அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 3 (2019)


பாடல்

இயலுமாறெனக் கியம்புமின்னிறை வன்னுமாய்நிறை செய்கையைக்
கயனெடுங்கண்ணி னார்கள்தாம்பொலி கண்டியூருறை வீரட்டன்
புயல்பொழிந்திழி வானுளோர்களுக் காகஅன்றயன் பொய்ச்சிரம்
அயனகவ்வ தரிந்துமற்றதில் ஊணுகந்த வருத்தியே

மூன்றாம் திருமுறை –  தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துஉலகமாகவும், உலகப் பொருள்கள்கள் அனைத்திலும் உறையும் ஈசன் ப்ரமன் தலை கொய்து மண்டையோட்டில் யாசித்து உண்ணுவதை பழிப்பது போல் சிறப்பித்துக் கூறியது.

பதவுரை

கயல் மீன் போன்ற நீண்ட கண்களையுடைய மகளிர் வாழ்கின்ற திருத்தலம் ஆனதும், பொலிவு உடையதும் ஆன திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதனாகிய இறைவன் உலகினுக்கும், உயிருக்கும்  விரும்பியவற்றை அளிக்கும் தலைவனாய் இருப்பதோடு, உலகப்பொருள்களிலும், அனைத்து உயிர்களிடத்தும் அவைகளோடு கலந்து வியாபித்து நிற்கும் தன்மையை கொண்ட போதிலும் வானில் இருந்து உலகத்தில் மழை பொழியச் செய்து நலம்புரியும் தேவர்களுக்காகப் பிரமனுடைய பொய்யானதான ஐந்தாவது சிரத்தை அயலார்கள் பரிகசிக்கும்படி நகத்தால் அரிந்து, அந்த மண்டை ஓட்டில் பிச்சையேற்று உண்ணும் விருப்பம் கொண்டது என்ன காரணத்தால் என்று மெய்யடியார்களே எனக்கு இயன்ற அளவு இயம்புவீர்களாக.

விளக்க உரை

  • இறைவனுமாய் நிறைசெய்கையை – உலகினுக்கும் உயிருக்கும் தலைவனுமாய் நின்று, அவற்றுள் வியாபித்து நிறைந்து நின்ற செய்கையை பற்றியது.
  • புயல் – மேகம்.
  • பொழிந்து – மழைபோல் பெய்து
  • வானவர்களுக்காக அயன்தலையைக் கொய்தது – படைத்தலுக்கு உரித்தான கர்த்தாவின் தலையைப் கிள்ளி அதன் வலிமையின்மையையும், படைப்பவனான ப்ரமனை படைப்பவனாகிய பழையவன் இவனே என வானவர் தெளிவதற்காகவும் தலையை கொய்தது

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *