமுதத்தினை உண்டாய்; கடைப்பட்டவனாகிய நான் உன்னை இகழ்ந்து பேசினாலும், புகழ்ந்து வாழ்த்தினாலும் எனது குற்றத்தின் பொருட்டே என்று எண்ணி மனம் வாடி துக்கப்படுவேன்; அவ்வாறு துக்கம் கொள்ளும்  என்னை விட்டுவிடுவாயோ!

விளக்க உரை

  • ஏசினும் – உன்னை ஏசினாலும் உன்னிடம் கொண்டிருந்த அன்பின் அடிப்படையிலும் சொல் அளவிலும் இன்றி மனதளவில் இல்லை என்பது உட்பொருள். ( ‘வெங்கரியின் உரிப்பிச்சன்’ என்பது முந்தைய பாடல்களில் பாடப்பெற்றமை காண்க)
  • வேசறு வேனை – நின் அடியார் கூட்டத்தோடு செல்லாமல் இந்த உடலுடன் தங்கிவிட்ட தவற்றை நினைத்து மனக் குழைந்து வருந்துதல் (வேசறுதல் – வருந்துதல் )
  • அமுதை கடைய முற்பட்ட தேவர்கள் நஞ்சை கண்டு தவித்து நின்னை சரண் அடைந்த பொழுது அவர்களுக்கு மனம் இரங்கி அவர்களை மன்னித்து ஏற்றுக் கொண்டாய், அவ்வாறான கருணைக் கடலான நீ என்னுடைய சிறு பழைய பிழைகளை நினைத்து வருந்துபவனாகிய என்னையும் ஏற்றுக் கொண்டு அருள் புரிதல் உன்னுடைய கடமை அன்றோ
  • கடையவன் – சங்காரத்தில் உலகம் அழியும் போதும் அழியாது இருப்பவன் (தோன்றாப் பெருமையனே என்பது வெளிப்படை)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 9 (2019)


பாடல்

அரக்க னையல றவ்விர லூன்றிய
திருத்த னைத்திரு வண்ணா மலையனை
இரக்க மாயென் உடலுறு நோய்களைத்
துரக்க னைத்தொண்ட னேன்மறந் துய்வனோ

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர் 

கருத்துஇராவணனுக்கு வேண்டி நின்றப் பின் அருளிய திறத்தையும், வேண்டாத பொழுதும் தன்னிடத்தில் இரக்கம் கொண்டு அருளிய திறத்தையும் திருநாவுக்கரசர் உரைத்தப் பாடல்.

பதவுரை

அரக்கன் ஆன இராவணன் வாய் விட்டு அலறுமாறு அழகிய திருவிரலை ஊன்றியவனும், எஞ்ஞான்றும் மாறுபாடு இல்லாமல் இருப்பவனும், திருவண்ணாமலை வடிவமாக இருப்பவனும், இரக்கம் கொண்டு என் உடல் பெற்ற நோய்களைத் துரத்திய அருளாளனுமாகிய பெருமானைத் தொண்டுபுரியும் அடியேன் மறந்து உய்தலும் கூடுமே?(இல்லை என்பது மறை பொருள்)

விளக்க உரை

  • அரக்கன் – இராவணன்
  • திருத்தன் – மாறுபடாதவன், செய்யன், திருந்தும்படி செய்தவன்
  • இரக்கமாய் – இரங்கி அருளி( செருக்கு நீங்கிப் பண் இசைத்து அருள் பெற்றது)
  • துரக்கன் – துரத்தியவன்
  • உரக்கன் – வலிமையுள்ளோன்
  • உடலுறு நோய் ஒன்னு ஆன போதிலும் அதனால் பெற்ற வருத்தம் பல வகைப் பட்டமையின் காரணமாக நோய்களை என்றார் என்று சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சஞ்சீதம் பிராப்தம் ஆகாமியம் ஆகிய மூவினைகளையும் அழித்து அதன் மூலம் உடல் நோயினை நீங்குபவன் என்பதான பொருளும் அறியப்படும். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 8 (2019)


பாடல்

முன்னவன் எங்கள்பிரான் முதல்
   காண்பரி தாயபிரான்
சென்னியில் எங்கள்பிரான் திரு
   நீல மிடற்றெம்பிரான்
மன்னிய எங்கள்பிரான் மறை
   நான்குங்கல் லால்நிழற்கீழ்ப்
பன்னிய எங்கள்பிரான் பழ
   மண்ணிப் படிக்கரையே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்துஈசனின் எண் குணங்களில் சிலவற்றை சொல்லியும், அவன் சில தன்மைகளையும் கூறி அவன் உறையும் திருத் தலத்தைப் பற்றி உரைக்கும் பாடல்.

பதவுரை

சங்காரம் முடிந்து சிருஷ்டி தொடங்குவதற்கு முன் உள்ளவனும், தனக்கு முன்னால் உலகம் மற்றும் உலகப்  பொருளும் படைக்கப்படவில்லை எனும் தன்மை கொண்டு எங்கள் இறைவன் ஆனவனும், சென்னி எனப்படுவதும் தலை எனப்படுவதும் ஆன உச்சியில் இருக்கும் எங்கள் தலைவன் ஆனவனும், அழகிய நீல கண்டத்தை உடைய எங்கள் இறைவன் ஆனவனும், என்றும் நிலை பெற்ற எங்கள் தலைவனும், நான்கு மறைகளையும் கல்லால மர நிழலில் இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்தவனும் ஆன எங்கள் இறைவன் இறைவன் எழுந்தருளியிருப்பது  ‘திருப்பழமண்ணிப்படிக்கரை’ என்னும் திருத்தலமே.

விளக்க உரை

  • பிரான் – தலைவன், தேவன், இறைவன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 6 (2019)


பாடல்

பெற்றதா என்றுன்னை மெத்தவும் நம்பிநான்
   பிரியமாயிருந்த னம்மா,
மெத்தனம் உடையை என்றறியாது நானுன்
   புருஷனை மறந்தனம்மா,
பித்தனாயிருந்து முன் சித்தமிரங்காமல்
   பராமுகம் பார்த்திருந்தால்,
பாலன் யானெப்படி விசனமில்லாமலே
   பாங்குட னிருப்பதம்மா,
இத்தனை மோசங்களாகாது ஆகாது
   இது தர்மமல்ல வம்மா
எந்தனை ரக்ஷிக்க சிந்தனைகளில்லையோ
   யிதுநீதி யல்லவம்மா,
அத்தி முகனாசையாலிப் புத்திரனை மறந்தையோ
   அதை யெனக்கருள் புரிகுவாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
   அம்மை காமாட்சி உமையே

காமாட்சியம்மை விருத்தம்

கருத்துஅன்னையின் குழந்தை ஆகிய தன்னிடத்தில் அன்பு இல்லாமலும், பாரா முகம் கொண்டு இருப்பதையும்  உரைத்து தன் துக்கம் போக்க வேண்டி நிற்கும் பாடல்.

பதவுரை

அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே! நீ பெற்ற தாய் என்று உன்னை மிகவும் நம்பி அதன் காரணமாக உன்னிடத்தில் பிரியமாக இருந்தேன்; என் மீது அக்கறையும் சிரத்தையும் இல்லாமல் இருப்பதை அறியாது உன்னுடைய பதியானவனும் புருஷன் ஆனவனும் ஆன ஈசனை மறந்துவிட்டேன்;உன்னிடத்தில் பக்தி கொண்டு அதன் காரணமாக பித்தனான என்னைக் கண்டு மனமிரங்காமல் என்னைக் கண்டும் காணாமல் இருந்தும் பாராமுகமும் கொண்டு இருந்தால் குழந்தை ஆகிய யான் எவ்வாறு துக்கம் கொள்ளாமல் நன்றாக இருக்க இயலும்; நீ இந்த அளவு மோசம் செய்வது ஆகாது; இது தர்மமும் ஆகாது; என்னை காப்பதன் பொருட்டான சிந்தனைகளே உனக்கு இல்லையோ; மூத்தவன் என்பதால் அத்தி முகம் கொண்டவனான கணபதி இடத்து ஆசை வைத்து இருப்பதால் புத்திரனாகிய எனை மறந்தாயோ; அவ்வாறான அன்பினை எனக்கும் அருள் புரிவாயாக.

விளக்க உரை

  • மெத்தனம் – அக்கறை அல்லது சிரத்தையின்றி மெதுவாக, மந்தமாகச் செயல்படல்
  • விசனம் – துக்கம், விடாமுயற்சி, வேட்டை முதலியவற்றில் மிக்க விருப்பு, பேராசை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 3 (2019)


பாடல்

இயலுமாறெனக் கியம்புமின்னிறை வன்னுமாய்நிறை செய்கையைக்
கயனெடுங்கண்ணி னார்கள்தாம்பொலி கண்டியூருறை வீரட்டன்
புயல்பொழிந்திழி வானுளோர்களுக் காகஅன்றயன் பொய்ச்சிரம்
அயனகவ்வ தரிந்துமற்றதில் ஊணுகந்த வருத்தியே

மூன்றாம் திருமுறை –  தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துஉலகமாகவும், உலகப் பொருள்கள்கள் அனைத்திலும் உறையும் ஈசன் ப்ரமன் தலை கொய்து மண்டையோட்டில் யாசித்து உண்ணுவதை பழிப்பது போல் சிறப்பித்துக் கூறியது.

பதவுரை

கயல் மீன் போன்ற நீண்ட கண்களையுடைய மகளிர் வாழ்கின்ற திருத்தலம் ஆனதும், பொலிவு உடையதும் ஆன திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதனாகிய இறைவன் உலகினுக்கும், உயிருக்கும்  விரும்பியவற்றை அளிக்கும் தலைவனாய் இருப்பதோடு, உலகப்பொருள்களிலும், அனைத்து உயிர்களிடத்தும் அவைகளோடு கலந்து வியாபித்து நிற்கும் தன்மையை கொண்ட போதிலும் வானில் இருந்து உலகத்தில் மழை பொழியச் செய்து நலம்புரியும் தேவர்களுக்காகப் பிரமனுடைய பொய்யானதான ஐந்தாவது சிரத்தை அயலார்கள் பரிகசிக்கும்படி நகத்தால் அரிந்து, அந்த மண்டை ஓட்டில் பிச்சையேற்று உண்ணும் விருப்பம் கொண்டது என்ன காரணத்தால் என்று மெய்யடியார்களே எனக்கு இயன்ற அளவு இயம்புவீர்களாக.

