
பாடல்
இரந்து இரந்து உருக என் மனத்துள்ளே
எழுகின்ற சோதியே இமையோர்
சிரம் தனில் பொலியும் கமலச் சேவடியாய்
திருப்பெருந்துறை உறை சிவனே
நிரந்த ஆகாயம் நீர் நிலம் தீ கால்
ஆய் அவை அல்லை ஆய் ஆங்கே
கரந்தது ஒர் உருவே களித்தனன் உன்னைக்
கண் உறக் கண்டுகொண்டு இன்றே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – அளவிட முடியா சிவனின் அரும் பெரும் செயல்களைக் கூறி, அவனை மனதில் கொண்டு இரந்ததால் சிவன் கண்ணில் தோன்றினான் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
பல காலம் உன்னை நினைத்து அன்பு கொண்டு அதனால் உன்னை எண்ணி எண்ணி உருக, என் மனத்தில் எழுகின்ற சோதியே, இமையாதவர்களாகிய தேவர்களின் தலையில் பொலிவு உடைய தாமரைத் திருவடிகளைக் கொண்டவனே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, பிரளத்திலும் அழிவே இல்லாத ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று ஆகிய ஐம்பூதங்களாகவும், அவை அல்லாத மற்றவையாகவும், உருவமில்லாத அருவமாகவும் தோன்றுகிறவனே, சிவபெருமானே! இன்று உன்னைக் கண்ணால் கண்டு களிக்கின்றேன்.
விளக்க உரை
- கரத்தல் – மறைத்தல்.
- இரந்து இரந்து – உடலாலும் உள்ளத்தாலும் இரந்து எனும் பொருளும், நல்வினைகள் தீவினைகள் அழியுமாறு இரந்தும் என்பதற்காக இருமுறைகள் எனும் பொருளும் பெறப்படும். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
- யோக முறையில் திருப்பெரும்துறை என்பது உடலில் இருக்கும் ஒர் இடம் என்றும் சிவனை அகக் கண்ணால் கண்டதையும் குறிப்பிடுகிறார் எனவும் குறிப்பிடப்படுவது உண்டு.
![]()