சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கோகரணம்

  • சிவன் சுயம்பு மூர்த்தி
  • கோ – பசு, கர்ணம் – காது. பசுவின் காதுபோலக் குழைந்து காணப்படுவதால் இத்தலத்திற்கு இப்பெயர்
  • லிங்கம் மிகச் சிறியதான அளவில் ஆவுடையாரில் அடங்கியிருக்கும்
  • சிறிய அளவுடைய மூலத்தானம்; நடுவிலுள்ள சதுரமேடையில் வட்டமான பீடம்; இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பினால் அறியப்படும் சுவர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடம்; இதன் நடுவிலுள்ள பள்ளத்தின் நடுவில் தொட்டுப்பார்த்து உணரத்தக்க மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம்; பசுவின் காதுபோலக் குழைந்து தோற்றமளிக்கும் அருட்காட்சி
  • விநாயகர் – யானைமுகத்துடனும் இரண்டு திருக்கரங்களோடு நின்ற கோலத்துடன் கூடிய “துவிபுஜ” விநாயகர் –  இவர் திருமுடியில் யானைத் தலையில் இருப்பதுபோல் இருபுறமும் மேடும், நடுவில்  இராவணன் குட்டியதால் ஏற்பட்ட பள்ளமும் கூடிய விக்ரக அமைப்பு
  • கோயில் மதிலுக்கு வெளியே வடபகுதியில் தரைமட்டத்தின் கீழ் தண்ணீரில் பெரிய சிவலிங்கவடிவில் ஆதிககோகர்ணேஸ்வரர் திருக்காட்சி
  • இராவணன் இலங்கை அழியாதிருப்பதன் பொருட்டு கயிலைமலை சென்று சிவபிரானை நோக்கிக் கடுந்தவம் புரிந்து அருள்புரிய வேண்டி நின்றதால் பெருமான் இராவணனுக்கு பிராண லிங்கத்தைக் கொடுத்து இலங்கைக்கு எடுத்துச் சென்று பிரதிட்டை செய்து வழிபட்டு வந்தால் இலங்கை அழியாது எனவும் இச்சிவலிங்கத்தை தலையில் சுமந்து செல்ல வேண்டும், வழியில் இதனைக் கீழே வைத்தால் எடுக்கவாராது என அருளி மறைந்தார். நாரதர் மூலம் இதனை அறிந்த இந்திரன் தேவர்கள் புடைசூழக் கயிலைமலை சென்று விநாயகரை வேண்டியதால்  இந்திரனின் வேண்டுகோளை ஏற்று இராவணன் கோகரணத்தை அடையும் வேளையில் அவன் வயிற்றில் நீர்சுரக்குமாறு செய்ய வருணனை ஏவி தாம் உரைத்தபடி மூன்றுமுறை, அழைத்தும் வராததால் சிவலிங்கத்தைப் பூமியில் வைத்து விட்டார். இராவணன் அந்தணச்சிறுவன் செய்த தவறுக்காக மூன்று முறை அவனது தலையில் குட்டியதால், சிறுவனாக வந்த விநாயகர் தம் உண்மை வடிவை அவனுக்குக் காட்டிப் பந்து போல அவனைத் தூக்கி எறிந்து விளையாயதால் இராவணன் பிழைபொறுக்க வேண்டினான்; இராவணன் தான் செய்த பிழைக்கு வருந்திக் குருதிசோரத் தலையில் குட்டிக்கொண்டு அவரை வழிபட்டு தலையில் குட்டிக்கொண்டு வழிபடுவோர்க்கு வேண்டும் வரங்கள் தரவேண்டும் என விளம்ப இராவணனின் பிழைகளைப் பொறுத்து அவனுக்கு நல்வரங்கள் தந்தருளினார்.
  • 51 சக்தி பீடங்களில் இது கர்ண சக்தி பீடம்
  • திருநாவுக்கரசர், தாம் அருளிய திருஅங்கமாலையில் வைத்துப் பாடியுள்ள திருத்தலம்
  • திருமேனியை மக்கள் தொட்டு நீராட்டி மலர்சூட்டி வழிபடக் கூடிய தலம்
  • வழிபாட்டு முறை – கோடி தீர்த்தத்தில் நீராடல், கடலாடுதல், பிண்டதர்ப்பணம், மீண்டும் நீராடுதல் பின் மகாபலேஸ்வரர் தரிசனம்
  • தமிழ்நாட்டு அமைப்பினின்றும் வேறுபட்ட கோயிலமைப்பு
  • மரணம் அடைந்தவர்களுக்காக பிசாசு மோட்சம் தினமும்

தாம்ரகௌரி உடனாகிய மகாபலேஸ்வரர்

புகைப்படம் - இணையம்

தலம்

திருக்கோகரணம்

பிற பெயர்கள்

ருத்ரயோனி, வருணாவர்த்தம்

இறைவன்

மஹாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்ம லிங்கேஸ்வரர்

இறைவி

கோகர்ணேஸ்வரி, தாம்ரகௌரி

தல விருட்சம்

 

தீர்த்தம்

கோகர்ண தீர்த்தம், தாம்ரகௌரிநதி, கோடிதீர்த்தம், பிரமகுண்ட தீர்த்தம் ஆகியவற்றுடன் கூடிய 33 தீர்த்தங்கள்

விழாக்கள்

மாசி சிவராத்திரி, திரிபுர தகனம் – கார்த்திகை பௌர்ணமி

மாவட்டம்

உத்தர் கன்னடா

திறந்திருக்கும் நேரம் / முகவரி

காலை ௦6:௦௦ AM முதல் 12:3௦ PM வரை
மாலை ௦5:௦௦ PM முதல் ௦8:3௦ PM வரை

அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில்
திருக்கோகர்ணம் – அஞ்சல் – 576 234
08386 – 256167 , 257167

வழிபட்டவர்கள்

பிரமன், அகத்தியர், காமதேனு, மார்க்கண்டேயர், சரஸ்வதி, வசிட்டர், இராவணன், நாகராசன்

பாடியவர்கள்

திருஞானசம்பந்தர் 1 பதிகம், திருநாவுக்கரசர் 1 பதிகம்

நிர்வாகம்

 