விளக்க உரை

  • இறைவனுமாய் நிறைசெய்கையை – உலகினுக்கும் உயிருக்கும் தலைவனுமாய் நின்று, அவற்றுள் வியாபித்து நிறைந்து நின்ற செய்கையை பற்றியது.
  • புயல் – மேகம்.
  • பொழிந்து – மழைபோல் பெய்து
  • வானவர்களுக்காக அயன்தலையைக் கொய்தது – படைத்தலுக்கு உரித்தான கர்த்தாவின் தலையைப் கிள்ளி அதன் வலிமையின்மையையும், படைப்பவனான ப்ரமனை படைப்பவனாகிய பழையவன் இவனே என வானவர் தெளிவதற்காகவும் தலையை கொய்தது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 28 (2019)


பாடல்

ஈறாகி அங்கே முதல்ஒன்றாய் ஈங்கிரண்டாய்
மாறாத எண்வகையாய் மற்றவற்றின்-வேறாய்
உடனாய் இருக்கும் உருவுடைமை என்றும்
கடனாய் இருக்கின்றான் காண்

திருநெறி 6 – திருக்களிற்றுப் படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்

கருத்துவினைப்பட்ட  ஆன்மாக்கள் மலபரிபாகம் பெறுவதன் பொருட்டு அவர்களுக்கு அருளுதல் பொருட்டு சிவன் உருவம், அருவம், அரு உருவம் கொண்டிருந்து அருளும் முறை உரைக்கும் பாடல்.

பதவுரை

சங்கார காலத்திலே உயிர்கள் ஒடுக்கம் அடையும் போது அதற்கு காரணமாக இருந்து அதன் முடிவாக இருக்கிறான்; உலகம் படைக்கப்படும் காலத்தில் தான் முதல்வனாக இருந்தும் அதனில் இருந்தும் வேறுபட்டவனாகவும் இருக்கிறான்; எக்காலத்திலும் மாறாத எண்குணங்களான தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கி நிற்றல், இயற்கை உணர்வினன் ஆதல், பேரறிவுடைமை அல்லது முற்றறிவுடைமை, வரம்பில்லாத ஆற்றல் உடைமை, வரம்பில்லாத அருள் உடைமை, வரம்பில்லாத இன்ப வடிவினன் ஆதல் ஆகியவை கொண்டும் இருக்கின்ற போதிலும் அவற்றில் இருந்து வேறுபட்டவனாக அதன் உடனாகவும், உருவம் கொண்டும் என்றும் வினைபட்ட ஆன்மாக்கள் மலபரிபாகம் பெறுவதன் பொருட்டு அவர்களுக்கு அருளுதலை கடனாக உரியவனாகவும் இருக்கிறான்.

விளக்க உரை

  • சிவன் உலகத்தோடு ஒன்றாய் வேறாய், உடனாய் இருக்கின்றான் என்று தொன்றுதொட்டுக் கூறிவருதலும், முதல்வனாகிய ஈசனிடத்து இம்மூன்று தன்மைகளும் ஒருங்கு கூடியிருத்தல் தெளிவாகும்; சங்கார காலத்திலே உருவமின்மை கொண்டும், சிருட்டி காலத்திலே உருவம் கொண்ட அட்டமூர்த்தியாயும், இவற்றுக்கெல்லாம் வேறாயும் இவற்றுக் கெல்லாம் உடனாயும் இருக்கின்ற அருள் வடிவு கொண்டு கர்த்தாவாகி எக்காலமும் இவ்வாறு நிகழ்த்துதலை முறைமையாகக் கொண்டிருப்பான் எனும் விளக்கமும் பெறப்படும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 27 (2019)


பாடல்

முன்னின் றருளும் முடிகின்ற காலத்து
நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும்
பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும்
முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துஈசன், பிற ஆன்மாக்களுக்கு அருளிய முறையில் தனக்கு அருளிய திறன் உரைத்தப் பாடல்.

பதவுரை

உயிர்களுக்கு நல்வினை, தீவினை ஆகிய இருமைகள் நீங்கிய காலத்தில் அவ்வாறு நீங்கப் பெற்ற உயிர்களுக்கு வினையில்லாத நன்மை பொருந்தியவனாய் உயிர்க்கு உயிராய் இருந்தே அருளை வழங்குவனும்,  அதன் பயனாக முடிவில் பிறவியை நீக்கிவிடுவனும், யாவர்க்கும் அருள் வழங்கிய பின்னும் அவ்வருள் நிலையினின்றும் வழுவாதவாறு பாதுகாப்பனும் ஆனவனான சிவன் அடியேனுக்கு என் கண்முன் நின்று முத்தியை அளித்து அருளினான்.

விளக்க உரை

  • முன்னின்று அருளுதல் – பிரளயாகலர், சகலர் ஆகியோருக்கு அருளும் முறை (ஆகமங்கள் வரையரையின் படி) – இயற்கை வடிவோடு வெளி நிற்றல், குருவாய் வந்து, நோக்கல், தீண்டல், உரைத்தல் முதலியவைகளைச் செய்தல். (ஆகமங்கள் வரையறுத்து கூறியது போல் பரிபாக முதிர்ச்சி முன்வைத்து மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலருக்கும், மும்மலங்களுள் ஆணவம், கன்மம் என்னும் இரண்டினையுடைய ஆன்மாக்கள் ஆகிய பிரளயாகலருக்கும், பாசப்பற்று நீங்காத மும்மலமுடைய ஆன்மாக்கள்ஆகிய சகலருக்கும் அருளிய திறம் போல் தனக்கும் அருளினான் என்று உரைத்தவாறு.
  • உலகு – உயிர்தொகுதி
  • நடுவுயிர் – உள்ளுயிர்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 23 (2019)


பாடல்

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது

தனிப்பாடல் திரட்டு – ஔவையார்

கருத்துஒவ்வொரு உயிருக்குமான தனித்தன்மையை விளக்கி எவரும் வலிமை உடையவர்கள் எனக் கூறக்கூடாது என்பதை வலியுறுத்தும் பாடல்.

பதவுரை

இருப்பிடம் அமைப்பதில் வானில் பறக்கக்கூடிய தூக்கணாங்குருவி ஒருமுறையில் கூடு கட்டும்; புவியினில் வசிப்பதான கறையான்  வேறு முறையில் புற்று கட்டும்;  வீட்டில் இருக்கக்கூடிய சிலந்தி வலையை வேறு முறையில் அமைக்கும்; எல்லாவற்றையும்  எல்லாராலும் செய்யமுடியாது. எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிதாக இருக்கும். எனவே யாமே பெரிய வலிமை உடையவர்கள் என்று வலிமை முன்வைத்து உரைப்பதும், நானே வல்லமை உடையவன் என்று யாரும் பெருமை கொள்ளக் கூடாது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 22 (2019)


பாடல்

மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ
மணிமந்த்ரகாரி நீயே
மாயாசொரூபி நீ மகேஷ்வரியுமான நீ
மலையரசன் மகளான நீ
தாயே மீனாக்ஷி நீ சற்குணவல்லி நீ
தயாநிதி விசாலாக்ஷியும் நீ
தாரணியில் பெயர் பெற்ற
பெரியநாயகியும் நீ
அத்தனிட பாகமதில் பேறு பெற
வளர்ந்தவளும் நீ
ப்ரணவ சொரூபி நீ ப்ரஸன்னவல்லி நீ
பிரிய உண்ணாமுலையும் நீ
ஆயி மகமாயி நீ ஆனந்தவல்லி நீ
அகிலாண்டவல்லி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே

காமாட்சியம்மை விருத்தம்

கருத்து – அனைத்து வடிவங்களில் இருக்கும் அன்னை காமாட்சி அன்னையே எனவும், அவளது சில பெருமைகளையும் உரைக்கும் பாடல்.

பதவுரை

அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே!  நீ மாயவன் ஆகிய திருமாலின் தங்கை ஆனவளாகவும், தரும தேவதை ஆன பார்வதி ஆனவளாகவும், சரீர ரக்ஷைக்கு உரித்தான மணி மந்திரம் ஆனவளாகவும், மாயையின் சொரூபமாகவும், மகேஷ்வரனின் துணையாக இருக்கூடியவளான மகேஷ்வரியும் ஆனவளாகவும், மலையத்துவஜன் எனப்படும் மலையரசன் மகளாக இருப்பவளும், அன்னையான மீனாட்சி ஆனவளாகவும், நல்ல குணங்கள் எல்லாம் ஒருங்கே அமையப் பெற்றவளாகவும்,  விரும்புவர்கள் விரும்பியவற்றை எல்லாம் ஒருங்கே அளிப்பவளாகவும்,  இந்த உலகில் பெரிய நாயகி என்று பெயர் பெற்றவளாகவும், மூத்தோனும், மிக உயர்ந்தனுமான சிவன் இடத்தில் இடப்பாகம் எனும் பேறு பெற்று வளர்ந்தவளாகவும், பிரணவ வடிவம் ஆனவளாகவும், அடியவர்களின் அனைத்து சிந்தனைகளுக்கும் அந்த வினாடியில் பொருள் உரைப்பவளாகவும், அன்னை ஆகிய உண்ணாமுலை ஆனவளாகவும், அன்னை ஆகிய மகமாயி ஆனவளாகவும், ஆனந்த வல்லி ஆனவளாகவும், அகிலாண்டவல்லி ஆனவளாகவும் இருக்கிறாய்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 21 (2019)


பாடல்

பூதமும் கரணம் பொறிகள்ஐம் புலனும்
     பொருந்திய குணங்கள்ஒர் மூன்றும்
நாதமும் கடந்த வெளியிலே நீயும்
     நானுமாய் நிற்கும்நாள் உளதோ
வாதமும் சமய பேதமும் கடந்த
     மனோலய இன்பசா கரமே
ஏதும்ஒன்று அறியேன் யாதுநின் செயலோ
     இறைவனே ஏகநா யகனே

பட்டினத்தார்

கருத்துபுறக்கருவிகள் செயல் அற்று ஈசனுடம் தனித்திருக்கும் நிலை வேண்டும் எனும் பாடல்.

பதவுரை

இறைவனாகவும், எல்லாம் கடந்த ஒன்றாகவும் இருக்கும் நாயகனே, காற்றினை குறிக்கும் நாடிகளில் ஒன்றான வாதமும், நிலையை காட்ட வழி செய்யும் சமயத்தில் பாகுபாடு கொள்ளாமல் மன ஒடுக்கம் கொண்டு  இருக்கும் இன்பக் கடலே! மண், நீர், அனல், வளி, வான். புலன் ஆன பூதமும்,   மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனும் அந்தக்கரணங்கள் நான்கும், மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பொறிகள் ஐந்தும் இவற்றுடன் பொருந்திய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனும் அந்தக்கரணங்கள் நான்கும், சாத்விகம், இராஜசம், தாமசம்  எனும் முக்குணங்களும், ஈசனின் நவபேதமூர்த்தங்களுள் ஒன்றான நாதமும் கடந்த வெளியிலே நீயும் நானும் மட்டும் தனித்திருக்கும் நாள் உளதோ? எதுவும் யான் அறியவில்லை.  இவை அனைத்தும் உனது செயல்களே.

விளக்க உரை

  • நாதம் – சத்தம், வாத்திய ஓசை, இசைப்பாட்டு, அரைவட்டமான மந்திரலிபி, சிவபிரானது நவபேத மூர்த்தங்களுள் ஒன்று, நாதக்குமிழிலுள்ள குமிழ், சோணிதம், தலைவனையுடைமை. வீடு நாதமற்றுக் கிடக்கிறது.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 20 (2019)


பாடல்

எடுத்த தேகம் பொருளாவி மூன்றும்நீ
எனக்கொன் றில்லை எனமோன நன்னெறி
கொடுத்த போது கொடுத்ததன் றோபினுங்
குளறி நானென்று கூத்தாட மாயையை
விடுத்த வாறுங்கண் ணீரொடு கம்பலை
விலகு மாறுமென் வேட்கைப்ர வாகத்தைத்
தடுத்த வாறும் புகலாய் சிரகிரித்
தாயுமான தயாபர மூர்த்தியே

தாயுமானவர் திருப்பாடல்கள்

கருத்துதன்னைக் கொடுத்த பின்னும் தொடரும் சில தருணங்களைக் குறிப்பிட்டு அவைகளை நீக்க வேண்டி விண்ணப்பித்தப் பாடல்.

பதவுரை

மலைகளுக்குள் தலையானதாக இருக்கும் திருச்சிராப்பள்ளி திருத்தலத்தில் வீற்றிருந்து அருளும் தாயுமானத் தண்ணளிச் செல்வரே! மோன குருவாய்த் தாங்கள் எழுந்தருளி வந்துடன் உண்மையை உணர்த்தி நன்னெறி கொடுத்தபோது அடியேன் வினைகள் பற்றி எடுத்த இரவல் உடம்பும், பொருளும், ஆவியும் ஆகிய மூன்றும் நின்பால் ஒப்புவிக்கப்பட்டது அல்லவோ? அவ்வாறு உனக்கென்று கொடுத்தப் பின்னும் இன்னும் விலகாமல் இருக்கும் நானென்று உரிமையுடம் முதன்மையும் கொண்டு குளறிக் கூத்தாடுமாறும், மயக்கும் வகையிலான மாயையை கொடுத்த வண்ணமும், கட்டுக்கு அடங்காக் கண்ணீரும், ஒடுங்காத நடுக்கமும் நீக்கி, அடியேனின் வேட்கை வெள்ளத்தினைத் தடுக்குமாறு திருவாய் மலர்ந்து அருள்வாயாக.

விளக்க உரை

  • உடல் பொருள் ஆவி மூன்றையும் தாயுமானவரிடம் ஒப்புவித்த நிலை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 19 (2019)


பாடல்

மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை
கிரணப் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள
சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா
பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்துமுருகப் பெருமானின் பெருமைகளைக் கூறி அவரின் வேலும் மயிலும் இருப்பதால் அடியார்களான தங்களுக்கு மரணம் இல்லை என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

கிண் கிணிகள் ஒலிக்கும் படியான திருவடிகளை உடையவரும், இந்திரனின் துணைவியான சசி தேவி எனும் இந்திராணிக்கு மங்கல நாணினைக் காப்பாற்றி அருளியவரும் கருணைக்கு உறைவிடமானவரும், அறிவு வடிவமானவரும் ஆன தேவ சூரியனே! எந்நாளும் எங்களுக்கு துணையாக ஒளி படைத்த மயிலும் வேலும் இருப்பதால் துயரம் தரதக்கதான இறப்பு என்னும் அபாயம் தேவரீரின் அடியார்களாகிய எங்களுக்கு என்றும் இல்லை.

விளக்க உரை

  • ப்ரமாதம் – துயர நிகழ்வு
  • சசிதேவி – இந்திராணி
  • ரஷாபரணம் – ரஷையைத் தாங்கியவன்
  • கிருபாகரன் – கருணை உடையவன்
  • சுரபாஸ்கரனே – தேவர்களுக்கு ஒளி அளிப்பவன்
  • மரணப்ர மாதம் – மரண மயக்கம்
  • கிரணம் – ஓளியுள்ள
  • கலாபி – மயில்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 18 (2019)


பாடல்

வாகை விரிந்துவெள் நெற்று ஒலிப்ப,
   மயங்குஇருள் கூர்நடு நாளை, ஆங்கே
கூகையொ டுஆண்டலை பாட, ஆந்தை
   கோடுஅதன் மேல்குதித்து ஓட, வீசி
ஈகை படர்தொடர் கள்ளி நீழல்
   ஈமம் இடுசுடு காட்டு அகத்தே
ஆகம் குளிர்ந்துஅனல் ஆடும் எங்கள்
   அப்பன் இடம் திரு ஆலங் காடே

