
பாடல்
முன்னவன் எங்கள்பிரான் முதல்
காண்பரி தாயபிரான்
சென்னியில் எங்கள்பிரான் திரு
நீல மிடற்றெம்பிரான்
மன்னிய எங்கள்பிரான் மறை
நான்குங்கல் லால்நிழற்கீழ்ப்
பன்னிய எங்கள்பிரான் பழ
மண்ணிப் படிக்கரையே
ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்
கருத்து – ஈசனின் எண் குணங்களில் சிலவற்றை சொல்லியும், அவன் சில தன்மைகளையும் கூறி அவன் உறையும் திருத் தலத்தைப் பற்றி உரைக்கும் பாடல்.
பதவுரை
சங்காரம் முடிந்து சிருஷ்டி தொடங்குவதற்கு முன் உள்ளவனும், தனக்கு முன்னால் உலகம் மற்றும் உலகப் பொருளும் படைக்கப்படவில்லை எனும் தன்மை கொண்டு எங்கள் இறைவன் ஆனவனும், சென்னி எனப்படுவதும் தலை எனப்படுவதும் ஆன உச்சியில் இருக்கும் எங்கள் தலைவன் ஆனவனும், அழகிய நீல கண்டத்தை உடைய எங்கள் இறைவன் ஆனவனும், என்றும் நிலை பெற்ற எங்கள் தலைவனும், நான்கு மறைகளையும் கல்லால மர நிழலில் இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்தவனும் ஆன எங்கள் இறைவன் இறைவன் எழுந்தருளியிருப்பது ‘திருப்பழமண்ணிப்படிக்கரை’ என்னும் திருத்தலமே.
விளக்க உரை
- பிரான் – தலைவன், தேவன், இறைவன்