
பாடல்
வாகை விரிந்துவெள் நெற்று ஒலிப்ப,
மயங்குஇருள் கூர்நடு நாளை, ஆங்கே
கூகையொ டுஆண்டலை பாட, ஆந்தை
கோடுஅதன் மேல்குதித்து ஓட, வீசி
ஈகை படர்தொடர் கள்ளி நீழல்
ஈமம் இடுசுடு காட்டு அகத்தே
ஆகம் குளிர்ந்துஅனல் ஆடும் எங்கள்
அப்பன் இடம் திரு ஆலங் காடே
பதினொன்றாம் திருமுறை – மூத்த திருப்பதிகம் – காரைக்காலம்மையார்
கருத்து – சுடுகாட்டின் காட்சியினை விளக்கி அதில் ஆடுகின்றவன் என் அப்பன் ஈசன் எனவும் அப்படிப்பட்டவனுக்கு உரித்தான இடம் திருவாலங்காடு எனும் திருத்தலம் என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
காட்டில் இருக்கும் வாகை மரமானது விரிந்து தழைத்து அதன் வெண்மையான நெற்று ஒலிக்கக் கூடியதும், மயக்கம் தரும் இருளோடு பகலோடு வந்து பொருந்தியதான நள்ளிரவு நேரத்தில், கோட்டானுடன் ஆண்தலைப் போன்ற தலையுடைய ஒரு புள்ளினம் ஆடவும், ஆந்தையானது அவற்றை எல்லாம் விரட்டி ஓடவும், கொடிகள் படரந்துள்ளதும், கள்ளி மரத்தின் நிழலை உடையதும், பிணத்தைச் சுட்டு எரிக்கின்ற சுடுகாட்டிலே இருப்பதும், தனது திருமேனியானது குளிர்ந்த நிலையிலேயே அனலில் ஆடுகின்றவனுமான எங்களது அப்பனுக்கு உரித்தான இடமானது திருவாலங்காடு எனும் திருத்தலமாகும்.
விளக்க உரை
- ஆண்டலை – கோழி, ஆண்மகன் தலபோன்ற தலையுடைய ஒருபுள், பூவாது காய்க்கும் மரம்
- ஆகம் – உடல், மார்பு, மனம், சுரை
- கள்ளிக் கவடு – கள்ளி மரத்தின் கிளைகள்
- மயங்கு இருள் – மாலைக் காலத்தில்
- கோடு – மரக்கிளை
- கூகையும், ஆண்டலையும் கூவக் கேட்டு ஆந்தை மரக் கிளையின்மேல் இடம் பெயர்ந்து ஓடுகின்ற காட்சி அமைப்பு
- வீசுதல் – எழுச்சியுறுதல்
- ஈமம் – பிணஞ்சுடும் விறகு