பதினொன்றாம் திருமுறை – மூத்த திருப்பதிகம் – காரைக்காலம்மையார்

கருத்துசுடுகாட்டின் காட்சியினை விளக்கி அதில் ஆடுகின்றவன் என் அப்பன் ஈசன் எனவும் அப்படிப்பட்டவனுக்கு உரித்தான இடம் திருவாலங்காடு எனும் திருத்தலம் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

காட்டில் இருக்கும் வாகை மரமானது விரிந்து தழைத்து அதன் வெண்மையான  நெற்று ஒலிக்கக் கூடியதும், மயக்கம் தரும் இருளோடு பகலோடு வந்து பொருந்தியதான நள்ளிரவு நேரத்தில், கோட்டானுடன் ஆண்தலைப் போன்ற தலையுடைய ஒரு புள்ளினம் ஆடவும், ஆந்தையானது அவற்றை எல்லாம் விரட்டி ஓடவும்,  கொடிகள் படரந்துள்ளதும், கள்ளி மரத்தின் நிழலை உடையதும், பிணத்தைச் சுட்டு எரிக்கின்ற சுடுகாட்டிலே இருப்பதும்,  தனது திருமேனியானது குளிர்ந்த நிலையிலேயே அனலில்  ஆடுகின்றவனுமான எங்களது அப்பனுக்கு உரித்தான இடமானது திருவாலங்காடு எனும் திருத்தலமாகும்.

விளக்க உரை

  • ஆண்டலை – கோழி, ஆண்மகன் தலபோன்ற தலையுடைய ஒருபுள், பூவாது காய்க்கும் மரம்
  • ஆகம் – உடல், மார்பு, மனம், சுரை
  • கள்ளிக் கவடு – கள்ளி மரத்தின் கிளைகள்
  • மயங்கு இருள் – மாலைக் காலத்தில்
  • கோடு – மரக்கிளை
  • கூகையும், ஆண்டலையும் கூவக் கேட்டு ஆந்தை மரக் கிளையின்மேல் இடம் பெயர்ந்து ஓடுகின்ற காட்சி அமைப்பு
  • வீசுதல் – எழுச்சியுறுதல்
  • ஈமம் – பிணஞ்சுடும் விறகு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 17 (2019)


பாடல்

மட்டவிழ் தாமரை மாது நல்லாளுடன்
ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்ட வல்லார் உயிர் காக்க வல்லாரே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – சிவன் ஆதி மூர்த்தமாகிய  அர்த்தநாரீசுவரர் ஆன உபாயத்தை சிவஞானிகளைத் தவிர்த்து ஏனையோர் அறிந்து தெளிய மாட்டார்கள் என்பதை கூறும் பாடல்.

பதவுரை

பூரண சுத்த சத்தனாக வடிவத்துடனும் யாதுடனும் ஒட்டி இராமலும் தனித்து நிற்கின்ற பரம்பொருள், எல்லா உயிர்களும் இன்பம் தூய்த்து மகிழும் பொருட்டு,  தேன் சொரியும் தாமரை வடிவத்தில் உடனாகிய அம்மையுடன் எக்காலத்திலும் பிரிவின்றி ஒட்டி நிற்கின்ற வடிவமாகியதும் ஆதி மூர்த்தமாகியதுமான  அர்த்தநாரீசுவரர் ஆன உபாயத்தை சிவஞானிகளைத் தவிர்த்து ஏனையோர் அறிந்து தெளிய மாட்டார்கள்; அவ்வாறு அறிந்தவர்கள், பரநாதத்தின் விட்ட எழுத்தாகிய உகாரத்துடன் விடாத எழுத்தாகிய பரவிந்துவின் அகாரத்துடன் இணைத்து ஒன்றாகக் கட்டி அ-உ-ம் எனும் ஓங்காரத்தின் சொரூபம் காணவல்லவர்களாக இருந்து, உயிர் அற்பமாக பிறவிக்கடலில் வீழ்ந்து இறந்துவிடாது நெடுங்காலம் வாழும்படி காக்கவும் வல்லவராவர்.

பதவுரை எழுத உதவி செய்த ஐயா. திரு. நாராயணசுவாமி (திருவாடுதுறை ஆதினம்)  அவர்களுக்கு என் நன்றிகள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 16 (2019)


பாடல்

மூலம்

சூலம் பிடித்தெம பாசஞ் சுழற்றித் தொடர்ந்துவருங்
காலன் தனக்கொரு காலுமஞ் சேன் கடல் மீதெழுந்த
ஆலங் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலுந் திருக்கையு முண்டே நமக்கொரு மெய்த்துணையே

சொற்பிரிப்பு

சூலம் பிடித்து எம பாசம் சுழற்றித் தொடர்ந்துவரும்
காலன் தனக்கு ஒருகாலும் அஞ்சேன்; கடல்மீது எழுந்த
ஆலம் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலும் திருக்கையும் உண்டே நமக்கு ஒரு மெய்த்துணையே

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்து – முருகப் பெருமானின் வேலாயுதம், திருக்கரமும் துணையாக இருப்பதால் சூலாயுதத்தையும், பாசக் கயிற்றை கொண்டு வரும் காலனுக்கு அஞ்சமாட்டேன் எனும் பாடல்.

பதவுரை

பாற்கடலை கடையும் போது  தோன்றிய ஆலகால விடத்தை உண்டு உயிர்களை காத்து அருளிய சிவபெருமானின் திருக்குமாரனாகிய ஆறுமுகப் பெருமானுடைய வேலாயுதமும், அபயம் அளிப்பதான திருக்கரமும் நமக்கு ஒப்பற்ற  உண்மைத் துணையாக உளதால் சூலாயுதத்தைக் கையில் பிடித்துக் கொண்டும், பாசக் கயிற்றைச் சுழற்றிக் கொண்டும்  உயிர்களைப் பின்தொடர்ந்து வந்து அவர்களின் உயிர்களை எடுக்க வருகின்ற காலனுக்கு  அடியேன் ஒருபோதும் அஞ்சமாட்டேன்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 15 (2019)


பாடல்

கெதியாக உந்தனைக் கொண்டாடி நினதுமுன்
குறைகளைச் சொல்லி நின்றும்,
கொடுமையா யென்மீதில் வறுமையை வைத்துநீ
குழப்பமா யிருப்ப தேனோ
சதிகாரி என்றுதான் அறியாமல் உந்தனைச்
சதமாக நம்பினேனே
சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க
சாதக முனக் கிலையோ
மதிபோல வொளியுற்ற புகழ்நெடுந் கரமுடைய
மதகஜனை யீன்ற தாயே
மாயனிட தங்கையே பரமனது மங்கையே
மயானத்தில் நின்ற வுமையே
அதிகாரி யென்றுதா னாசையாய் நம்பினேன்
அன்பு வைத்தென்னை யாள்வாய்,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே

காமாட்சியம்மை விருத்தம்

கருத்துஅன்னையின் பெரும் கருணைகளை சொல்லி தன்னை ரட்சிக்க ஆளும் அதிகாரம் உடையவள் என்று கூறி இன்னும் தன்னை ரட்சிக்க வரவில்லை என்பதை கூறும் பாடல்.

பதவுரை

அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே, என் அன்னையே, சந்திர ஒளியினைப் போன்றதும் நீண்டதும் நெடுங்கரம் உடையதும் ஆன ஆனைமுகனை ஈன்ற அன்னையே, மாயன் எனப்படுவதாகிய திருமாலின் தங்கையே, பரமனுக்கு உரித்தானவளே, சுடுகாடு எனப்படும் மயானத்தில் நின்ற உமையே! உன்னை மட்டுமே கதியாக கொண்டு உன்னைக் கொண்டாடியதுடன் உன்முன் எனது குறைகளைச் சொல்லி நின்றும் கொடுமை செய்யத் தக்கதான வறுமையை எனக்கு தந்ததும் , எனக்கு அருள் புரியாமல் குழப்பம் கொண்டிருப்பது ஏனோ? அனைத்தையும் அறிந்து என் மீது கருணை காட்டாமல் இருப்பதால் நீ சதிகாரி என்பதையும் அறியாமல் உன்னை முழுமையாக நம்பினேன்; கொஞ்சம் கருணை கொண்டு என் நிலை அறிந்து என்னை ரட்சிக்க உனக்கு மனம் வரவில்லையோ? என்னை வழிநடத்தும் அதிகாரம் உடையவள் என்று ஆசை வைத்து உன்னை நம்பினேன், என்னிடத்தில் அன்பு கொண்டு என்னை ஆள்வாய்.

விளக்க உரை

  • சதிகாரி என்றுதான் அறியாமல் உந்தனைச் சதமாக நம்பினேனே என்பதற்கு பதிலாக சில இடங்களில் விதியீது, நைந்துநான் அறியாம லுந்தனைச் சதமாக நம்பி னேனே என்று பதிக்கப்பட்டு இருக்கிறது. சதிகாரி என்பதை ஏற்காமல் இவ்வாறு மாற்றப்பட்டு இருக்கலாம். அது அன்னையிடம் உள்ள அளவற்ற அன்பினால் சதிகாரி என்று அழைத்து இருக்கலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • சதிக்கு பார்வதி எனவும் காரிக்கு கருப்பானவள் எனவும் பொருள் கொண்டு உரைப்பவர்களும் உளர். இத்தகைய கருமை நிறம் கொண்டவளாகிய உன்னைப் போய் நம்பினேனே! பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ என்று அதிகாரமாய் கேட்கிறார் என்று கூறுபவர்களும், உன் உடலில் பாதியாய் விளங்கும் ஈசனை மறந்து, உன்னை மட்டுமே சதமாக நம்பினேனே, என்னைச் சொல்லவேண்டும் என்றும் சில இடங்களில் கவித்துவமாக விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 14 (2019)


பாடல்

சங்கிரண்டு தாரையொன்று சன்னல்பின்னல் ஆகையால்
மங்கிமாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை
சங்கிரண்டை யும்தவிர்த்து தாரையூத வல்லிரேல்
கொங்கை மங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே

சிவவாக்கியர்

கருத்துசுழுமுனை வழியே வாசி பற்றி நிற்பவர்கள் ஈசனும் ஒன்றாக கூடி வாழும் தன்மை உடையவர்கள் ஆவார் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டு இருப்பதான இடகலை, பிங்கலை எனப்படும் சங்குகள் இரண்டு கொண்டும் சுழுமுனை எனப்படுவதான தாரை கொண்டும் இருப்பதை அறியாமல் உலகில் எத்தனையோ மானிடர்கள் நெருப்பால் சுடப்பட்டு அழிகின்றனர். அவ்வாறு இல்லாமல் இடகலை, பிங்கலை இரண்டையும் தவிர்த்து சுழுமுனை எனப்படுவதான தாரை கொண்டு வாசி பற்றி அதை ஊத வல்லவர்கள் உலகிற்கு அமுது அளிக்கும் அன்னையுடன் கூடியவரான பாகம் உடையவராகிய ஈசனும் ஒன்றாக கூடி வாழ இயலும்.

