
பாடல்
மட்டவிழ் தாமரை மாது நல்லாளுடன்
ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்ட வல்லார் உயிர் காக்க வல்லாரே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – சிவன் ஆதி மூர்த்தமாகிய அர்த்தநாரீசுவரர் ஆன உபாயத்தை சிவஞானிகளைத் தவிர்த்து ஏனையோர் அறிந்து தெளிய மாட்டார்கள் என்பதை கூறும் பாடல்.
பதவுரை
பூரண சுத்த சத்தனாக வடிவத்துடனும் யாதுடனும் ஒட்டி இராமலும் தனித்து நிற்கின்ற பரம்பொருள், எல்லா உயிர்களும் இன்பம் தூய்த்து மகிழும் பொருட்டு, தேன் சொரியும் தாமரை வடிவத்தில் உடனாகிய அம்மையுடன் எக்காலத்திலும் பிரிவின்றி ஒட்டி நிற்கின்ற வடிவமாகியதும் ஆதி மூர்த்தமாகியதுமான அர்த்தநாரீசுவரர் ஆன உபாயத்தை சிவஞானிகளைத் தவிர்த்து ஏனையோர் அறிந்து தெளிய மாட்டார்கள்; அவ்வாறு அறிந்தவர்கள், பரநாதத்தின் விட்ட எழுத்தாகிய உகாரத்துடன் விடாத எழுத்தாகிய பரவிந்துவின் அகாரத்துடன் இணைத்து ஒன்றாகக் கட்டி அ-உ-ம் எனும் ஓங்காரத்தின் சொரூபம் காணவல்லவர்களாக இருந்து, உயிர் அற்பமாக பிறவிக்கடலில் வீழ்ந்து இறந்துவிடாது நெடுங்காலம் வாழும்படி காக்கவும் வல்லவராவர்.
பதவுரை எழுத உதவி செய்த ஐயா. திரு. நாராயணசுவாமி (திருவாடுதுறை ஆதினம்) அவர்களுக்கு என் நன்றிகள்