அமுதமொழி – விகாரி – பங்குனி – 3 (2020)


பாடல்

புந்தி கலங்கி, மதிம யங்கி
   இறந்தவ ரைப்புறங் காட்டில் இட்டுச்
சந்தியில் வைத்துக் கடமை செய்து
   தக்கவர் இட்டசெந் தீவி ளக்கா
முந்தி அமரர் முழவி னோசை
   திசைகது வச்சிலம் பார்க்க ஆர்க்க,
அந்தியின் மாநடம் ஆடும் எங்கள்
   அப்ப னிடம்திரு ஆலங் காடே

பதினொன்றாம் திருமுறை – மூத்த திருப்பதிகம் –  காரைக்கால அம்மையார்

கருத்து – திருஆலங்காட்டினையும், அதில் உறையும் இறைவனின் பெருமைகளையும் குறிக்கும் பாடல்.

பதவுரை

அறிவு கலங்கி, மதி மயங்கி, இறந்தவர்களை மயானத்தில் வைத்து இறுதிச் சடங்குகளை நிகழ்த்தி ஈமச்சடங்கு செய்யும் உரிமை உடையவர் இட்ட தீயை விளக்காகக் கொண்டு, முன்பு தேவர்களது மத்தளத்தின் ஓசை திசைகள் தோறும் நிறைய, சிலம்புகள் மிகுதியாக ஒலிக்க, யுகமுடிவில் மாநடனம் எனும் ஊழி நடனம் செய்யும் எங்கள் இறைவன் தங்கியிருக்கும் இடம் திருஆலங்காடேயாகும்.

விளக்க உரை

  • புந்தி – புத்தி,
  • மதி – அறிவு
  • அறிவு பெறப்படுவது, மதி இயற்கையாக அமைவது, இறக்கும் போது இவைகள் விலகும் எனும் பொருளில் எழுதப்பட்டது. கலங்கி, மயங்கி  என்றது, இறப்பு வருங்காலத்து நிகழ்வனவற்றைக் குறிப்பிடுவன எனும் பொருளும் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • சந்தி – உறவினர் நண்பர்களது கூட்டம்.
  • கடமை – , ஈமக் கடன், தக்கவர், செய்ய உரிமையுடையவர்
  • முழவு – மத்தளம்,
  • திசை கதுவ – திசைகளை உள்ளடக்கி நிகழ

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *