
பாடல்
அந்தோமன மேநம தாக்கையை
நம்பாதெயி தாகித சூத்திர
மம்போருக னாடிய பூட்டிது …… இனிமேல்நாம்
அஞ்சாதமை யாகிரி யாக்கையை
பஞ்சாடிய வேலவ னார்க்கிய
லங்காகுவம் வாஇனி தாக்கையை …… ஒழியாமல்
வந்தோமிது வேகதி யாட்சியு
மிந்தாமயில் வாகனர் சீட்டிது
வந்தாளுவம் நாமென வீக்கிய …… சிவநீறும்
வந்தேவெகு வாநமை யாட்கொளு
வந்தார்மத மேதினி மேற்கொள
மைந்தாகும ராவெனு மார்ப்புய …… மறவாதே
திந்தோதிமி தீதத மாத்துடி
தந்தாதன னாதன தாத்தன
செம்பூரிகை பேரிகை யார்த்தெழ …… மறையோதச்
செங்காடென வேவரு மூர்க்கரை
சங்காரசி காமணி வேற்கொடு
செண்டாடிம காமயில் மேற்கொளு …… முருகோனே
இந்தோடிதழ் நாகம காக்கடல்
கங்காளமி னார்சடை சூட்டிய
என்தாதைச தாசிவ கோத்திர …… னருள்பாலா
எண்கூடரு ளால்நெளவி நோக்கியை
நன்பூமண மேவிசி ராப்பளி
யென்பார்மன மேதினி நோக்கிய …… பெருமாளே.
திருப்புகழ் (சிராப்பள்ளி) – அருணகிரிநாதர்
கருத்து – முருகப்பெருமான் சிறப்புகளைக் கூறி அவர் ஆட்கொள்வோம் என்று உரைத்ததை கூறி உய்வதற்கு இதுவன்றி வேறு உபாயம் இல்லை என்பதை கூறும் பாடல்.
பதவுரை
திந்தோதிமி தீதத என்று பெரிய ஒலி எழுப்பும் உடுக்கையும், தந்தாதன னாதன தாத்தன என்ற தாளத்துடன் ஒலி எழுப்பும் செம்மையான பூரிகையும், ஆரவாரித்து ஒலி எழுப்பவும் பேரிகையும் வேத முழக்கங்கள் ஒலிக்கவும், சம்காரம் செய்வதில் முதன்மை பெற்றதான வேலாயுதத்தைக் கொண்டு எதிர்த்து வந்த அசுரர்களை கொன்று அவர்களது தலைகளைச் செண்டு போல் விழச்செய்து, அதில் இருந்து வழியும் ரத்தத்தினால் அந்த இடத்தை சிவந்த காடனெச் செய்து பெரிய மயில்வாகனத்தில் அமரும் முருகனே, சந்திரனையும், கொன்றை இதழையும், பாம்பையும், பெருங்கடல் போன்ற கங்கை நதியையும், எலும்புக் கூடுகளையும் ஒளி நிறைந்த சடைமீது அணிந்துள்ள என்னுடைய தந்தையும் சதாசிவன் வழியில் வந்தவரும் எம் தலைவருமாகிய சிவபெருமான் பெற்று அருளிய புதல்வனே, மனத்தால் அளவிட முடியாத திருவருளை உடைய மான் போன்ற நோக்குடைய வள்ளியை நலம் பொருந்திய அழகுடன் திருமணம் செய்துகொண்டு, சிராப்பள்ளி என்ற திருத்தலத்தின் பெயரை உச்சரிக்கும் பேறு பெற்றவர்களின் மனம் என்ற பூமியில் எழுந்தருளியுள்ள பெருமாளே! தாமரை மலரில் உள்ள பிரமனால் அமைக்கப்பட்டு, இன்பமும் துன்பமும் நிறைந்த இயந்திரம் போன்ற இந்த உடம்பானது அழியத்துவங்குவதை கண்டப்பின் இந்த உடலானது விரைவில் அழிந்துவிடுமே என்று பயப்படாமல் இருக்கமுடியாது. ஆகவே மனமே, நிலை இல்லாத நம் உடலை நிலைத்திருக்கும் என நம்பி மோசம் போகாதே; கிரெளஞ்ச மலையின் உடலைப் பஞ்சுபோல் தூளாக்கிய வேலாயுதக் கடவுளுக்கு நீங்காத அன்புடையவராக ஆகுவோம்; இதுதான் இன்ப நெறி என்பதை உணர்ந்து இந்த உடம்பை வீணாக ஒழித்து விடாமல் அவனிடம் யாம் வந்தோம்; இந்த மெய்ந்நெறிதான் மோக்ஷம்; ஆன்றோர்களின் மேலான வாக்கும் இதுதான் என்பதால் இதனைப் பெற்றுக்கொள்; இது மயில்வாகனர் நமக்கு அளித்த அனுமதிச் சீட்டு; நாம் வந்து விரைவில் ஆட்கொள்வோம் என்று முருகன் அனுப்பிய மங்கலம் தரும் திருநீற்றையும் பெற்றுக்கொள்; முருகப் பெருமான் தாமாக வந்தே நம்மை ஆட்கொள்ள மகிழ்ந்திருக்கிறார்; உய்வதற்கு உபாயமான சிவமைந்தனே, குமரக் கடவுளே என்று பேரொலி எழுப்பி துதிப்பதை மறவாதே. இதைத்தவிர நாம் மேற்கொள்ள வேறு என்ன வழிபாட்டு முறைகள் உள்ளன?
விளக்க உரை
- சிராப்பளி – திருசிராப்பள்ளி திருத்தலம்
- போருகன் – பிரம்மன்
- ஆர்ப்பு – பேரொலி, சிரிப்பு, மகிழ்ச்சி, போர், மாத்திரை கடந்த சுருதி, கட்டு, தைத்த முள்ளின் ஒடிந்த கூர்
- கங்காளம் = ஒரு பெரிய பாத்திர வகை, முதுகெலும்பு, பிணம், குளம்,குட்டை, உணவருந்தும் பெரிய தட்டு