அமுதமொழி – சார்வரி – சித்திரை – 8 (2020)


பாடல்

பத்தியால் யானுனைப் …… பலகாலும்
     பற்றியே மாதிருப் …… புகழ்பாடி
முத்தனா மாறெனைப் …… பெருவாழ்வின்
     முத்தியே சேர்வதற் …… கருள்வாயே
உத்தமா தானசற் …… குணர்நேயா
     ஒப்பிலா மாமணிக் …… கிரிவாசா
வித்தகா ஞானசத் …… திநிபாதா
     வெற்றிவே லாயுதப் …… பெருமாளே

திருப்புகழ் – அருணகிரிநாதர்

கருத்து – முருகனின் பெருமைகளை உரைத்து, தன்னை முக்தி அடைய வழிகாட்டும்படி வேண்டும் பாடல்.

பதவுரை

உத்தமமான குணங்களைப் கொண்டுள்ளவனும், சத்துவகுணம் உடையவர்களால் விரும்பப்படுபவனும், பேரறிவாளனாக இருப்பவனும், உயிர்களுக்கு திருவருள் ஞானத்தைப் பதியச் செய்பவனாக இருப்பவனும், எக்காலத்திலும் வெற்றியைத் தரும் வேலை ஆயுதமாகக் கொண்ட பெருமாளாக இருப்பவனும் ஆகி எவராலும் ஒப்புமை செய்ய இல்லாத பெருமை பொருந்தியதும் ஆன ரத்னகிரியில் வாழ்பவனே! உன்னிடத்தில் கொண்டுள்ள பக்தியினால்  யான் உன்னை பல காலமாக உன்னைப் பற்றிக்கொண்டு, உயர்ந்ததும், சிறப்புகளை உடையதுமான உன்னுடை திருப்புகழைப் பாடி, பாசங்கள் நீங்கப்பெற்றதும், பேரின்பம் தருவதுமான முக்தி  அடையும் வழியில் செலுத்தி, அதில் சேர்ந்து உய்வதற்கு திருவருள் புரிவாயாக.

விளக்க உரை

  • முத்தன் – முத்திபெற்றவன், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கியவன்[சிவபிரான்], திருமால், வைரவன், அருகன், புத்தன்
  • ரத்னாசலம், சிவாயம், மணிக்கிரி என்பன ரத்தினகிரியின் பிற பெயர்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை-2 (2020)


பாடல்

பாறு தாங்கிய காட ரோபடு
   தலைய ரோமலைப் பாவையோர்
கூறு தாங்கிய குழக ரோகுழைக்
   காத ரோகுறுங் கோட்டிள
ஏறு தாங்கிய கொடிய ரோசுடு
   பொடிய ரோஇலங் கும்பிறை
ஆறு தாங்கிய சடைய ரோநமக்
   கடிக ளாகிய அடிகளே

ஏழாம் திருமுறை – தேவாரம் –  சுந்தரர்

கருத்து – சிவன் சிறப்புகளை சொல்லும் பாடல்.

பதவுரை

நமக்குத் தலைவராய் உள்ளவர் பருந்துகளைச் சுமக்கும் முதுகாட்டில் அழிந்த தலையை ஏந்தியவரோ? மலைமகளது ஒருபாகத்தைச் சுமக்கும் அழகரோ? குழைய அணிந்த திருச்செவியினை உடையவரோ? சிறிய இடைவெளி கொண்ட கொம்பினை உடைய இளமையான இடபத்தைக் கொண்டுள்ள கொடியை உடையவரோ? சுடப்பட்ட திருநீற்றை அணிந்தவரோ? விளங்குகின்ற பிறையோடு கூடிய ஆற்றைச்(கங்கை) சுமந்த சடையை உடையவரோ? சொல்லுமின்.

விளக்க உரை

  • பாறு – விலங்குகளின் பிணங்களைத் தின்று வாழும் பறவையினம், பிணந்திண்ணி கழுகு, எலும்புண்ணிப் பாறு
  • ஆணவம் கொண்ட தலையை உடையவரது அழிவு தலையின் மேல் ஏற்றி உரைக்கப்பட்டது
  • குறுங்கோடு – இளைய ஏறாகல் / இளைய காளை
  • தலைவர் – நமக்குத் தலைவராய் உள்ள தலைவர்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை-1 (2020)


பாடல்

இந்தனந்தில் அங்கி எரிஉறுநீர் தேனிரதங்
கந்தமலர்ப் போதுவான் காலொளிகண் – சந்ததமும்
அத்துவித மாவதுபோல் ஆன்மாவும் ஈசனுமாய்
முத்தியிலே நிற்கும் முறை

சிவஞானபோதம்

கருத்து – முக்தி நிலையில் ஆன்மா வேறு, ஈசன் வேறு என்று இரு பொருள்களாக இல்லாமல் இருப்பதை உணர்த்தும் பாடல்.

பதவுரை

முக்தி நிலையில் ஆன்மா வேறு, ஈசன் வேறு என்று இரு பொருள்களாக இல்லாமல் அத்துவைத நிலை எனும் பிரிக்க இயலாத நிலையில் ஒன்றி விறகில் தீ இருப்பது போலவும், சுடுநீரில் வெப்பம் போலவும், தேனில் தித்திப்பு போலவும், வாசனை உடைய மலர்களில் மணம் போலவும், ஆகாயத்தில் காற்று போலவும், கண்ணில் ஒளி போலவும் நிற்பான்.

விளக்க உரை

  • இந்தனம் – விறகு
  • அங்கி – ஆடை, மேலாடை, நெருப்பு, அக்கினி
  • ஆன்மாவுக்கு ஈசனுடன் அத்துவித கலப்பு ஏற்பட்டு விடுவதால் அது எல்லையற்ற இன்பத்தினை பெற்று விடுவதால் அதன் பின் வேறு நிலைக்குச் செல்லும் அனுபவம் / நிலை தேவைப்படாமல் போகிறது. ஆகவே அவ்வித ஆன்மாக்கள் சுத்தாத்வித சித்தாந்த பரமுக்தி, சாயுச்சிய பரமுக்தி என்றெல்லாம் அழைக்கப்படும் இரண்டற கலத்தல் நிலைக்குச் செல்கின்றன.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 27 (2020)


பாடல்

சொல்லன்றிப் பொருளு மன்றிச் சூழ்ந்ததோ ருருவமன்றி
அல்லன்றிப் பகலு மன்றி அகண்டபூ ரணமதாகி
நல்லின்பச் சிவமதாகி நாட்டிரண் டற்று நிற்போர்
செல்லுநற் சிந்தை யோராஞ் சித்தராய் வாழுவாரே

முதுமொழி ஞானம் – அகத்தியர்

கருத்து – இருமைகளை விலக்கி, தியான நிலையில் சித்ததன்மையுடன் வாழ்பவர்களைப் பற்றி கூறும் பாடல்.

