
பாடல்
போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்
கூகின்ற நாவலின் தருங்கனி
ஆகின்ற பைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்
வேகின்ற கூரை விருத்திபெற் றாரே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – சுவாசத்தை யோக நெறியில் பயன்படுத்திக் கொள்ளாதவர், பிராரத்தை அனுபவித்து மறைகின்றவர் ஆகின்றனர் என்பதை எடுத்துக் காட்டும் பாடல்.
பதவுரை
கூவுகின்ற பறவைகள் இருக்கக்கூடியாதான நாவல் மரத்தினில் இருந்து தோன்றி உணவாய் அமைகின்ற உண்ணும் நிலையில் இருக்கும் நாவல் கனிகளில் சில பயன்படாத இடத்தில் உதிர்ந்தும், சில மரத்திற்கு அடியில் உதிர்ந்தும், சில புதர் முதலியவற்றில் விழுந்தும் பிறருக்கு பயன்படாதவாறும் போய்விடுகின்றன; அந்த நாவல் மரத்தை உள்ளடக்கி அமைக்கப்பட்ட குடிலில் ஐவர் வாழ்கின்றனர்; வேறிடத்தில் வளர்ந்த பயிர் தருகின்ற நெல்லை உண்டு வாழ்கின்றனர். அந்தக் குடிலோ சில நாட்களில் வெந்து ஒழிவதாய் உள்ளது.
விளக்க உரை
- நாவல் மரம் – சுவாச கோசம். நாவல் கனி பெரும் பாலும் சாலையோரங்களில் நிற்கும்; அந்த மரங்களில் இருந்து உதிர்ந்து கிடப்பினும் வாழை, மா, பலா இவற்றின் கனிகளைப்போல மக்கள் ஆர்வமுடன் கொள்ளாமை பற்றி, `சுவாசமும் இயற்கையாய் அமைந்தும் அருமை அறியப்படாததாய் உள்ளது` எனும் பொருள் பற்றியது
- அதினின்றும் உணவாகக் கிடைக்கும் கனி – உடலை நிலைபெறுத்துகின்ற சுவாசம். போகின்ற கனி – வெளிச்செல்லும் காற்று (ரேசகம்)
- புகுகின்ற கனி – உள்ளே வரும் காற்று(பூரகம்)
- வித்து – வெளிப் புகுகின்ற காற்றை வெளியே விடாது தடுத்தால் பயன் விளைதல் பற்றியது
- பொய் – அகமும் புறமும் செல்லும் காற்று வீணாவதைக் குறிக்கும்
- பறவைகள் – சுவாச கோசத்தில் உள்ள நரம்பு
- ஆகின்ற – வளர்கின்ற
- பைங்கூழ் – பயிர்; முற்பிறவியில் ஆக்கிய வினை,பிராரத்த விளைவு என்பதை முன்வைத்து ‘போகின்ற பொய்’ – புகுகின்ற வித்தாவது ஆகாமியம்
- ஐவர் – ஐம்பொறிகள்
- கூரை – குடில்; தூல உடம்பு.
- விருத்தி – பிழைப்பு