
பாடல்
மூலம்
உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர்
உண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள்
உண்ணா முலையுமை மைந்தா சரணந் தனமுமொப்பில்
உண்ணா முலையுமை மைந்தா சரணங் சரணுனக்கே
பதப்பிரிப்பு
உண் ஆ முலை உமை மைந்து ஆசு அரண் அம்பரர் உயிர்சேர்
உள் நாம் உலையும் ஐ மை தா சர் அண் நம் அருணை வெற்பாள்
உண் ஆம் முலையும் ஐ மை தா சர நந்தனமும் ஒப்பில்
உண்ணா முலை உமை மைந்தா சரணம் சரண் உனக்கே
கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்
கருத்து – அசுரர்களை அழித்து தேவர்களை காத்தது பற்றியும், பார்வதியின் புத்திரன் என்பது பற்றியும் விளித்து அடைக்கலம் புகுந்தேன் என்று குறிப்பிடும் பாடல்.
பதவுரை
கன்றுகள் மிகுதியாக உண்ணுகின்றதும், பசு இனங்கள் வாழ்கின்ற இடமானதும், முல்லை நிலத்திற்கு தலைவனாகிய திருமாலின் நிறம் போல் கறுத்தும், வலிமையும் உவர்ப்புமுடைய கடலில் ஒளிந்திருக்கின்ற அசுரர்களை மாய்த்து தேவர்களின் மனத்தில் இருந்த பயத்தை நீக்கி அழித்த தெய்வமே, ஆட்டு வாகனத்தில் ஏறும் உஷ்ணத்தை உடைய அக்கினியின் சொரூபமாகவும், நாம் அடைக்கலம் புகுவதற்கு இடமாகிய அருணாசலத்தில் வீற்றிருக்கும் கருணை கடாஷத்திற்கும் கற்புடமைக்கும் அழகியதும் அஞ்சனம் தீட்டி செவிகளை எட்டிப் பிடிக்கும் அளவிற்கு ஆன விழிகளின் கிருபைக்கும் ஒப்புவமை இல்லாத உண்ணாமுலை என்கிற பார்வதி தேவியின் குமாரனே, நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்.
விளக்க உரை
- ஆசு – குற்றம்