பதவுரை

சொல்லக் கூடிய சொல்லாகவும், அதன் பொருளாகவும் இன்றி சூழ்ந்திருக்கும் உருவமாகவும் இன்றி, உலக வாழ்வின் அல்லல் ஏதுவுமின்றி, ஒளியினால் ஏற்படுவதாகிய பகல் ஏதுவும் இன்றி அகண்ட பூரணமாகி , நல் இன்பத்தினை தருவதாகிய சிவமாகி  அதை நாடி இரு வினைகளை ஆகிய நல் வினை, தீவினை ஆகியவற்றை அழித்து நிற்பவர்களது சிந்தை எப்பொழுதும் நல்வழியில் சென்று சித்தராய் வாழ்வார்கள்.

விளக்க உரை

  • உருவமன்றி, அல்லன்றி , பகலன்றி – அருவமன்றி, இன்பமன்றி, இரவின்றி எனும் இருமைகள் மறை பொருள்கள். இருமைகள் விலகி சித்த தன்மையுடன் வாழ்வர் என்பது மறை பொருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 26 (2020)


பாடல்

தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன
   தன்பிறவியுறவு கோடி
தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன
   தாரணியையாண்டுமென்ன
சேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன
   சீடர்கள் இருந்துமென்ன
சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள்
   செய்தென்ன நதிகளெல்லாம்
ஓயாது மூழ்கினும் என்ன பயன் எமனோலை
   ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ!
இதுவெல்லாம் சந்தை உறவென்று தான்
   உந்தனிருபாதம் பிடித்தேன்
யார்மீது உன்மனமிருந்தாலுமுன் கடைக்
   கண்பார்வையது போதுமே
ஈசனே சிவகாமி நேசனே
   எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

சிறுமணவை முனிசாமி

கருத்து – உறவுகள் எதுவும் நிலையானது அல்ல என்று கூறி ஈசனிடத்தில் வேண்டி அவரின் திருப்பாதங்களைப் பிடித்ததைக் கூறும் பாடல்.

பதவுரை

ஈசனாகவும், சிவகாகியின் நேசத்திற்கு உரியவனாகவும், என்னை ஈன்ற தில்லையில் வாழும் நடராஜனாகவும் இருப்பவனே, ஈசனாகவும், சிவகாகியின் நேசத்திற்கு உரியவனாகவும், என்னை ஈன்ற தில்லையில் வாழும் நடராஜனாகவும் இருப்பவனே! யாரிடத்தில் உன்னுடைய மனம் இருந்தாலும் என் மீது விடும் கடைக்கண் பார்வை போதும்; தாயாருடன் இருந்தாலும் ,தந்தையாருடன் இருந்தாலும், தன் பிறவியுடன் கூடிய உறவு இருந்தாலும், மலை போல் குவிந்திருக்கும் கோடிக் கணக்கான செல்வங்களும் இருந்தாலும், மிகப் பெரிதான பெயர் எடுத்து இருந்தாலும், தரணி எனும் இப்புவியினை ஆளும் அரசன் என்று பெயர் கொண்டு இருந்தாலும், மக்களைப் பெற்று இருந்தாலும், வழிகாட்டுதலுக்கு உரிய குருவாக இருந்தாலும், தன் வழியினை தொடரும் சீடர்கள் இருந்தாலும், பலவிதமான சித்துகள் கற்று இருந்தாலும், தினம் தினம் விரதங்கள் செய்து இருந்தாலும், புண்ணிய நதிகளில் நித்தமும் நீராடி மூழ்கி இருந்தாலும் அவைகள் எல்லாம் பயன் தராது; இவை எல்லாம் மக்கள் கூடிப் பிரியும் சந்தை போன்ற உறவு தான் என்பதை உணர்ந்து கொண்டு உன்னுடைய இரு திருப்பாதங்களைப் பிடித்தேன்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 23 (2020)


பாடல்

நீடு பாவ புண்ணி யங்க ளால்நிரய வானகம்
கூடு வோர்கள் இன்றுநின்று கூட்டு வோர்கள் இன்மையின்
ஓடு மாக ணைத்தி றத்தின் உற்றவா றுரைத்தியேல்
வீடு மாகணைக்கு நாடும் வில்லி போல வேண்டுமே

திருநெறி 2 – சிவஞானசித்தியார் – பரபக்கம் – நிகண்டவாதி மதம்

கருத்து – வினைகளை அனுபவிக்கசெய்ய ஒரு கர்த்தா இருக்க வேண்டும் என்பதை அறுதியிட்டு கூறும் பாடல்.

பதவுரை

ஆன்மாக்கள் செய்த புண்ணிய பாவங்களை அறிந்து நின்று அவற்றின் பலாபலன்களை செலுத்துவிக்க ஒரு கர்த்தா இல்லையென்று நீ சொன்னால், மிக்க பாவங்களால் ஆன நரகங்களையும் மிக்க புண்ணியங்களால் ஆன சுவர்க்கங்களில்  பொருந்திநின்று அதனைஅநுபவிப்பாரில்லை; விரைந்த செலுதப்பட்ட பெரிய அம்பு இலக்கில் படுதல் போல செய்யப்பட்ட புண்ணியபாவங்கள் செய்தவனிடத்தே விரையத் தாமே சென்று பற்றுமென்று நீ சொன்னால், அவ்வாறு விடப்பட்ட பெரியகணைக்கு இலக்கை சென்று அடையும்படி செய்வதற்கு ஒரு வில்லாளன் வேண்டும் எனக் கொண்டால் அந்த ஆன்மாக்கள் செய்த கன்மங்களை அநுபவிக்கும்படி கூட்டுவிக்க ஒரு கர்த்தா வேண்டும்.

