
பாடல்
செய்யுந் தவஞ்சற்று மில்லாத நான்உன் திருவடிக்கே
கொய்யும் புதுமல ரிட்டுமெய் யன்பர் குழாத்துடனே
கையுஞ் சிரமிசைக் கூப்பிநின் றாடிக் கசிந்துருகி
உய்யும் படிக்கருள் செய்வதென் றோபுலி யூரத்தனே
தாயுமானவர்
கருத்து – புறப்பூசைகளையும், அவ்வாறு தான் செய்யாத புறப்பூசைகளையும் குறிப்பிட்டு தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு தாயுமானவர் வேண்டும் பாடல்.
பதவுரை
தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் வீற்றிருந்து அருளும் தந்தையே, நின் திருவடிக்கு ஆளாகும்படி அதற்கு உரித்தான நல்ல தவம் சிறிதும் புரிந்திலேன்; நின்னுடைய திருவடிக்கு புதியதானதும், அன்றைய தினத்தில் தோன்றியதும் ஆன நாண்மலர் கொய்து, செந்தமிழால் போற்றி பாடி பாடும் மெய்யன்பர்களுடன் கூடிப் பூத்தூவி, கையினை உச்சந்தலை மேல வருமாறு கும்பிட்டு, ஆடுதல் செய்து, கசிந்து உருகி உய்வதற்கு வேண்டுவனவும் செய்யவில்லை. இவையெல்லாம் நின் திருவருளால் செய்து உய்யும்படிக்கு நீ அடியேனுக்கு அருள்புரிவது எந்நாளிலோ?
விளக்க உரை
- அவ்வறு விரைந்து அருளவேண்டும் என்பது குறிப்பு.