அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 22 (2019)


பாடல்

மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ
மணிமந்த்ரகாரி நீயே
மாயாசொரூபி நீ மகேஷ்வரியுமான நீ
மலையரசன் மகளான நீ
தாயே மீனாக்ஷி நீ சற்குணவல்லி நீ
தயாநிதி விசாலாக்ஷியும் நீ
தாரணியில் பெயர் பெற்ற
பெரியநாயகியும் நீ
அத்தனிட பாகமதில் பேறு பெற
வளர்ந்தவளும் நீ
ப்ரணவ சொரூபி நீ ப்ரஸன்னவல்லி நீ
பிரிய உண்ணாமுலையும் நீ
ஆயி மகமாயி நீ ஆனந்தவல்லி நீ
அகிலாண்டவல்லி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே

காமாட்சியம்மை விருத்தம்

கருத்து – அனைத்து வடிவங்களில் இருக்கும் அன்னை காமாட்சி அன்னையே எனவும், அவளது சில பெருமைகளையும் உரைக்கும் பாடல்.

பதவுரை

அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே!  நீ மாயவன் ஆகிய திருமாலின் தங்கை ஆனவளாகவும், தரும தேவதை ஆன பார்வதி ஆனவளாகவும், சரீர ரக்ஷைக்கு உரித்தான மணி மந்திரம் ஆனவளாகவும், மாயையின் சொரூபமாகவும், மகேஷ்வரனின் துணையாக இருக்கூடியவளான மகேஷ்வரியும் ஆனவளாகவும், மலையத்துவஜன் எனப்படும் மலையரசன் மகளாக இருப்பவளும், அன்னையான மீனாட்சி ஆனவளாகவும், நல்ல குணங்கள் எல்லாம் ஒருங்கே அமையப் பெற்றவளாகவும்,  விரும்புவர்கள் விரும்பியவற்றை எல்லாம் ஒருங்கே அளிப்பவளாகவும்,  இந்த உலகில் பெரிய நாயகி என்று பெயர் பெற்றவளாகவும், மூத்தோனும், மிக உயர்ந்தனுமான சிவன் இடத்தில் இடப்பாகம் எனும் பேறு பெற்று வளர்ந்தவளாகவும், பிரணவ வடிவம் ஆனவளாகவும், அடியவர்களின் அனைத்து சிந்தனைகளுக்கும் அந்த வினாடியில் பொருள் உரைப்பவளாகவும், அன்னை ஆகிய உண்ணாமுலை ஆனவளாகவும், அன்னை ஆகிய மகமாயி ஆனவளாகவும், ஆனந்த வல்லி ஆனவளாகவும், அகிலாண்டவல்லி ஆனவளாகவும் இருக்கிறாய்.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.