விளக்க உரை

  • வில்லி – வில்லாளன், மன்மதன், வீரபத்திரன், அருச்சுனன், வேடன், வில்லிபுத்தூராழ்வார்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பேணுதல்


வார்த்தை : பேணுதல்
பொருள்

  • போற்றுதல்
  • உபசரித்தல்
  • ஒத்தல்
  • மதித்தல்
  • விரும்புதல்
  • பாதுகாத்தல்
  • வழிபடுதல்
  • பொருட்படுத்துதல்
  • ஓம்புதல்
  • அலங்கரித்தல்
  • கருதுதல்
  • குறித்தல்
  • உட்கொள்ளுதல்
  • அறிதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

காணலாம் அவருடைய மூலங்கேளு
கனகரத்தின மானசிறு குழந்தைபோலத்
தோணலாம் புருவநடுக் கமலந்தன்னிற்
சுகமாகச் சொரூபநிலை கண்டாயானால்
*பேணலாம்* அவர்பதத்தைத் தியானஞ்செய்து
பெருமையுடன் மானதமாம் பூசைசெய்தால்
பூணலாஞ் சகலவரங் கைக்குள்ளாகும்
பொற்கமல வைரவனைத் தியானம்பண்ணே

அகத்தியர் சௌமியசாகரம் – வைரவத்தியானம்

இப்பொழுது அவருடைய மூலத்தை கேட்பாயாக. தங்கத்தில் பதிக்கப்பட்ட ரத்தினம் எவ்வாறு இருக்குமே அது போல சிறு குழந்தை போலத் தோன்றுவார். இரு புருவங்களுக்கு இடையில் இருக்கும் நெற்றிக் கண்ணில் சுகமாக அவருடைய சொருப நிலையை அறியலாம். அவருடைய திருவடியை அகவழிபாட்டின்படி மானச தியானம் செய்தால் சகல வரங்களும் கைவல்யமாகும். இவ்வாறு தங்க தாமரை போன்ற பாதங்களை உடைய வைரவனை தியானம் செய்வாயாக.

துக்கடா
வல்லெழுத்து மிகா இடங்கள்
அவை, எவை, இவை, யாவை என்னும் சொற்களின் பின்
அவை பெரியன
யாவை போயின

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 22 (2020)


பாடல்

போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்
கூகின்ற நாவலின் தருங்கனி
ஆகின்ற பைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்
வேகின்ற கூரை விருத்திபெற் றாரே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – சுவாசத்தை யோக நெறியில் பயன்படுத்திக் கொள்ளாதவர், பிராரத்தை அனுபவித்து மறைகின்றவர் ஆகின்றனர் என்பதை எடுத்துக் காட்டும் பாடல்.

பதவுரை

கூவுகின்ற பறவைகள் இருக்கக்கூடியாதான நாவல் மரத்தினில் இருந்து தோன்றி உணவாய் அமைகின்ற உண்ணும் நிலையில் இருக்கும் நாவல் கனிகளில் சில பயன்படாத இடத்தில் உதிர்ந்தும், சில மரத்திற்கு அடியில் உதிர்ந்தும், சில புதர் முதலியவற்றில் விழுந்தும் பிறருக்கு பயன்படாதவாறும்  போய்விடுகின்றன; அந்த நாவல் மரத்தை உள்ளடக்கி அமைக்கப்பட்ட குடிலில் ஐவர் வாழ்கின்றனர்; வேறிடத்தில் வளர்ந்த பயிர் தருகின்ற நெல்லை உண்டு வாழ்கின்றனர். அந்தக் குடிலோ சில நாட்களில் வெந்து ஒழிவதாய் உள்ளது.

விளக்க உரை

  • நாவல் மரம் – சுவாச கோசம். நாவல் கனி பெரும் பாலும் சாலையோரங்களில் நிற்கும்; அந்த மரங்களில் இருந்து  உதிர்ந்து கிடப்பினும் வாழை, மா, பலா இவற்றின் கனிகளைப்போல மக்கள் ஆர்வமுடன் கொள்ளாமை பற்றி, `சுவாசமும் இயற்கையாய் அமைந்தும் அருமை அறியப்படாததாய் உள்ளது` எனும் பொருள் பற்றியது
  • அதினின்றும் உணவாகக் கிடைக்கும் கனி – உடலை நிலைபெறுத்துகின்ற சுவாசம். போகின்ற கனி –  வெளிச்செல்லும் காற்று (ரேசகம்)
  • புகுகின்ற கனி – உள்ளே வரும் காற்று(பூரகம்)
  • வித்து – வெளிப் புகுகின்ற காற்றை வெளியே விடாது தடுத்தால் பயன் விளைதல் பற்றியது
  • பொய் – அகமும் புறமும் செல்லும் காற்று வீணாவதைக் குறிக்கும்
  • பறவைகள் – சுவாச கோசத்தில் உள்ள நரம்பு
  • ஆகின்ற – வளர்கின்ற
  • பைங்கூழ் – பயிர்; முற்பிறவியில் ஆக்கிய வினை,பிராரத்த விளைவு என்பதை முன்வைத்து ‘போகின்ற பொய்’  – புகுகின்ற வித்தாவது ஆகாமியம்
  • ஐவர் – ஐம்பொறிகள்
  • கூரை – குடில்; தூல உடம்பு.
  • விருத்தி – பிழைப்பு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 21 (2020)


பாடல்

செய்யுந் தவஞ்சற்று மில்லாத நான்உன் திருவடிக்கே
கொய்யும் புதுமல ரிட்டுமெய் யன்பர் குழாத்துடனே
கையுஞ் சிரமிசைக் கூப்பிநின் றாடிக் கசிந்துருகி
உய்யும் படிக்கருள் செய்வதென் றோபுலி யூரத்தனே

தாயுமானவர்

கருத்து – புறப்பூசைகளையும், அவ்வாறு தான்  செய்யாத புறப்பூசைகளையும் குறிப்பிட்டு தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு தாயுமானவர் வேண்டும் பாடல்.

