
பாடல்
முன்னின் றருளும் முடிகின்ற காலத்து
நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும்
பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும்
முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – ஈசன், பிற ஆன்மாக்களுக்கு அருளிய முறையில் தனக்கு அருளிய திறன் உரைத்தப் பாடல்.
பதவுரை
உயிர்களுக்கு நல்வினை, தீவினை ஆகிய இருமைகள் நீங்கிய காலத்தில் அவ்வாறு நீங்கப் பெற்ற உயிர்களுக்கு வினையில்லாத நன்மை பொருந்தியவனாய் உயிர்க்கு உயிராய் இருந்தே அருளை வழங்குவனும், அதன் பயனாக முடிவில் பிறவியை நீக்கிவிடுவனும், யாவர்க்கும் அருள் வழங்கிய பின்னும் அவ்வருள் நிலையினின்றும் வழுவாதவாறு பாதுகாப்பனும் ஆனவனான சிவன் அடியேனுக்கு என் கண்முன் நின்று முத்தியை அளித்து அருளினான்.
விளக்க உரை
- முன்னின்று அருளுதல் – பிரளயாகலர், சகலர் ஆகியோருக்கு அருளும் முறை (ஆகமங்கள் வரையரையின் படி) – இயற்கை வடிவோடு வெளி நிற்றல், குருவாய் வந்து, நோக்கல், தீண்டல், உரைத்தல் முதலியவைகளைச் செய்தல். (ஆகமங்கள் வரையறுத்து கூறியது போல் பரிபாக முதிர்ச்சி முன்வைத்து மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலருக்கும், மும்மலங்களுள் ஆணவம், கன்மம் என்னும் இரண்டினையுடைய ஆன்மாக்கள் ஆகிய பிரளயாகலருக்கும், பாசப்பற்று நீங்காத மும்மலமுடைய ஆன்மாக்கள்ஆகிய சகலருக்கும் அருளிய திறம் போல் தனக்கும் அருளினான் என்று உரைத்தவாறு.
- உலகு – உயிர்தொகுதி
- நடுவுயிர் – உள்ளுயிர்