இருப்பிடம்

பெங்களூரிலிருந்தும், மங்களூரிலிருந்தும் பேருந்து மார்க்கம்; இரயில் மார்க்கம் – சென்னையிலிருந்து ஹூப்ளி சென்று அங்கிருந்து பேருந்து  மார்க்கம்

இதர குறிப்புகள்

துளுவ நாட்டுத் தலம்

 

பாடியவர்             திருஞானசம்பந்தர்
திருமுறை            3
பதிக எண்           79
திருமுறை எண் 8

பாடல்

வரைத்தல நெருக்கிய முருட்டிரு ணிறத்தவன வாய்களலற
விரற்றலை யுகிர்ச்சிறிது வைத்தபெரு மானினிது மேவுமிடமாம்
புரைத்தலை கெடுத்தமுனி வாணர்பொலி வாகிவினை தீரவதன்மேல்
குரைத்தலை கழற்பணிய வோமம்வில கும்புகைசெய் கோகரணமே

பொருள்

முரட்டுத்தனமும், கரியதான இருண்ட நிறமுமுடைய இராவணனின் பத்து வாய்களும் அலறும்படி, தன் கால் பெருவிரலை ஊன்றி கயிலைமலையின் கீழ் நெருக்கிய சிவபெருமான் வீற்றிருந்து அருளும் இடம் எது எனில் முனிவர்களும், வேத வல்லுநர்களும் தங்களது வினைதீர, ஒலிக்கின்ற கழலினை அணிந்த சிவபெருமானின் திருவடிகளைப் பணிந்து, அரநாமத்தினை ஓதி வேள்விப்புகை பரவுகின்ற திருக்கோகரணம் ஆகும்.

விளக்க உரை

  • வரைத்தலம் – கயிலை மலை
  • முருடு – கடின இயல்பையுடைய
  • இருள் நிறத்தவன் – இருண்ட நிறத்தையுடைய இராவணன்
  • உகிர் – நகம்
  • முனிவாணர் பொலிவாகி – முனிவர்கள் விளங்கி
  • குரைத்து அலை – ஒலித்து அசையும் கழல்

 

பாடியவர்           திருநாவுக்கரசர்
திருமுறை          6
பதிக எண்          49
திருமுறை எண் 2

 

பாடல்

தந்தவத்தன் தன்தலையைத் தாங்கி னான்காண்
சாரணன்காண் சார்ந்தார்க்கின் னமுதா னான்காண்
கெந்தத்தன் காண்கெடில வீரட் டன்காண்
கேடிலிகாண் கெடுப்பார்மற் றில்லா தான்காண்
வெந்தொத்த நீறுமெய் பூசி னான்காண்
வீரன்காண் வியன்கயிலை மேவி னான்காண்
வந்தொத்த நெடுமாற்கும் அறிவொ ணான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே

பதவுரை

உலகினைப் படைத்த பிரமனது மண்டையோட்டை கைகளில் ஏந்தியவனாய், எங்கும் சஞ்சரிப்பவனாய், தன்னை சார்ந்த அடியவர்களுக்கு அமுதமாய், மலரில் மணம்போல எங்கும் பரவியவனாய், அதிகை வீரட்டனாய், என்றும் அழிவில்லாதவனாய் தன்னை அழிப்பாரும் இல்லாதவனாய், திருநீறு பூசியவனாய், தவமாகிய பெருமிதம் உடையவனாய் , பரந்த கயிலாயத்தை விரும்பி உறைபவனாய், தன்னிடத்துத் தோன்றித் தன் கருத்துக்கு ஏற்பக் காத்தல் தொழிலைச் செய்கின்ற திருமாலாலும் உள்ளபடி அறிய ஒண்ணாதவனாய் மேற்குக் கடலை அடுத்த கோகரணப் பெருமான் விளங்குகின்றான்.

விளக்க உரை

  • தந்த அத்தன் – ( உலகத்தைப் ) பெற்ற தந்தை; பிரமன்
  • சாரணன் – எங்கும் சரிப்பவன்
  • கெந்தத்தன் – ( மலரில் ) மணம் போல்பவன்
  • வந்து ஒத்த நெடுமால் – தன்னிடத்துத் தோன்றி , தன்னோடு ஒத்து நின்ற ( முத்தொழில்களுள் ஒன்றைச் செய்கின்ற ) திருமால்

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 14 (2019)


பாடல்

சங்கிரண்டு தாரையொன்று சன்னல்பின்னல் ஆகையால்
மங்கிமாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை
சங்கிரண்டை யும்தவிர்த்து தாரையூத வல்லிரேல்
கொங்கை மங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே

சிவவாக்கியர்

கருத்துசுழுமுனை வழியே வாசி பற்றி நிற்பவர்கள் ஈசனும் ஒன்றாக கூடி வாழும் தன்மை உடையவர்கள் ஆவார் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டு இருப்பதான இடகலை, பிங்கலை எனப்படும் சங்குகள் இரண்டு கொண்டும் சுழுமுனை எனப்படுவதான தாரை கொண்டும் இருப்பதை அறியாமல் உலகில் எத்தனையோ மானிடர்கள் நெருப்பால் சுடப்பட்டு அழிகின்றனர். அவ்வாறு இல்லாமல் இடகலை, பிங்கலை இரண்டையும் தவிர்த்து சுழுமுனை எனப்படுவதான தாரை கொண்டு வாசி பற்றி அதை ஊத வல்லவர்கள் உலகிற்கு அமுது அளிக்கும் அன்னையுடன் கூடியவரான பாகம் உடையவராகிய ஈசனும் ஒன்றாக கூடி வாழ இயலும்.

விளக்க உரை

  • அங்கி – ஆடை, மேலாடை, நெருப்பு, அக்கினி
  • மாளுதல் – சாதல், அழிதல், கழிதல், இயலுதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 13 (2019)


பாடல்

இப்படி யன்றிக் கன்மம் உயிர்இறை வேறுண் டென்று
செப்பிடும் அவர்க்கு மண்ணோர் செய்திடுங் குற்ற மென்னோ
ஒப்பிலா மலடி பெற்ற மகனொரு முயற்கொம் பேறித்
தப்பில்ஆ காயப் பூவைப் பறித்தமை சாற்றி னாரே

திருநெறி 2 – பரபக்கம் – உலகாயதன் மதம் – சிவஞான சித்தியார்

கருத்துஉலகாயர்கள் கொள்கையினை உவகை காட்டி விளக்கி அதை மறுதலித்து ஆன்மா உண்டு எனவும், அதை இயக்க கர்த்தா உண்டு எனவும் கூறும் பாடல்.