பதவுரை

தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் வீற்றிருந்து அருளும் தந்தையே, நின் திருவடிக்கு ஆளாகும்படி அதற்கு உரித்தான நல்ல தவம் சிறிதும் புரிந்திலேன்; நின்னுடைய திருவடிக்கு புதியதானதும், அன்றைய தினத்தில் தோன்றியதும் ஆன நாண்மலர் கொய்து, செந்தமிழால் போற்றி பாடி பாடும் மெய்யன்பர்களுடன் கூடிப் பூத்தூவி, கையினை உச்சந்தலை மேல வருமாறு கும்பிட்டு,  ஆடுதல் செய்து, கசிந்து உருகி உய்வதற்கு வேண்டுவனவும் செய்யவில்லை.  இவையெல்லாம் நின் திருவருளால் செய்து உய்யும்படிக்கு நீ அடியேனுக்கு அருள்புரிவது எந்நாளிலோ?

விளக்க உரை

  • அவ்வறு விரைந்து அருளவேண்டும் என்பது குறிப்பு.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 20 (2020)


பாடல்

பண்ணப்பா தியானமது குருத்தியானம்
     பரமகுரு சீர்பாதந் தியானங் கேளு
உண்ணப்பா கண்ணான மூலந் தன்னில்
     முத்தி கொண்ட அக்கினியாஞ் சுவாலை தன்னை
நண்ணப்பா வாசியினால் நன்றாயூதி
     நடுமனையைப் பிடித்தேறி நாட்டமாக
வின்ணப்பா கேசரியாம் புருவ மையம்
     மேன்மை பெறத் தானிறுத்தி வசிவசி என்னே

அகஸ்தியர் சௌமிய சாகரம் – அகஸ்தியர்

கருத்து – மூலாதாரத்தில் இருந்து சுழிமுனை வழியே அண்ணாக்கு மேல் நின்று தியானம் செய்யும் முறையை கூறும் பாடல்.

பதவுரை

ஆசாரியர்களுக்கு எல்லாம் ஆசாரியனாகிய பரமகுருவின் பாதத்தினை தியானம் செய்யும் முறை ஆகிய குருத் தியானம் என்பதனை  கேட்டுச் செய்வாயாக; ஊசித்துளை அளவுள்ள மூலாதாரத்தில் இருந்து முக்தியினை தரும் அக்னி சுவாலைப் போன்றதாகிய சுவாலையினை வாசியினால் பெரிதாக்கி  சுழுமுனை வழியாக விருப்பமுடன் மேலேற்றி  கேசரி எனப்படும் புருவ மத்தியாகிய ஆக்கினைக்கு மேலாகியதும்   மேன்மை உடையதும் ஆகிய சகஸ்ராரத்தின் வாயிலில் நிறுத்தி வசிவசி தியானம் செய்வாயாக.

விளக்க உரை

  • கண் – விலங்குகள் ஒளியின் மூலம், முன்னிருக்கும் உருவத்தைக் காண உதவும் உடல் உறுப்பு, விழி, நயனம், ஊசித் துளை, அறிவு, புண்ணின் (வாய்) துளை, இடம், கணு, மரக்கணு
  • கேசரி – விண்ணில் உலவுபவன்
  • கேசரிமுத்திரையில் அமுததாரணை வழியே அமுதம் பெற்று உண்பவர் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வார் என்பது உபதேசம் செய்யப்படுகிறது. யோக முறை என்பதால் குருமூலமாக அறிக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 19 (2020)


பாடல்

இரந்து இரந்து உருக என் மனத்துள்ளே
   எழுகின்ற சோதியே இமையோர்
சிரம் தனில் பொலியும் கமலச் சேவடியாய்
   திருப்பெருந்துறை உறை சிவனே
நிரந்த ஆகாயம் நீர் நிலம் தீ கால்
   ஆய் அவை அல்லை ஆய் ஆங்கே
கரந்தது ஒர் உருவே களித்தனன் உன்னைக்
   கண் உறக் கண்டுகொண்டு இன்றே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து – அளவிட முடியா சிவனின் அரும் பெரும் செயல்களைக் கூறி, அவனை மனதில் கொண்டு இரந்ததால் சிவன் கண்ணில் தோன்றினான் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

பல காலம் உன்னை நினைத்து அன்பு கொண்டு அதனால் உன்னை எண்ணி எண்ணி உருக, என் மனத்தில் எழுகின்ற சோதியே, இமையாதவர்களாகிய தேவர்களின் தலையில் பொலிவு உடைய தாமரைத் திருவடிகளைக் கொண்டவனே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, பிரளத்திலும் அழிவே இல்லாத ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று ஆகிய ஐம்பூதங்களாகவும், அவை அல்லாத மற்றவையாகவும், உருவமில்லாத அருவமாகவும் தோன்றுகிறவனே, சிவபெருமானே! இன்று உன்னைக் கண்ணால் கண்டு களிக்கின்றேன்.

விளக்க உரை

  • கரத்தல் – மறைத்தல்.
  • இரந்து இரந்து – உடலாலும் உள்ளத்தாலும் இரந்து எனும் பொருளும், நல்வினைகள் தீவினைகள் அழியுமாறு இரந்தும் என்பதற்காக இருமுறைகள் எனும் பொருளும் பெறப்படும். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • யோக முறையில் திருப்பெரும்துறை என்பது உடலில் இருக்கும் ஒர் இடம் என்றும் சிவனை அகக் கண்ணால் கண்டதையும் குறிப்பிடுகிறார் எனவும் குறிப்பிடப்படுவது உண்டு.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 18 (2020)


