அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 10 (2019)


பாடல்

ஏசினும் யான்உன்னை ஏத்தினும் என்பிழைக் கேகுழைந்து
வேசறு வேனை விடுதிகண் டாய்செம் பவளவெற்பின்
தேசுடை யாய்என்னை ஆளுடை யாய்சிற் றுயிர்க்கிரங்கிக்
காய்சின ஆலமுண் டாய்அமு துண்ணக் கடையவனே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்துதேவர்களுக்கு அருள் புரிந்த தன்மை உரைத்து தனக்கும் அருள் புரிய வேண்டும் என உரைக்கும் பாடல்.

பதவுரை

செந்நிறமுடைய பவளமலை போன்ற ஒளியுடைய திருமேனியனே, என்னை நினக்கு அடிமையாக ஆக்கிக் கொண்டவனே! தேவர்கள் ஆகிய சிறு உயிர்களுக்கு மனம் இரங்கி அவர்கள் அமுது உண்ணுதல் பொருட்டு எதிர்படுவோரைக் கொல்லும் வேகத்தோடு எழுந்த அமுதத்தினை உண்டாய்; கடைப்பட்டவனாகிய நான் உன்னை இகழ்ந்து பேசினாலும், புகழ்ந்து வாழ்த்தினாலும் எனது குற்றத்தின் பொருட்டே என்று எண்ணி மனம் வாடி துக்கப்படுவேன்; அவ்வாறு துக்கம் கொள்ளும்  என்னை விட்டுவிடுவாயோ!

விளக்க உரை

  • ஏசினும் – உன்னை ஏசினாலும் உன்னிடம் கொண்டிருந்த அன்பின் அடிப்படையிலும் சொல் அளவிலும் இன்றி மனதளவில் இல்லை என்பது உட்பொருள். ( ‘வெங்கரியின் உரிப்பிச்சன்’ என்பது முந்தைய பாடல்களில் பாடப்பெற்றமை காண்க)
  • வேசறு வேனை – நின் அடியார் கூட்டத்தோடு செல்லாமல் இந்த உடலுடன் தங்கிவிட்ட தவற்றை நினைத்து மனக் குழைந்து வருந்துதல் (வேசறுதல் – வருந்துதல் )
  • அமுதை கடைய முற்பட்ட தேவர்கள் நஞ்சை கண்டு தவித்து நின்னை சரண் அடைந்த பொழுது அவர்களுக்கு மனம் இரங்கி அவர்களை மன்னித்து ஏற்றுக் கொண்டாய், அவ்வாறான கருணைக் கடலான நீ என்னுடைய சிறு பழைய பிழைகளை நினைத்து வருந்துபவனாகிய என்னையும் ஏற்றுக் கொண்டு அருள் புரிதல் உன்னுடைய கடமை அன்றோ
  • கடையவன் – சங்காரத்தில் உலகம் அழியும் போதும் அழியாது இருப்பவன் (தோன்றாப் பெருமையனே என்பது வெளிப்படை)

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply