
பாடல்
வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது
தனிப்பாடல் திரட்டு – ஔவையார்
கருத்து – ஒவ்வொரு உயிருக்குமான தனித்தன்மையை விளக்கி எவரும் வலிமை உடையவர்கள் எனக் கூறக்கூடாது என்பதை வலியுறுத்தும் பாடல்.
பதவுரை
இருப்பிடம் அமைப்பதில் வானில் பறக்கக்கூடிய தூக்கணாங்குருவி ஒருமுறையில் கூடு கட்டும்; புவியினில் வசிப்பதான கறையான் வேறு முறையில் புற்று கட்டும்; வீட்டில் இருக்கக்கூடிய சிலந்தி வலையை வேறு முறையில் அமைக்கும்; எல்லாவற்றையும் எல்லாராலும் செய்யமுடியாது. எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிதாக இருக்கும். எனவே யாமே பெரிய வலிமை உடையவர்கள் என்று வலிமை முன்வைத்து உரைப்பதும், நானே வல்லமை உடையவன் என்று யாரும் பெருமை கொள்ளக் கூடாது.