பாடல்

அந்தோமன மேநம தாக்கையை
   நம்பாதெயி தாகித சூத்திர
      மம்போருக னாடிய பூட்டிது …… இனிமேல்நாம்
அஞ்சாதமை யாகிரி யாக்கையை
   பஞ்சாடிய வேலவ னார்க்கிய
      லங்காகுவம் வாஇனி தாக்கையை …… ஒழியாமல்
வந்தோமிது வேகதி யாட்சியு
   மிந்தாமயில் வாகனர் சீட்டிது
      வந்தாளுவம் நாமென வீக்கிய …… சிவநீறும்
வந்தேவெகு வாநமை யாட்கொளு
   வந்தார்மத மேதினி மேற்கொள
      மைந்தாகும ராவெனு மார்ப்புய …… மறவாதே
திந்தோதிமி தீதத மாத்துடி
   தந்தாதன னாதன தாத்தன
      செம்பூரிகை பேரிகை யார்த்தெழ …… மறையோதச்
செங்காடென வேவரு மூர்க்கரை
   சங்காரசி காமணி வேற்கொடு
      செண்டாடிம காமயில் மேற்கொளு …… முருகோனே
இந்தோடிதழ் நாகம காக்கடல்
   கங்காளமி னார்சடை சூட்டிய
      என்தாதைச தாசிவ கோத்திர …… னருள்பாலா
எண்கூடரு ளால்நெளவி நோக்கியை
   நன்பூமண மேவிசி ராப்பளி
      யென்பார்மன மேதினி நோக்கிய …… பெருமாளே.

திருப்புகழ் (சிராப்பள்ளி) – அருணகிரிநாதர்

கருத்து – முருகப்பெருமான் சிறப்புகளைக் கூறி அவர் ஆட்கொள்வோம் என்று  உரைத்ததை கூறி உய்வதற்கு இதுவன்றி வேறு உபாயம் இல்லை என்பதை கூறும் பாடல்.

பதவுரை

திந்தோதிமி தீதத என்று பெரிய  ஒலி எழுப்பும் உடுக்கையும், தந்தாதன னாதன தாத்தன என்ற தாளத்துடன் ஒலி எழுப்பும் செம்மையான பூரிகையும், ஆரவாரித்து ஒலி எழுப்பவும் பேரிகையும் வேத முழக்கங்கள் ஒலிக்கவும், சம்காரம் செய்வதில் முதன்மை பெற்றதான வேலாயுதத்தைக் கொண்டு எதிர்த்து வந்த அசுரர்களை கொன்று அவர்களது தலைகளைச் செண்டு போல் விழச்செய்து, அதில் இருந்து வழியும் ரத்தத்தினால் அந்த  இடத்தை சிவந்த காடனெச் செய்து பெரிய மயில்வாகனத்தில் அமரும் முருகனே, சந்திரனையும், கொன்றை இதழையும், பாம்பையும், பெருங்கடல் போன்ற கங்கை நதியையும், எலும்புக் கூடுகளையும் ஒளி நிறைந்த சடைமீது அணிந்துள்ள என்னுடைய தந்தையும் சதாசிவன் வழியில் வந்தவரும் எம் தலைவருமாகிய சிவபெருமான் பெற்று அருளிய புதல்வனே, மனத்தால் அளவிட முடியாத திருவருளை உடைய மான் போன்ற நோக்குடைய வள்ளியை நலம் பொருந்திய அழகுடன் திருமணம் செய்துகொண்டு, சிராப்பள்ளி என்ற திருத்தலத்தின் பெயரை உச்சரிக்கும் பேறு பெற்றவர்களின் மனம் என்ற பூமியில் எழுந்தருளியுள்ள பெருமாளே! தாமரை மலரில் உள்ள பிரமனால் அமைக்கப்பட்டு, இன்பமும்  துன்பமும் நிறைந்த இயந்திரம் போன்ற இந்த உடம்பானது அழியத்துவங்குவதை கண்டப்பின் இந்த உடலானது விரைவில் அழிந்துவிடுமே என்று பயப்படாமல் இருக்கமுடியாது. ஆகவே மனமே, நிலை இல்லாத நம் உடலை நிலைத்திருக்கும் என நம்பி மோசம் போகாதே; கிரெளஞ்ச மலையின் உடலைப் பஞ்சுபோல் தூளாக்கிய வேலாயுதக் கடவுளுக்கு நீங்காத அன்புடையவராக ஆகுவோம்; இதுதான் இன்ப நெறி என்பதை உணர்ந்து  இந்த உடம்பை வீணாக ஒழித்து விடாமல் அவனிடம் யாம் வந்தோம்; இந்த மெய்ந்நெறிதான் மோக்ஷம்; ஆன்றோர்களின் மேலான வாக்கும் இதுதான் என்பதால் இதனைப் பெற்றுக்கொள்; இது மயில்வாகனர் நமக்கு அளித்த அனுமதிச் சீட்டு; நாம் வந்து விரைவில் ஆட்கொள்வோம் என்று முருகன் அனுப்பிய மங்கலம் தரும் திருநீற்றையும் பெற்றுக்கொள்; முருகப் பெருமான் தாமாக வந்தே நம்மை ஆட்கொள்ள மகிழ்ந்திருக்கிறார்; உய்வதற்கு உபாயமான சிவமைந்தனே, குமரக் கடவுளே என்று பேரொலி எழுப்பி துதிப்பதை மறவாதே. இதைத்தவிர நாம் மேற்கொள்ள வேறு என்ன வழிபாட்டு முறைகள் உள்ளன?

விளக்க உரை

  • சிராப்பளி – திருசிராப்பள்ளி திருத்தலம்
  • போருகன் – பிரம்மன்
  • ஆர்ப்பு – பேரொலி, சிரிப்பு, மகிழ்ச்சி, போர், மாத்திரை கடந்த சுருதி, கட்டு, தைத்த முள்ளின் ஒடிந்த கூர்
  • கங்காளம் = ஒரு பெரிய பாத்திர வகை, முதுகெலும்பு, பிணம், குளம்,குட்டை, உணவருந்தும் பெரிய தட்டு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 17 (2020)


பாடல்

மூலம்

ஒருமையுடன் ஈசனருள் ஒங்கிஎன்றுந் தூங்கல்
அருமை அருமை அருமை – பெருமை இடும்(பு)
ஆங்காரங் கோபம் அபிமானம் ஆசைவினை
நீங்காத போதுதா னே

பதப்பிரிப்பு

ஒருமையுடன் ஈசன் அருள் ஒங்கி என்றும் தூங்கல்
அருமை அருமை அருமை – பெருமை இடும்பு
ஆங்காரம் கோபம் அபிமானம் ஆசைவினை
நீங்காத போது தானே

சிவபோகசாரம் – தருமை ஆதீன குரு முதல்வர்

கருத்து – புறச்செயல்கள் அனைத்தும் ஈசன் அருளினால் நிகழ்த்தப்படும் கூத்து என்று உணர்வதை குறிக்கும் பாடல்.