விளக்க உரை

  • அங்கி – ஆடை, மேலாடை, நெருப்பு, அக்கினி
  • மாளுதல் – சாதல், அழிதல், கழிதல், இயலுதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 13 (2019)


பாடல்

இப்படி யன்றிக் கன்மம் உயிர்இறை வேறுண் டென்று
செப்பிடும் அவர்க்கு மண்ணோர் செய்திடுங் குற்ற மென்னோ
ஒப்பிலா மலடி பெற்ற மகனொரு முயற்கொம் பேறித்
தப்பில்ஆ காயப் பூவைப் பறித்தமை சாற்றி னாரே

திருநெறி 2 – பரபக்கம் – உலகாயதன் மதம் – சிவஞான சித்தியார்

கருத்துஉலகாயர்கள் கொள்கையினை உவகை காட்டி விளக்கி அதை மறுதலித்து ஆன்மா உண்டு எனவும், அதை இயக்க கர்த்தா உண்டு எனவும் கூறும் பாடல்.

பதவுரை

இவ்வாறாக பூதக்கூட்டத்தினால் உயிர் உறையும் உருக்கள்  வாயுக்களுடன் சேர்ந்து முன் ஜென்மங்களில் செய்த கர்மத்தால் பின் தொடரும் என்றும் இதை அனுபவிக்க ஆன்மா உண்டு எனவும் இதனை கூட்டுவிப்பவன் ஆகிய ஒரு கர்த்தா உண்டு எனவும் சமயவாதிகள் கூறுவார்கள். இதனை மறுத்து சமயவாதிகளை மயக்கச் உலகாயர்கள் கூறுவது என்னவெனில் ஒப்புமை செய்ய இயலாத  மலடி பெற்ற மகன் ஒரு முயலின் கொம்பிலே ஏறி ஆகாயத்தில் பூத்த பூவைத் தவறின்றிப் பறித்தான் எனும் தன்மையை ஒத்தது.

விளக்க உரை

  • உலகாயர்கள் – பூதமே தெய்வம், பூதக்கூட்டத்தின் குறைவே கன்மம், பூதக் கூட்டத்தின் நிகழும் உணர்வே ஆன்மா; இவ்வாறு அன்றி வேறு தெய்வமும் கன்மமும் ஆன்மாவுமில்லை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 12 (2019)


பாடல்

சித்திகள் எட்டொடும் திண்சிவ மாக்கிய
சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச்
சத்தியும் மந்திர சாதக போதமும்
பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசிவகுருவால் சிவஞானம் மட்டுமின்றி இன்ன பிறபயன்களும் கைகூடும் என்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

இறை முன்வைத்து ஓதப்படும் பலவகை மந்திரங்களும், அதலால் பெறப்படும் சித்திகளும், அவ்வாறு சாதித்தவனது அறிவு நிலையில் பெறப்படுவதான மெய் ஞானமும், யோகத்தில் நிலைபெற்று நிற்கும் உறுதிப் பாடும், அவ்வாறான யோகத்தால் அடையப்படும் அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய அட்டமா சித்திகளும், வாமை ஜேஷ்டை ரவுத்திரி காளி காலவிகாரணி பலவிகரமணி பலப்ரதமணி என விரிந்து நிற்கின்ற திரோதான சத்தியானது ஒடுக்கமுறையில் இறுதியில் நிற்கும் மனோன்மணியே அருட்சத்தியாய் மாறி அருளி நிற்பதாகவும், அவ்வாறு மட்டும் நில்லாது,  பாசத்தின் பக்கத்தைவிடுத்துச் சிவத்தின் பக்கமாகி பின் அதுவே சிவஞானமாகவும் ஆகி அருட்சத்தியாகி அருளுகின்ற சிவஞானமும், அந்த ஞானத்தின்வழி விளங்கியதும் சுத்தநிலை கொண்டதுமான சிவம் ஆன்மாவைத் தானாகச் செய்யும் முத்தியும் குருவருளால் இனிது கிடைக்கப் பெறும்.

விளக்க உரை

  • போதம் – ஞானம், அறிவு
  • திண்மை – நிலைபேறு; சிவமாகி விட்ட உயிர் சிவத்திடம் இருந்து வேறொன்று ஆகாமை
  • சுத்தம் – சுத்தநிலை
  • தூய்மை – பாசத்தின் பக்கத்தைவிடுத்துச் சிவத்தின் பக்கமாதல்
  • சாதக போதம் – சாதித்தவனது அறிவு நிலை
  • மேலே குறிப்பிடப்பட்ட சக்திகளுடன் சர்வபூதமணி, மனோன்மணி எனவும் விரியும் என்று சில இடங்களில் குறிப்பிடப்படுகிறது.

Loading

சமூக ஊடகங்கள்