பதவுரை

இவ்வாறாக பூதக்கூட்டத்தினால் உயிர் உறையும் உருக்கள்  வாயுக்களுடன் சேர்ந்து முன் ஜென்மங்களில் செய்த கர்மத்தால் பின் தொடரும் என்றும் இதை அனுபவிக்க ஆன்மா உண்டு எனவும் இதனை கூட்டுவிப்பவன் ஆகிய ஒரு கர்த்தா உண்டு எனவும் சமயவாதிகள் கூறுவார்கள். இதனை மறுத்து சமயவாதிகளை மயக்கச் உலகாயர்கள் கூறுவது என்னவெனில் ஒப்புமை செய்ய இயலாத  மலடி பெற்ற மகன் ஒரு முயலின் கொம்பிலே ஏறி ஆகாயத்தில் பூத்த பூவைத் தவறின்றிப் பறித்தான் எனும் தன்மையை ஒத்தது.

விளக்க உரை

  • உலகாயர்கள் – பூதமே தெய்வம், பூதக்கூட்டத்தின் குறைவே கன்மம், பூதக் கூட்டத்தின் நிகழும் உணர்வே ஆன்மா; இவ்வாறு அன்றி வேறு தெய்வமும் கன்மமும் ஆன்மாவுமில்லை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 12 (2019)


பாடல்

சித்திகள் எட்டொடும் திண்சிவ மாக்கிய
சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச்
சத்தியும் மந்திர சாதக போதமும்
பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசிவகுருவால் சிவஞானம் மட்டுமின்றி இன்ன பிறபயன்களும் கைகூடும் என்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

இறை முன்வைத்து ஓதப்படும் பலவகை மந்திரங்களும், அதலால் பெறப்படும் சித்திகளும், அவ்வாறு சாதித்தவனது அறிவு நிலையில் பெறப்படுவதான மெய் ஞானமும், யோகத்தில் நிலைபெற்று நிற்கும் உறுதிப் பாடும், அவ்வாறான யோகத்தால் அடையப்படும் அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய அட்டமா சித்திகளும், வாமை ஜேஷ்டை ரவுத்திரி காளி காலவிகாரணி பலவிகரமணி பலப்ரதமணி என விரிந்து நிற்கின்ற திரோதான சத்தியானது ஒடுக்கமுறையில் இறுதியில் நிற்கும் மனோன்மணியே அருட்சத்தியாய் மாறி அருளி நிற்பதாகவும், அவ்வாறு மட்டும் நில்லாது,  பாசத்தின் பக்கத்தைவிடுத்துச் சிவத்தின் பக்கமாகி பின் அதுவே சிவஞானமாகவும் ஆகி அருட்சத்தியாகி அருளுகின்ற சிவஞானமும், அந்த ஞானத்தின்வழி விளங்கியதும் சுத்தநிலை கொண்டதுமான சிவம் ஆன்மாவைத் தானாகச் செய்யும் முத்தியும் குருவருளால் இனிது கிடைக்கப் பெறும்.

விளக்க உரை

  • போதம் – ஞானம், அறிவு
  • திண்மை – நிலைபேறு; சிவமாகி விட்ட உயிர் சிவத்திடம் இருந்து வேறொன்று ஆகாமை
  • சுத்தம் – சுத்தநிலை
  • தூய்மை – பாசத்தின் பக்கத்தைவிடுத்துச் சிவத்தின் பக்கமாதல்
  • சாதக போதம் – சாதித்தவனது அறிவு நிலை
  • மேலே குறிப்பிடப்பட்ட சக்திகளுடன் சர்வபூதமணி, மனோன்மணி எனவும் விரியும் என்று சில இடங்களில் குறிப்பிடப்படுகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 9 (2019)


பாடல்

பிறவி யென்னுமிக் கடலை நீந்தத்தன்
பேர ருள்தந் தருளினான்
அறவை யென்றடி யார்கள் தங்க
ளருட்கு ழாம்புக விட்டுநல்
உறவு செய்தெனை உய்யக் கொண்ட
பிரான்தன் உண்மைப் பெருக்கமாம்
திறமை காட்டிய சேவ டிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து – பிறவி நீக்கதின்  பொருட்டு அருளிய திறமும், அடியவர் கூட்டத்துடன் இணைத்த திறமும் கூறிய பாடல்.

பதவுரை

பிறவியாகிய இந்தக் கடலை நீந்துவதற்குத் தன்னுடைய பேரருளினை  கொடுத்து அருளினவனும், அவ்வாறான பிறவி கடலை கடக்க துணையில்லாதவன் என்று எண்ணி அதனால் இரக்கம் கொண்டு, அடியார்களுடைய அருள் கூட்டத்தில் புகுவித்தும் அவர்களோடு நல்ல உறவை உண்டாக்கியும் என்னைப் பிழைக்கும்படி ஆட்கொண்ட தலைவனும், பேரருளாகி வல்லமையைக் கொண்டவனும் ஆகிய இறைவனின் உண்மையான  சிவந்த திருவடியின் கீழே, நமது தலை நிலைபெற்று நின்று விளங்கும்.

விளக்க உரை

  • அறவை – துணையிலி
  • உண்மைப் பெருக்கமாம் திறமை – உண்மையினது மிகுதியாகிய ஆற்றல்; சென்னியில் சூட்டிய பொழுதே மயக்கெலாம் அற்று அன்பு பிழம்பாகச் செய்த முறை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 6 (2019)


பாடல்

காடாடு பல்கணம் சூழக் கேழற்
கடும்பின் நெடும்பகல் கான்நடந்த
வேடா மகேந்திர வெற்பா என்னும்
வினையேன் மடந்தைவிம் மாவெருவும்
சேடா என் னும் செல்வர்மூவாயிரர்
செழுஞ்சோதிஅந்தணர் செங்கைதொழும்
கோடா என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே

ஒன்பதாம் திருமுறை – திருவிசைபா – திருப்பல்லாண்டு – திருமாளிகைத் தேவர்

கருத்து – ஈசனின் பெருமைகளைப் போற்றி பாடும் பாடல்.

பதவுரை

பருவம் அடையாத பெண் துன்பமும் பித்தமும் கொண்டு அதனால் விம்முதலும், வெருவதலும் கொண்டு “சுடுகாட்டிலே கூத்தாடும் பல பூதங்களும் உருமாறிச் சூழ்ந்து வர அங்கு கூத்து நிகழ்த்துபவனே, நீண்ட பகற் பொழுது முழுவதும் விரைந்து ஓடிச் சென்ற பன்றியினை விரட்டி காட்டில் பின் தொடர்ந்த வேடனே, மகேந்திர மலைக்குத் தலைவனே, உன் திருவடிகளை ஏத்தியதால் சிறந்த ஞானப்பிரகாசம் அடைந்த மூவாயிர அந்தணர்கள் கைகளால் தொழப்படும் கூத்தனே, மனதை மயக்கும் குணக்குன்றே!” என்று மகிழ்ச்சியினை தருகின்ற தில்லை அம்பலக் கூத்தனைப் பலவாறாக விளிக்கின்றாள்.

விளக்க உரை

  • வாமி – பார்வதி, துர்க்கை
  • ஆச்சி – அம்மா, அக்கா, பாட்டி, ஆசானின் மனைவி
  • காடுஆடு பல்கணம் – சுடுகாட்டில் உடன் ஆடுகின்ற பல பூதக் கூட்டங்கள்
  • கேழற் கடும் பின் – பன்றியினது கடிதாகிய பின்னிடத்தில்
  • கான் – காடு
  • சேடன் – பெருமை உடையவன்
  • செல்வராகிய செழுஞ்சோதி அந்தணர்கள் – சோதி   வேள்வித் தீ; அதை போற்றியதால் செழுஞ் சோதி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 1 (2019)


பாடல்

பூமியிற் பிள்ளையாய் பிறந்தும் வளர்ந்தும்நான்
   பேரான ஸ்தலமு மறியேன்
பெரியோர்கள் தரிசன மொருநாளும் கண்டுநான்
   போற்றிக் கொண்டாடி யறியேன்,
வாமியென்றுனைச் சிவகாமி யென்றே சொல்லி,
   வாயினாற் பாடியறியேன்,
மாதா பிதாவினது பாதத்தை நானுமே
   வணங்கியொரு நாளுமறியேன்,
சாமியென்றே எண்ணிச் சதுருடன் கைகூப்பிச்
   சரணங்கள் செய்து மறியேன்,
சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு,
   சாஷ்டாங்க தெண்ட னறியேன்,
ஆமிந்த பூமியிலடியனைப் போல்மூடன்
   ஆச்சி நீ கண்ட துண்டோ,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
   அம்மை காமாட்சி உமையே

காமாட்சியம்மை விருத்தம்

கருத்து – மனித பிறவி எடுத்து செய்யப்பட வேண்டிய காரியங்கள் எதுவும் செய்யாமல் இருக்கும் தன் போல் மூடன் உண்டோ எனும் தன் நிலை கொண்டு நொந்து பேசும் பாடல்.

பதவுரை

அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே, என் அன்னையே! இந்த பூமிதனில் குழந்தையாக பிறந்தும் வளர்ந்தும் இறை ஆகிய நீ உறையும் இடமாகிய பெரியதான இடத்தினை நான் அறியேன்; எண்ணங்களால் முதிர்ச்சி உடையவர்களாகி எப்பொழுதும் இறை சிந்தனையோடு இருக்கும் பெரியோர்களை தினமும் தரிசித்து அவர்களைப் போற்றிக் கொண்டாடி அறியவில்லை; நீயே உமையம்மை எனும் பார்வதி என்றும் சிவகாமி என்றும் சொல்லி உன்னை வாயினால் புகழ்ந்து பாடுதலை அறியேன்; அன்னை அவள் பாதத்தையும், தந்தை அவர் பாதத்தையும் ஒருநாளும் வணங்காதவனாக இருந்துவிட்டேன்; சாமி என்று கூறும் சாமர்த்தியமும் உபாயமும் உடையவர்களுடன் கை கூப்பி நின்று சரணங்கள் எதும் விளித்து செய்யாது இருந்தேன்; ஞான ஆசிரியர் ஆகிய சற்குருவின் பாதாரங்களைக் கண்டு தலை முதல் பாதம் வரையில்  எட்டு அங்கங்கள் தரையில்  படுமாறு வணங்குதலைச் செய்தல் அறியேன்; இந்த பூமிதனில் என்னைப் போல மூடனைக் கண்டது உண்டோ?

விளக்க உரை

  • வாமி – பார்வதி, துர்க்கை
  • ஆச்சி – அம்மா, அக்கா, பாட்டி, ஆசானின் மனைவி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 30 (2019)


பாடல்

பாரப்பா உதயத்தில் எழுந்தி ருந்து
பதறாமற் சுழுமுனையில் மனத்தை வைத்துக்
காரப்பா பரிதிமதி யிரண்டு மாறிக்
கருவான சுழுமுனையில் உதிக்கும் போது
தேரப்பா அண்ணாக்குள் நின்று கொண்டு
தியங்காமற் சுழுமுனைக்குள் ளடங்கும் பாரு;
சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும்
சிதறாமல் மூன்றும் ஒன்றாய்ச் சேர்ந்து போமே

அகத்தியர் ஞானம்

கருத்து – அண்ணாக்கு தனில் நின்று சிவ ரூபம் காணுதலைப் பற்றிக் கூறும் பாடல்.

பதவுரை

உதய காலத்தில் எழுந்திருந்து மனதில் பதற்றம் கொண்டு அலையவிடாமல் சூரிய சந்திர நாடிகள் சந்தித்து ஒன்று கூடும் இடமான சுழுமுனையில் மனதை வைத்து அண்ட உச்சி, ஜோதி தரிசனம் என்று அழைக்கப்படும் அண்ணாக்கு தனில் நின்று மனதின் இயக்கங்கள் அனைத்தையும் நிறுத்தினால் மனமானது சுழுமுனைக்குள் அடங்கும். எட்டு என்பதைக் குறிக்கக்கூடியதான சிவ நிலையான யோகாக்கினி நிலையில் நின்று கர்மேந்திரியங்கள் மற்றும் ஞானேந்திரியங்களின் பின்னணியில் இருந்து கொண்டு அவற்றின் செயல்களை ஒருங்கிணைத்து, நமக்கு உள்ளே இருந்து அறிவை உண்டாக்குகின்ற, கண்களுக்கு தெரியாத புலனையே உண்டாக்கும் மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம் எனும் நான்கு வகையாக மாறுபட்டு செயல்படுகிற அந்தக்கரணம் சிதறாமல் அருள்வெளிப்படுத்த காரணமாக இருக்கும் இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூன்று நிலைகளில் நிற்க கூடிய சிவத்துடன் கூடி பதினாறு கலைகளையுடைய ஜோதிமயமானதும், ஆனந்தமயம் ஆனதும் ஆன சக்தி ரூபம் அடையலாம்.

விளக்க உரை

  • நான்கும் என்பதை வித்யா கலையான கர்மா, ஞானம், பக்தி, பிரபக்தி எனும் மகாவிஷ்ணு நிலையை என்று பொருள் கூறுபவர்களும் உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 29 (2019)


பாடல்

ஐயிரண்டும் ஆறொன்று மானார் போலும்
அறுமூன்றும் நான்மூன்று மானார் போலும்
செய்வினைகள் நல்வினைக ளானார் போலும்
திசையனைத்து மாய்நிறைந்த செல்வர் போலும்
கொய்மலரங் கொன்றைச் சடையார் போலுங்
கூத்தாட வல்ல குழகர் போலும்
எய்யவந்த காமனையுங் காய்ந்தார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – ஈசனை புற உலகங்களில் அனைத்திலும் நிறைந்து அதன் வடிவமாகவும் இருப்பவன் என்பதையும் அவன் வீரச் செயல்களையும் கூறிய பாடல்.

பதவுரை

இடைமருது எனும் திருத்தலத்தில் மேவிய ஈசனார், செய்யப்படுகின்றன தீவினைகளும் நல்வினைகளுக்கும் கர்ம சாட்சி ஆகி எண் திசைகளுடன் கூடியதான மேல், கீழ் சேர்த்து பத்துத் திசைகளாகவும் அதில்  உள்ள பொருள்கள் யாவுமாய் நிறைந்த செல்வராவார்; ஆறுடன் ஒன்று சேர்ந்ததான ஏழு இசையாகவும் இருப்பவர்;  ரிக், யஜுர், சாமம் மற்றும் அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களாகவும் அதன் அங்கம் ஆகிய  சிக்ஷை  சந்தசு  சோதிடம்  வியாகரணம் நிருத்தம்  கற்பம் எனும் ஆறாகவும், மீமாஞ்சை  நியாயம் புராணம் ஸ்மிருதி எனும் உபாங்கமாகவும், புராணம், நியாயம், மீமாஞ்சை, மிருதி என்னும் நான்காகவும், ஆயுள் வேதம், வில்வேதம், காந்தருவவேதம், அருத்தநூல்  எனும் உபாங்கமாகவும், பூருவமோமாஞ்சை உத்தரமீமாஞ்சை எனும் இரு மீமாஞ்சையாகவும், கெளதம சூத்திரம் காணத சூத்திரம் எனும் இரு நியாயமாகவும் (ஆக பதினெட்டு வித்தைகள்)  இருப்பவர்; ஒவ்வொரு மாதத்திற்கும்  வேறு வேறு பெயர்களால் அழைக்கப்படும் சூரியனான தாதா, அர்யமா, மித்ரா, வருணா, இந்திரா, விவஸ்வான், த்வஷ்டா, விஷ்ணு, அம்சுமான், பகா, பூஷா, பர்ஜனா என பன்னிரெண்டாகவும் இருப்பவர்; புதியதான கொன்றை மலரினை சூடிய சடையினை உடையவர்;  கூத்து நிகழ்த்துதலில் வல்லவரான அவர் என்றும் இளமைத் தோற்றம் கொண்டவர்; தம் மீது மலரம்புகளைச் செலுத்தவந்த மன்மதனைக் கோபித்து அவனை எரித்தவர்.

விளக்க உரை

  • ஐயிரண்டு – பத்துத் திசைகள்.
  • ஆறொன்று – ஏழு இசைகள்.
  • ஐயிரண்டும் ஆறொன்றும் என்பதை முன்வைத்து 10 + 6  எனக் கொண்டு 16 வகைப் பேறுகளை அருளுபவன் எனக் கொள்வாரும் உளர். புறவடிவங்களில் இருக்கும் பிரமாண்டத்தின் அனைத்து வடிவங்களாகவும் அவன் இருக்கிறான் என்பதால் இப்பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • அறுமூன்று – பதினெட்டு வித்தைகள். அறுமூன்று என்பதை முன்வைத்து பதினெட்டு புராணங்கள் என்று கூறுவோர்களும் உளர்.
  • நான்மூன்று – பன்னிரண்டு சூரியர்கள்
  • காய்தல் – உணங்குதல், உலர்தல், சுடுதல், மெலிதல், வருந்தல், விடாய்த்தல், எரித்தல், அழித்தல், விலக்குதல், வெறுத்தல், வெகுளுதல், கடிந்துகூறுதல், வெட்டுதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 28 (2019)


பாடல்

மூலம்

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான்
ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே

பதப்பிரிப்பு

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவனே மறவேன் உனை நான்
ஐவர்க்கு இடம்பெற கால் இரண்டு ஓட்டி அதில் இரண்டு
கை வைத்த வீடு குலையும் முன்னே வந்து காத்தருளே

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்துமுருகப் பெருமானின் பெருமைகளைச் சொல்லி உடல் அழிவதற்கும் முன்னமே தன்னைக் காக்க வேண்டும் என வேண்டும் பாடல்.

பதவுரை

தெய்வீகம் பொருத்தியதும் அழகானதும் ஆன மலையாகிய திருச்செங்கோட்டில் வாழக்கூடியவரான செழுமையான சுடர் போன்றவரே,  கூர்மையான வேலை ஆயுதமாகக் கொண்டு வானில் வாழ்பவர்களுக்கு தலைவனாகவும் தெய்வமாகவும் இருப்பவனே! உன்னை மறவாமல் இருக்கும் பொருட்டு ஐவர் எனப்படுபவர்களாகிய பஞ்ச இந்திரியங்கள் கொண்டும் அதனுடன் இரண்டு காலகளையும், இரண்டு கைகளையும் ஒட்டியதான இந்த உடம்பு எனும் வீடு அழிவதற்கு முன்னரே தேவரீர் அடியேனுக்கு முன் தோன்றிக் காப்பாற்றியருள்வீராக.

விளக்க உரை

  • வை – கூர்மை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 26 (2019)


பாடல்

ஓதிமா மலர்கள் தூவி யுமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கு மெண்டோட் சுடர்மழுப் படையி னானே
ஆதியே யமரர் கோவே யணியணா மலையு ளானே
நீதியா னின்னை யல்லா னினையுமா நினைவி லேனே

நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – ஈசனின் திருமேனி அமைப்பினையும் அவன் அருளும் திறத்தினையும் கூறும் பாடல்.

பதவுரை

பார்வதியினை தன்னில் ஒரு பாகமாக் கொண்டவனே, சோதி வடிவமாக இருப்பவனே, கூத்து நிகழும் காலத்தே அதில் வெளிப்படுத்த அசைகின்ற எட்டு வடிவமாக இருப்பவனே, ஆதியே, தேவர்களுக்குத் தலைவனே, அழகிய அண்ணாமலையில் இருப்பவனே! சிவார்ச்சனைக்கு விதித்த சிறந்த பூக்களான* கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ ஆகியவற்றை முறையாக உன் திருநாமங்களை ஓதி அர்ச்சித்து நின்னை அல்லால் நினையுமாறு செய்து வேறு ஒரு நினைவு இல்லாமல் உன்னைத் தியானிப்பதனைத் தவிர மற்ற பொருள்களை ஊன்றி நினையேன்.

விளக்க உரை

  • ஓதிய நாமங்களுள் – உமையவள் பங்கா, மிக்க சோதியே, துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே , ஆதியே, அமரர்கோவே, அணி யணாமலையுளானே
  • பங்கன் – பாகமுடையவன், இவறலன், ஒன்றும் கொடாதவன்
  • கூத்து நிகழும் காலத்தே அதில் வெளிப்படுத்த அசைகின்ற எட்டுத் தோள்களை உடையவனே எனும் பொருளில் சில இடங்களிலும் எல்லாவுயிரும் உய்யும் பொருட்டு அங்கம் பிரத்தியங்கம் சாங்கம் உபாங்கம் உடைய திருவுருக் கொண்டு அருளினான் என்றும் சில இடங்களில்  விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.  கூத்து வகைகள்  முன் நிறுத்தில் 1) சிவன் – கொடுகொட்டி, பாண்டரங்கம், கபாலம் 2) திருமகள் – பாவை 3) திருமால் – குடம், மல், அல்லியம் 4) குமரன்(முருகன்) – குடை, துடி. 5) எழுவகை மாதர்(சபத கன்னியர்) – துடி 6) அயிராணி (இந்திரன் மனைவி) – கடையம் 7) துர்க்கை – மரக்கால் 8) காமன் – பேடு என இருப்பதால் இப்பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • நீதி – சிவாகம முறையில் வகுக்கப்பட்ட முறைப்படி அல்லாமல் வேறு வகையில் ஓதித் தூவி நினையுமாறு மற்றொவரையும் நினைவு கொள்ளுதல்
  • நின்னையல்லால் நினையுமா நினைவிலேன் –  நினைதல் ( மனம் ) ஓதல் ( வாக்கு ) தூவுதல் ( காயம் ) என்னும் முப்பொறிக்குமுரிய வழிபாடு முன்நிறுத்தி உணர்த்தியது.
  • *புட்ப விதி – கமலை ஞானப்பிரகாசர். காலம் 6-ஆம் நூற்றாண்டு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 23 (2019)


பாடல்

குறியென்ற உலகத்தில் குருக்கள் தானும்
     கொடிய மறை வேதம் எலாம் கூர்ந்துபார்த்து
அறியாமல் பிரமத்தைப் பாராமல்தான்
     அகந்தையாய்ப் பெரியோரை அழும்புபேசி
விரிவான வேடம் இட்டுக் காவிபூண்டு
     வெறும் பிலுக்காய் அலைந்திடுவான் நாயைப் போலே;
பரியாச மாகவும் தான் தண்டும் ஏந்திப்
     பார்தனிலே குறடு இட்டு நடப்பான் பாரே

சித்தர் பாடல்கள் – காகபுசுண்டர்

கருத்து – போலி குருவின் தோற்றத்தினையும் அவர்களின் குண நலன்களையும் கூறி அவ்வாறான குருவினை தேர்ந்தெடுப்பதில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை கூறும் பாடல்.

பதவுரை

போலி குருவாக இருப்பவர்கள் அறிய இயலாத மறை வேதம் எல்லாம் ஓதி அதன் உட்பொருளையும் மெய் ஞானத்தினையும் உணர்ந்த பின்னும் உண்மையான பிரமத்தை அறியாதவர்கள்; மேலும் தான் எனும் அகங்காரம் கொண்டு கற்றறிந்த பெரியோர்களை தாழ்மையாக பேசுபவர்களாக இருப்பார்கள்; குருவினை போன்று  காவி உடை, யோக தண்டம் மற்றும் பாத குறடு இவைகளைக் கொண்ட தோற்றம் உடையவர்களாகவும் பகட்டான தோற்றம் உடையவர்களாகவும்  நாயைப் போல் பொருளுக்கு அலைபவர்களாகவும் இருப்பார்கள்; இவர்கள் நோக்கம் யாவும் பணம் சம்பாதிப்பதிலே குறியாக இருக்கும்.

விளக்க உரை

  • பிலுக்குதல் – விமரிசை, பகட்டான தோற்றம்;பகட்டு, ஆடம்பரம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 22 (2019)


பாடல்

மூலம்

சேயுரு வமைந்த கள்வன் செருவினை இழைக்க லாற்றான்
மாயையி னொன்று காட்டி எனையிவண் மையல் செய்தான்
ஆயது துடைத்தேன் என்றால் ஆரெனக் கொப்புண் டென்றுங்
காயம தழிவி லாதேன் கருத்தழி கின்ற துண்டோ

பதப்பிரிப்பு

சேய் உரு அமைந்த கள்வன் செருவினை இழக்கல் ஆற்றான்
மாயையின் ஒன்று காட்டி எனை இவண் மையல் செய்தான்
ஆயது துடைத்தேன் என்றால் ஆர் எனக்கு ஒப்பு உண்டு என்றும்
காயம் அது அழிவு இலாதேன் கருத்து அழிகின்றது உண்டோ

கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்துமாயை நீக்கம் பெற்ற சூரபன்மன் ஈசனும்  முருகப்பெருமானும்  வேறு வேறு அல்ல ஒன்றே  என்பதை உணர்ந்தியும் தன்னிடத்தில் பற்றுக் கொள்ள வைத்ததையும் கூறும் பாடல்.

பதவுரை

சேய் ஆகிய முருகப் பெருமான் எனும் வடிவாக இருக்கக் கூடிய கள்வன் இவன்; சினத்தையும் வருத்தத்தையும் தருவதான வினைகளை நீக்க வல்லவன்; இவன் காயம் ஆகிய உடலால் அழிவில்லாதவன் எனும் கருந்து அழிக்கப்படும் போது யார் எனக்கு சரி நிகர் சமானமாக இயலும் எனும் காயம் பற்றி மாயக் கருத்து ஒருங்கே தோன்றுகின்றது; தானே மாயையின் வடிவமாக*  இருக்கும் அவன் வெளிப்படுத்த கூடியதான மாயையினால் ஒரு மாய வடிவம் காட்டி அவனிடத்தில் மையல் கொள்ள வைத்தான்.

விளக்க உரை

  • யுத்த காண்டம், சூரபன்மன் வதைப் படலத்தில் வரும் பாடல்
  • * மறைத்தல் (திரோபவம்) – கன்மம் கொண்டு பற்றுக் கொண்ட உயிர்கள் உலக அனுபவங்களில் உழன்று பக்குவம் பெறுவதற்காக சிவன் தன்னை மறைத்து தானே உலகம் என்று தோன்றும்படி காட்டுவதான தொழில் மறைத்தல் எனப்படும். சேய் ஆனதால் இது முருகப் பெருமானுக்கும் பொருந்தும்
  • செறுதல் – அடக்குதல், தடுத்தல், சினத்தல், வெறுத்தல், வருத்துதல், வெல்லுதல், அழித்தல், வேறுபடுதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 21 (2019)


பாடல்

தானே கழறித் தணியவும் வல்லனாய்த்
தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்
தானே தனிநடங் கண்டவள் தன்னையும்
தானே வணங்கித் தலைவனு மாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து –  சக்தியை வழிபாடு செய்யும் அன்பர்களின் சில குணங்களை எடுத்துக் கூறும் பாடல்.

பதவுரை

பக்குவ முதிர்ச்சியால் நவாக்கரி  சக்கரத்தில் உறையும் சத்தியை வழிபடுபவன், தனது தவற்றை உணர்ந்து தானே திருத்தி கொள்ள தக்கவனாகவும், தான் ஆய்ந்து உணர்ந்தவற்றை தான் உணர்ந்த வகையில் பிறருக்குச் சொல்லத் தக்கவனாகவும், இறைவனின் ஒப்பற்ற திருநடனத்தை எப்பொழுதும் காண்பவளாகிய சத்தியையும் தானே விரும்பி வழிபட்டு தலைவனாகவும் விளங்குவான்.

விளக்க உரை

  • நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.
  • தனி நடம் தானே கண்டவள் – ஊழிக் காலத்திற்கு பின்னான படைப்பிற்கு முன்னும், படைக்கப்பட்டவைகளைக் காக்கும் காலத்திலும், ஊழிக் கால அழிப்பிற்குப் பின்னும் திரு நடம் காண்பவள். அவ்வாறு காண்பவள் சத்தியன்றிப் பிறர் இல்லை என்பதை கூறுகிறது. சிவசக்தி இடத்தில் பேதம் இல்லை என்பதால் தானே பாத்திரமாகவும் தானே சாட்சி பாவமாகவும் இருக்கிறாள் எனவும் கூறலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • கழறுதல் – இடித்துத் திருத்தல்.
  • தணிதல் – அடங்குதல்.
  • நினைத்தல் – காரியம் தோன்ற நின்றது.
  • தானே வணங்குதல் – பிறர் தூண்டுதலின்றி  தானே இயல்பால் வணங்குதல்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 20 (2019)


பாடல்

நடந்திடும் நாவினுள் நன்மைகள் எல்லாம்
தொடர்ந்திடும் சொல்லொடு சொற்பொருள்கள் [தானும்
கடந்திடும் கல்விக் கரசிவளாகப்
படர்ந்திடும் பாரில் பகையில்லை தானே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து –  வாகீசுவரி வழிபாட்டின் மேன்மைச் சொல்லி அவர்கள் நிறைபுலமை உடையவர்கள் ஆவர்கள் என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

நவாக்கரி சக்கர சத்தி ஆனவளாள் இந்த வாகீசுவரி;  ஆதலின் இவளது அருள் கிடைக்கப் பெற்ற அடியவர்க்கு அவர்கள் நாவில் வழக்கும் செய்யுளுமாய் உரைத்த சொல்லாகவும் சொல் பொருளாகவும் இருப்பதால்  வேண்டிய நன்மைகள் யாவும் அவர்கள் உரைத்து சொன்ன அளவிலே முடியும். பரந்து விரிந்து கிடக்கின்ற இவ்வுலகில் அனைவரும் நண்பராகவும்  உறவினரும் ஆனதால் எந்த ஒரு இடத்திலும் அவர்களுக்கு  பகையாவர் இல்லை.

விளக்க உரை

  • நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.
  • ‘கல்விக் கரசிவ ளாக’ என்பதனை முதலில் கொண்டு உரைக்க வாகீஸ்வரி எனும் பொருள் படும்.
  • படர்ந்திடும் பார்  – பிரபஞ்சம்
  • கல்வியைக் கரை கண்டவர்க்கு, `யாதானும் நாடாம் ஊராம்` என்பது பற்றியும், ‘கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்பது பற்றியும் பகையில்லை எனும் சொல்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 19 (2019)


பாடல்

ஐம்முத லாக அமர்ந்தெழு சக்கரம்
ஐம்முத லாக அமர்ந்திரீம் ஈறாகும்
ஐம்முத லாகி யவற்றுடை யாளை
மைம்முத லாக வழுத்திடு நீயே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து –  இச்சக்கர வழிபாட்டின் சிறப்புகளைக் கூறி அது அஞ்ஞானத்தைப் போக்கும் என்பதை உணர்த்தும் பாடல்.

