
பாடல்
ஈறாகி அங்கே முதல்ஒன்றாய் ஈங்கிரண்டாய்
மாறாத எண்வகையாய் மற்றவற்றின்-வேறாய்
உடனாய் இருக்கும் உருவுடைமை என்றும்
கடனாய் இருக்கின்றான் காண்
திருநெறி 6 – திருக்களிற்றுப் படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்
கருத்து – வினைப்பட்ட ஆன்மாக்கள் மலபரிபாகம் பெறுவதன் பொருட்டு அவர்களுக்கு அருளுதல் பொருட்டு சிவன் உருவம், அருவம், அரு உருவம் கொண்டிருந்து அருளும் முறை உரைக்கும் பாடல்.
பதவுரை
சங்கார காலத்திலே உயிர்கள் ஒடுக்கம் அடையும் போது அதற்கு காரணமாக இருந்து அதன் முடிவாக இருக்கிறான்; உலகம் படைக்கப்படும் காலத்தில் தான் முதல்வனாக இருந்தும் அதனில் இருந்தும் வேறுபட்டவனாகவும் இருக்கிறான்; எக்காலத்திலும் மாறாத எண்குணங்களான தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கி நிற்றல், இயற்கை உணர்வினன் ஆதல், பேரறிவுடைமை அல்லது முற்றறிவுடைமை, வரம்பில்லாத ஆற்றல் உடைமை, வரம்பில்லாத அருள் உடைமை, வரம்பில்லாத இன்ப வடிவினன் ஆதல் ஆகியவை கொண்டும் இருக்கின்ற போதிலும் அவற்றில் இருந்து வேறுபட்டவனாக அதன் உடனாகவும், உருவம் கொண்டும் என்றும் வினைபட்ட ஆன்மாக்கள் மலபரிபாகம் பெறுவதன் பொருட்டு அவர்களுக்கு அருளுதலை கடனாக உரியவனாகவும் இருக்கிறான்.
விளக்க உரை
- சிவன் உலகத்தோடு ஒன்றாய் வேறாய், உடனாய் இருக்கின்றான் என்று தொன்றுதொட்டுக் கூறிவருதலும், முதல்வனாகிய ஈசனிடத்து இம்மூன்று தன்மைகளும் ஒருங்கு கூடியிருத்தல் தெளிவாகும்; சங்கார காலத்திலே உருவமின்மை கொண்டும், சிருட்டி காலத்திலே உருவம் கொண்ட அட்டமூர்த்தியாயும், இவற்றுக்கெல்லாம் வேறாயும் இவற்றுக் கெல்லாம் உடனாயும் இருக்கின்ற அருள் வடிவு கொண்டு கர்த்தாவாகி எக்காலமும் இவ்வாறு நிகழ்த்துதலை முறைமையாகக் கொண்டிருப்பான் எனும் விளக்கமும் பெறப்படும்.