அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 6 (2019)


பாடல்

பெற்றதா என்றுன்னை மெத்தவும் நம்பிநான்
   பிரியமாயிருந்த னம்மா,
மெத்தனம் உடையை என்றறியாது நானுன்
   புருஷனை மறந்தனம்மா,
பித்தனாயிருந்து முன் சித்தமிரங்காமல்
   பராமுகம் பார்த்திருந்தால்,
பாலன் யானெப்படி விசனமில்லாமலே
   பாங்குட னிருப்பதம்மா,
இத்தனை மோசங்களாகாது ஆகாது
   இது தர்மமல்ல வம்மா
எந்தனை ரக்ஷிக்க சிந்தனைகளில்லையோ
   யிதுநீதி யல்லவம்மா,
அத்தி முகனாசையாலிப் புத்திரனை மறந்தையோ
   அதை யெனக்கருள் புரிகுவாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
   அம்மை காமாட்சி உமையே

காமாட்சியம்மை விருத்தம்

கருத்துஅன்னையின் குழந்தை ஆகிய தன்னிடத்தில் அன்பு இல்லாமலும், பாரா முகம் கொண்டு இருப்பதையும்  உரைத்து தன் துக்கம் போக்க வேண்டி நிற்கும் பாடல்.

பதவுரை

அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே! நீ பெற்ற தாய் என்று உன்னை மிகவும் நம்பி அதன் காரணமாக உன்னிடத்தில் பிரியமாக இருந்தேன்; என் மீது அக்கறையும் சிரத்தையும் இல்லாமல் இருப்பதை அறியாது உன்னுடைய பதியானவனும் புருஷன் ஆனவனும் ஆன ஈசனை மறந்துவிட்டேன்;உன்னிடத்தில் பக்தி கொண்டு அதன் காரணமாக பித்தனான என்னைக் கண்டு மனமிரங்காமல் என்னைக் கண்டும் காணாமல் இருந்தும் பாராமுகமும் கொண்டு இருந்தால் குழந்தை ஆகிய யான் எவ்வாறு துக்கம் கொள்ளாமல் நன்றாக இருக்க இயலும்; நீ இந்த அளவு மோசம் செய்வது ஆகாது; இது தர்மமும் ஆகாது; என்னை காப்பதன் பொருட்டான சிந்தனைகளே உனக்கு இல்லையோ; மூத்தவன் என்பதால் அத்தி முகம் கொண்டவனான கணபதி இடத்து ஆசை வைத்து இருப்பதால் புத்திரனாகிய எனை மறந்தாயோ; அவ்வாறான அன்பினை எனக்கும் அருள் புரிவாயாக.

விளக்க உரை

  • மெத்தனம் – அக்கறை அல்லது சிரத்தையின்றி மெதுவாக, மந்தமாகச் செயல்படல்
  • விசனம் – துக்கம், விடாமுயற்சி, வேட்டை முதலியவற்றில் மிக்க விருப்பு, பேராசை

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply