
பாடல்
பூதமும் கரணம் பொறிகள்ஐம் புலனும்
பொருந்திய குணங்கள்ஒர் மூன்றும்
நாதமும் கடந்த வெளியிலே நீயும்
நானுமாய் நிற்கும்நாள் உளதோ
வாதமும் சமய பேதமும் கடந்த
மனோலய இன்பசா கரமே
ஏதும்ஒன்று அறியேன் யாதுநின் செயலோ
இறைவனே ஏகநா யகனே
பட்டினத்தார்
கருத்து – புறக்கருவிகள் செயல் அற்று ஈசனுடம் தனித்திருக்கும் நிலை வேண்டும் எனும் பாடல்.
பதவுரை
இறைவனாகவும், எல்லாம் கடந்த ஒன்றாகவும் இருக்கும் நாயகனே, காற்றினை குறிக்கும் நாடிகளில் ஒன்றான வாதமும், நிலையை காட்ட வழி செய்யும் சமயத்தில் பாகுபாடு கொள்ளாமல் மன ஒடுக்கம் கொண்டு இருக்கும் இன்பக் கடலே! மண், நீர், அனல், வளி, வான். புலன் ஆன பூதமும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனும் அந்தக்கரணங்கள் நான்கும், மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பொறிகள் ஐந்தும் இவற்றுடன் பொருந்திய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனும் அந்தக்கரணங்கள் நான்கும், சாத்விகம், இராஜசம், தாமசம் எனும் முக்குணங்களும், ஈசனின் நவபேதமூர்த்தங்களுள் ஒன்றான நாதமும் கடந்த வெளியிலே நீயும் நானும் மட்டும் தனித்திருக்கும் நாள் உளதோ? எதுவும் யான் அறியவில்லை. இவை அனைத்தும் உனது செயல்களே.
விளக்க உரை
- நாதம் – சத்தம், வாத்திய ஓசை, இசைப்பாட்டு, அரைவட்டமான மந்திரலிபி, சிவபிரானது நவபேத மூர்த்தங்களுள் ஒன்று, நாதக்குமிழிலுள்ள குமிழ், சோணிதம், தலைவனையுடைமை. வீடு நாதமற்றுக் கிடக்கிறது.