
பாடல்
பண்ணப்பா தியானமது குருத்தியானம்
பரமகுரு சீர்பாதந் தியானங் கேளு
உண்ணப்பா கண்ணான மூலந் தன்னில்
முத்தி கொண்ட அக்கினியாஞ் சுவாலை தன்னை
நண்ணப்பா வாசியினால் நன்றாயூதி
நடுமனையைப் பிடித்தேறி நாட்டமாக
வின்ணப்பா கேசரியாம் புருவ மையம்
மேன்மை பெறத் தானிறுத்தி வசிவசி என்னே
அகஸ்தியர் சௌமிய சாகரம் – அகஸ்தியர்
கருத்து – மூலாதாரத்தில் இருந்து சுழிமுனை வழியே அண்ணாக்கு மேல் நின்று தியானம் செய்யும் முறையை கூறும் பாடல்.
பதவுரை
ஆசாரியர்களுக்கு எல்லாம் ஆசாரியனாகிய பரமகுருவின் பாதத்தினை தியானம் செய்யும் முறை ஆகிய குருத் தியானம் என்பதனை கேட்டுச் செய்வாயாக; ஊசித்துளை அளவுள்ள மூலாதாரத்தில் இருந்து முக்தியினை தரும் அக்னி சுவாலைப் போன்றதாகிய சுவாலையினை வாசியினால் பெரிதாக்கி சுழுமுனை வழியாக விருப்பமுடன் மேலேற்றி கேசரி எனப்படும் புருவ மத்தியாகிய ஆக்கினைக்கு மேலாகியதும் மேன்மை உடையதும் ஆகிய சகஸ்ராரத்தின் வாயிலில் நிறுத்தி வசிவசி தியானம் செய்வாயாக.
விளக்க உரை
- கண் – விலங்குகள் ஒளியின் மூலம், முன்னிருக்கும் உருவத்தைக் காண உதவும் உடல் உறுப்பு, விழி, நயனம், ஊசித் துளை, அறிவு, புண்ணின் (வாய்) துளை, இடம், கணு, மரக்கணு
- கேசரி – விண்ணில் உலவுபவன்
- கேசரிமுத்திரையில் அமுததாரணை வழியே அமுதம் பெற்று உண்பவர் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வார் என்பது உபதேசம் செய்யப்படுகிறது. யோக முறை என்பதால் குருமூலமாக அறிக.