பதவுரை

உயர்ந்த நிலை, மேன்மை, கீர்த்தி போன்றவைகள் குறித்து பெருமை, வெறுப்பு கொண்டு தீங்கு செய்தல், செருக்கு கொண்டு இருத்தல், சினம் கொள்ளுதல், அன்பு பாசம் கொண்டு அபிமானத்துடன் இருத்தல், ஆசை போன்ற வினைகள்  நீங்காத போது மனதில் வேறு எவ்விதமான சிந்தனைகளும் இல்லாமல் அனைத்தும் ஈசன் அருளினால் நிகழ்த்தப்படும் கூத்து என்று இருப்பது அருமையாகும்.

விளக்க உரை

  • இடும்பு – அகந்தை, அவமதிப்பு, வெறுப்பு, கொடுஞ்செயல், தீங்கு, சேட்டை
  • ஆங்காரம் – செருக்கு, அகங்காரம், அபிமானம்
  • தூங்கல் – தொங்கல், தராசு, தாழ்கை, நெருங்குகை, உறக்கக்கலக்கம், சோம்பல், சோர்தல், ஓரிசை, வஞ்சிப்பா ஓசை, கூத்து

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 4 (2020)


பாடல்

மூலம்

உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர்
உண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள்
உண்ணா முலையுமை மைந்தா சரணந் தனமுமொப்பில்
உண்ணா முலையுமை மைந்தா சரணங் சரணுனக்கே

பதப்பிரிப்பு

உண் ஆ முலை உமை மைந்து ஆசு அரண் அம்பரர் உயிர்சேர்
உள் நாம் உலையும் ஐ மை தா சர் அண் நம் அருணை வெற்பாள்
உண் ஆம் முலையும் ஐ மை தா சர நந்தனமும் ஒப்பில்
உண்ணா முலை உமை மைந்தா சரணம் சரண் உனக்கே

கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்

கருத்து – அசுரர்களை அழித்து தேவர்களை காத்தது பற்றியும், பார்வதியின் புத்திரன் என்பது பற்றியும் விளித்து அடைக்கலம் புகுந்தேன் என்று குறிப்பிடும் பாடல்.

பதவுரை

கன்றுகள் மிகுதியாக உண்ணுகின்றதும், பசு இனங்கள் வாழ்கின்ற இடமானதும், முல்லை நிலத்திற்கு தலைவனாகிய திருமாலின் நிறம் போல் கறுத்தும், வலிமையும் உவர்ப்புமுடைய கடலில் ஒளிந்திருக்கின்ற அசுரர்களை மாய்த்து தேவர்களின் மனத்தில் இருந்த பயத்தை நீக்கி அழித்த தெய்வமே,  ஆட்டு வாகனத்தில் ஏறும் உஷ்ணத்தை உடைய அக்கினியின் சொரூபமாகவும், நாம் அடைக்கலம் புகுவதற்கு இடமாகிய அருணாசலத்தில் வீற்றிருக்கும் கருணை கடாஷத்திற்கும் கற்புடமைக்கும் அழகியதும் அஞ்சனம் தீட்டி செவிகளை எட்டிப் பிடிக்கும் அளவிற்கு ஆன விழிகளின் கிருபைக்கும் ஒப்புவமை இல்லாத உண்ணாமுலை என்கிற பார்வதி தேவியின் குமாரனே, நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்.

விளக்க உரை

  • ஆசு – குற்றம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 3 (2020)


பாடல்

புந்தி கலங்கி, மதிம யங்கி
   இறந்தவ ரைப்புறங் காட்டில் இட்டுச்
சந்தியில் வைத்துக் கடமை செய்து
   தக்கவர் இட்டசெந் தீவி ளக்கா
முந்தி அமரர் முழவி னோசை
   திசைகது வச்சிலம் பார்க்க ஆர்க்க,
அந்தியின் மாநடம் ஆடும் எங்கள்
   அப்ப னிடம்திரு ஆலங் காடே

பதினொன்றாம் திருமுறை – மூத்த திருப்பதிகம் –  காரைக்கால அம்மையார்

கருத்து – திருஆலங்காட்டினையும், அதில் உறையும் இறைவனின் பெருமைகளையும் குறிக்கும் பாடல்.

பதவுரை

அறிவு கலங்கி, மதி மயங்கி, இறந்தவர்களை மயானத்தில் வைத்து இறுதிச் சடங்குகளை நிகழ்த்தி ஈமச்சடங்கு செய்யும் உரிமை உடையவர் இட்ட தீயை விளக்காகக் கொண்டு, முன்பு தேவர்களது மத்தளத்தின் ஓசை திசைகள் தோறும் நிறைய, சிலம்புகள் மிகுதியாக ஒலிக்க, யுகமுடிவில் மாநடனம் எனும் ஊழி நடனம் செய்யும் எங்கள் இறைவன் தங்கியிருக்கும் இடம் திருஆலங்காடேயாகும்.

விளக்க உரை

  • புந்தி – புத்தி,
  • மதி – அறிவு
  • அறிவு பெறப்படுவது, மதி இயற்கையாக அமைவது, இறக்கும் போது இவைகள் விலகும் எனும் பொருளில் எழுதப்பட்டது. கலங்கி, மயங்கி  என்றது, இறப்பு வருங்காலத்து நிகழ்வனவற்றைக் குறிப்பிடுவன எனும் பொருளும் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • சந்தி – உறவினர் நண்பர்களது கூட்டம்.
  • கடமை – , ஈமக் கடன், தக்கவர், செய்ய உரிமையுடையவர்
  • முழவு – மத்தளம்,
  • திசை கதுவ – திசைகளை உள்ளடக்கி நிகழ

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 1 (2020)


பாடல்

நிணம்படு முடலை நிலைமையென் றோரேன்
   நெஞ்சமே தஞ்சமென் றிருந்தேன்
கணம்படிந் தேத்திக் கங்குலும் பகலும்
   கருத்தினாற் கைதொழு தெழுவேன்
பணம்படும் அரவம் பற்றிய கையர்
   பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிணம்படு காட்டில் ஆடுவ தாகில்
   இவரலா தில்லையோ பிரானார்

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்துதிருப்பாச்சிலாச் சிராம இறைவரின் திருமேனி அழகைக் கூறி அவரி அன்றி அடியேனைப் காப்பவர் வேறொருவர் இல்லை என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

படம் எடுத்து ஆடக் கூடியதான பாம்பைப் பிடித்த கையை உடையவராகிய திருப்பாச்சிலாச் சிராமத்தில் எழுந்தருளி இருக்கின்ற எம்முடைய கடவுளாராகிய இவரது தன்மை என்னவெனில் பிணம் பொருந்திய காட்டில் ஆடுவதே ஆகும்; இரவும் பகலும் அவரது அடியவர்கள் கூட்டத்தில் சென்று அவர்களின் கருத்தினை ஒத்து அன்போடு துதித்துக் கைகூப்பித் தொழுவேன்கொழுப்பு பொருந்தியதாகிய இவ்வுடம்பை (அழியும் தன்மை உடையது) நிலைத்த தன்மை உடையதென்று நினைக்காமல், நெஞ்சம் இறைவருக்கு உரியது என்று தஞ்சம் அடையத் துணிந்தேன்அடியேனைப் காப்பவர் இவரன்றி வேறொருவர் இல்லை.

விளக்க உரை

  • நிணம் – கொழுப்பு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மாசி – 29 (2020)


பாடல்

கண்டத்தில் நின்றசித் தறிவைப்பாரு
   கண்புருவத் திடைவெளி னொளியைப்பாரு
தண்டுத்த நாசி நுனி வழியேயேறி
   சண்முகமா முத்திரையைத் தாக்கிப்பாரு
அண்டத்தி லொளி தோற்றும் நடுவே நின்று
   அங்குமிங்கு மெங்கி நின்ற அடவைப் பாரு
கண்டத்தின் முனைப்பார்குண் டலியைப்பாரு
   கருவான மூலவா தாரம் பாரே

அகத்தியர்  மெய்ஞானம்

கருத்துஆக்கினையில் காட்சி காணும் அனுபவங்களை விளக்கும் பாடல்.

பதவுரை

எல்லாவற்றுக்கும் ஆதாரமான மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியை பதினாறு இதழ்கள் பொருந்திய தாமரை வடிவம் கொண்டதும், புகையின் நிறம் கொண்டதும், மகேசுவரருக்கு இருப்பிடமானதும் ஆன விசுக்தி எனும் கண்டத்தில் நினைவினை நிறுத்தி உற்று கவனிப்பாயா; பின்னர் சூரியன் எனப்படுவதான வலது கண்ணும், சந்திரன் எனப்படுவதான இடது கண்ணும் சந்திக்கும் இடமாகிய ஆக்கினை எனும் புருவ மத்தியில் ஒளியினைக் காண்பாயாக; அவ்வாறு செய்யும் போது அண்டத்தில் ஒளி தோன்றும் அதன் நடுவில் நின்று அங்கும் இங்கும் எங்கும் என நீக்கமற நிறைந்திருக்கும் அழகினைக் காண்பாயாக.

விளக்க உரை

  • அடவு  – வடிவமைப்பு
  • யோக மரபில் விசுக்தி எனப்படும் கண்டம் முக்கியமானது, பிறப்பினை அறிவிப்பதும், அதை நீங்குவதும் கண்டத்தில் இருந்து தொடங்கும். மாயை கண்டத்திற்கு கீழே செயல்படும் என்பதாலே உமையம்மை ஈசனின் கண்டத்தோடு விஷத்தை நிறுத்தினாள் என்பது இங்கு ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மாசி – 28 (2020)


பாடல்

வேம்பினைப் பேசி விடக்கினை யோம்பி வினைபெருக்கித்
தூம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றந் துணையென் றிருத்திர் தொண்டீர்
ஆம்பலம் பூம்பொய்கை யாரூ ரமர்ந்தா னடிநிழற்கீழ்ச்
சாம்பலைப் பூசிச் சலமின்றித் தொண்டுபட் டுய்ம்மின்களே

நான்காம் திருமுறை –  தேவாரம்  – திருநாவுக்கரசர்

கருத்துதுன்பம் கொண்டு பேசியும், ஊனை பாதுகாத்தும், வினைகளைப் பெருக்குதலும் சுற்றம் துணை என்று இருத்தலும் நீங்கி திருவாரூர் தலைவனின் திருவடித்துணை ஓங்க இருத்தல் பற்றிய பாடல்.

பதவுரை

வேம்பு போன்றதும், துன்பம் தரத் தக்கதுமான கசப்பான சொற்களையே எப்பொழுதும் பேசியும், தசையும், மாமிசமும் நிறைந்ததான இந்த உடலை பாதுகாத்தும், தீவினை செய்வதால் வினைகளை மிகுதியாகத் தேடிக்கொண்டு வயிற்றை உணவால் நிரப்பிச் சுற்றத்தவர்களே நமக்கு நிலையான துணைவர்கள் என்றிருக்கும் தொண்டர்களே! ஆம்பல் பூக்களால் நிறையப் பெற்ற பொய்கைகளை உடைய திருவாருர் எனும்  ஆரூரை உகந்து அருளியிருக்கும் பெருமானுடைய திருவடிகளின் கீழே இருக்கப் பெற்றதான சாம்பலைப் பூசி வஞ்சனையின்றித் தொண்டுகளைச் செய்து கடைத்தேறுங்கள்.

விளக்க உரை

  • நூல் இயற்றியவர் – தருமபுர ஆதின ஸ்தாபகர்
  • தலம் – திருவாரூர்
  • விடக்கு – ஊன்
  • ஓம்புதல் – ஊண்புதல் என்பதன் மரூஉ. ஊணால் ஊனைப் பெருக்கல் ஊண்புதல்.
  • வினை – தொல்வினை, பழவினை (சஞ்சித கர்மம்)  உள் வினை, நிகழ்வினை (பிராரப்த கர்மம்)  மேல்வினை, வருவினை (ஆகாமிய கர்மம்) என்பவற்றுள், நிகழ்வினை நுகர்ச்சியினால்  எய்திப் பெருகும் வருவினையைக் குறித்தது.

திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள்  – ஆம்பல்

புகைப்படம் / தகவல் – இணையம்
  • வேறு பெயர் – அல்லி
  • நீரில் வளரும் கொடியில் பூக்கும் மலர்
  • இரவில் மலர்ந்து காலையில் குவியும் அல்லி மலர் இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன
  • நீர்அளவே ஆகுமாம் நீராம்பல் எனும் ஔவையாரின் பாடல் வரிகளைக் கொண்டு இதன் பழமையை அறியலாம்.
  • மருத்துவ குணங்கள் – நீரிழிவை நீக்கும்;புண்களை ஆற்றும்; வெப்பத்தினால் ஏற்படும் கண் நோய்களைத் தீர்க்கும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மாசி – 27 (2020)


பாடல்

காண்பதும்பொய் கேட்பதும்பொய் காரியம்போலேயிதமாய்ப்
பூண்வதும்பொய் எவ்விடத்தும் போகமும்பொய் மாண்பாகத்
தோற்றியின்ப வெள்ளமாய்த் துன்னிஎன்னுட் சம்பந்தன்
வீற்றிருப்ப தொன்றுமே மெய்

சிவபோகசாரம் – ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்

கருத்துகுரு தன்னுள் வீற்றிருப்பது மட்டுமே மெய்யானது என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

கண்களால் காணப்படும் காட்சிகள் எல்லாம் உண்மையானவை அல்ல; காதுகளால் கேட்கப்படும் ஒலிகள் எல்லாம் உண்மையானவை அல்லமுடிவுறும் செயல்கள் இதமாக தோன்றுவதும் உண்மையானவை அல்ல; இவைகள் எவ்விடத்தில் ஒன்று கூடினாலும் அது உண்மையானது அல்ல; சிறப்பும், பெருமையும், அழகும் உடையதாக தோன்றி இன்ப வெள்ளமாக பாய்ந்து என் உள்ளே சம்பந்தன் வீற்றிருப்பது ஒன்றே மெய்யானது.

விளக்க உரை

  • நூல் இயற்றியவர் – தருமபுர ஆதின ஸ்தாபகர்
  • பூணுதல் – அணிதல், மேற்கொள்ளுதல், விலங்கு முதலியன தரித்தல், சூழ்ந்துகொள்ளுதல், உடைத்தாதல், சிக்கிக்கொள்ளுதல், கட்டப்படுதல், நெருங்கியிறுகுதல்
  • மாண்பு – மாட்சி, சிறப்பு, பெருமை, அழகு
  • புவனம் மாயத் தோற்றம் உடையது எனக்கொண்டால் அதில் உறையும் பொருள்களும் உயிர்களும் மாயைக்கு உட்படும். ஆகவே அதைப் பெற்ற உயிர்களில் தொழில்கள் ஆகிய காணுதல், கேட்டல், செயல்கள் அனைத்தும் பொய் எனும் பொருள் பெறப்படும். ஆன்மா இறையுடன் சம்பந்தப்பட்டது என்பதால் அதில் உறையும் குரு நாதர் மட்டுமே உண்மையானவர் என்பதும் கடைசி இரு வரிகளால் பெறப்படும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மாசி – 21 (2020)


பாடல்

காயம் பலகை கவறைந்து கண் மூன்றா
யாயம் பொருவ தோரைம்பத் தோரக்கரம்
மேய பெருமா னிருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப் பறியேனே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசிவன் தனது மறைத்தல் சத்தியைக் (திரோதான சத்தியை) கொண்டு உயிர்களின் ஆணவ மலத்தை அவையறியாமல் நின்று பக்குவப்படுத்தி வருதல் உள்ளுறையாக உணர்த்தும் பாடல்.

பதவுரை

காயம் எனப்படுவதாகிய உடம்புடன் கூடிய ஆருயிர்களின் வாழ்க்கையில் சூது ஆட்டம் போன்றதான ஆட்டத்தில் உடம்பு பலகையாகவும், மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களும் சூதாட்ட கருவியாகவும், வலம் இடம் புருவ மத்தி ஆகிய மூன்றும் இடமாகவும், ஐம்பத்தோரு எழுத்துக்களும் சூதாடும் காய்கள் நிரப்பும் அறையாகவும் கொண்டு என்றும் ஆன்மாவுடன் பிரிவு இல்லாமல் நின்று பொருந்தி அருள் செய்யும் சிவபெருமான் ஆருயிர்களைக் கையாளாக வைத்து சூதாட நிற்கின்ற மாயக் கவற்றின்வழிச் செய்யும் அவனின் மறைப்பாற்றலின் பண்பை அறியேன்.

விளக்க உரை

  • கவறு – சூதுபொருவது – பொருது
  • வியப்பைத் தரும் சூது – மாயக்கவறு
  • கண் மூன்றாய் என்பதற்கு நெஞ்சம் கண்டம் புருவமத்தி என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது, சூரிய நாடி சந்திர நாடி சுழுமுனை ஆகியவற்றையும் கண் மூன்றாய் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • உயிர்களை நன்னெறியில் செல்ல ஏவிய சிவபெருமான், அதன் பொருட்டு அவைகட்கு வேண்டும் துணைப்பொருள்களை நிரம்பக் கொடுத்திருந்த போதிலும் அவைகள் அவற்றை மாற்று வழியில் செலுத்துதலால், அச்செயலை அவன் மறைந்து நின்று சூதாடி போல் மாற்றுகின்றான்; இவ்வாறு பலகை, களம், உருள் கட்டம் ஆகியவற்றை எல்லாவற்றையும் அறிகின்ற உயிர்கள் அவற்றின் வழித் தம்மை வஞ்சிக்கின்ற சிவன் ஒருவனை அவன் தம்முடன் கூடவேயிருந்தும் அறியவில்லை.
  • மறைப்பு – மறைத்தல் தொழில். அறிதல், அதன் இயல்பினை முற்றும் உணர்தல்

Loading

சமூக ஊடகங்கள்