பதவுரை

நவாக்கரி சக்கர வகைகளுள் `ஐம்` எனும் பீஜத்தை முதலாகப் பொருந்திச் செல்லுகின்ற வகை ஒன்று உளது; அவ்வாறான  அந்த முறையானது `ஐம்` என்பதை முதலாகப் பொருந்திப் பின்பு `ஹ்ரீம்` என்பதை முடிவில் உடையதாகும். அந்த `ஐம்` எனும் பீஜத்தை முதலாகக் கொண்டும் மற்றும் அனைத்து எழுத்துக்களையும் தன்னுடையனவாக உடைய அந்தச் சக்கர சத்தியையே உன்னுடைய அறியாமையைப் போக்கி மெய்யறிவினை தரும் தலைவியாக அறிந்து நீ துதிசெய்.

விளக்க உரை

  • நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.
  • அவ்வாறு துதித்தால் அறியாமை நீங்கி மெய்யறிவு பிறக்கும் என்பது உட்கருத்து.
  • மை – இருள்; மலம்.  அதனை ஏற்றவழியால் கழுவுபவள் எனும் பொருள் பற்றியது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 18 (2019)


பாடல்

கூறுமின் எட்டுத் திசைக்கும் தலைவியை
ஆறுமின் அண்டத் தமரர்கள் வாழ்வெனல்
மாறுமின் வையம் வரும்வழி தன்னையும்
தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து –  இந்த நவாக்கிரி சக்கர வழிபாட்டினை முத்தியை விரும்பிச் செய்தல் சிறந்ததாகும் என்று கூறும் பாடல்.

பதவுரை

உலகின் வரையறை செய்யப்பட்ட சில பகுதிகளுக்கு மட்டும்  தலைவராக உள்ள தேவர்களது வாழ்வு வேண்டும் என்னும் ஆசை நீக்குங்கள்; இக்காரணம் பற்றி மீண்டும் மீண்டும் இவ்வுலகில் பிறக்கும் நிலையையும் நீங்கி பிறவி சங்கிலியில் இருந்து விடுதலை பெறுங்கள்; நவாக்கிரி சக்கரத்தில் உறையும் சத்தியானவள் எல்லா உலகங்களையும் உடையவள் என்பதை அறிந்து அவளை துதியுங்கள்; முடிவாக அந்த சத்தியின் திருவடியைச் சேர்ந்து மயக்கமெல்லாம் அற்றுத் தெளிவு பெறுங்கள்.

விளக்க உரை

  • நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.
  • ஆறுதல் – தணிதல்; நீங்குதல்.
  • வாழ்வு எனல் – வாழ்வு வேண்டும் என விரும்புதல்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 17 (2019)


பாடல்

பேறுடை யாள்தன் பெருமையை எண்ணிடில்
நாடுடை யார்களும் நம்வச மாகுவர்
மாறுடை யார்களும் வாழ்வது தான்இலை
கூறுடை யாளையும் கூறுமின் நீரே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து –  அனைத்துப் பேற்றையும் சத்தி தரவல்லவள் என்பதைக் கூறும் பாடல்

பதவுரை

பெறத் தக்கது என்று எண்ணக் கூடிய பேறுகள் அனைத்திற்கும் உரியவளாகிய சத்தியின் பெருமையை அறிந்து அவளை வழிபட்டால் நாட்டினை ஆளும் மன்னரும் நம் வசப்படுவர்; நம் கருத்திற்கு எதிரானவர்களான பகைவர்கள் உயிர்த்திருக்க மாட்டார்கள்; ஆதலினால், சிவனது பாகம் எனப்படுவதான ஒரு கூற்றைத் தனதாக உடைய அவளை நீங்கள் துதியுங்கள்.

விளக்க உரை

  • நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.
  • எண்ணுதல் – .இது தன் காரியம் தோன்ற நிற்பதன் பொருட்டு ஆய்ந்தளித்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 16 (2019)


பாடல்

அறிந்திடு வார்கள் அமரர்க ளாகத்
தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்
பரிந்திடு வானவன் பாய்புனல் சூடி
முரிந்திடு வாளை முயன்றிடும் நீரே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து –  நவாக்கரி  சக்கரத்தில் உறையும் உமை சத்தி தன் பெருமைகளை கூறும் பாடல்

பதவுரை

மெய்யறிவு உடையோர் பிறப்பின்மையின் காரணமாக உண்மை அமரர்களாதல் அவர்களால்  அறிந்து வழிபடுகின்ற தேவதேவனும், வானத்தைப் கிழித்துக் கொண்டு கீழே பாய்ந்த வலிய ஆகாய கங்கையை தன்  சடையில் சூடிக்கொண்டவனும் ஆகிய சிவப் பரம்பொருள் பணிகின்ற சத்தியை நீங்கள் வழிபட்டு மேற்கூறிய (முந்தைய பாடல்களில் குறிப்பிடப்பட்டவை) பயன்களைப் பெறுங்கள்.

விளக்க உரை

  • நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.
  • அமரர் – இறவாதவர்கள்; மார்க்கண்டேயர் போன்ற ரிஷிகள் எனவும் கொள்ளலாம்.
  • வானோர் – வானுலகில் உள்ளவர்.
  • பாய்புனல் சூடி – திருச்சடையில் புல் நுனிமேல் துளியளவாக மலர் போல் பாய்ந்து வந்த கங்கையை எளிதில் ஏற்றமை குறித்து சூடி எனும் சொல்.
  • முரிதல் – வளைதல்; நாயக நாயகி பாவம் பற்றி இன்பச்சுவை தோன்றச் சிவன் உமையின் ஊடலைத் தீர்க்க அவளை அடிபணிவதாக கூறும் இலக்கிய மரபினை இங்குச் சத்தியின் பெருமை புலப்படுதற்கு எடுத்தாளப்பட்டு இருக்கிறது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 15 (2019)


பாடல்

நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம்
கடந்திடும் காலனும் கண்ணிய நாளும்
படர்ந்திடும் நாமமும் பாய்கதிர் போல
அடைந்திடும் வண்ணம் அடைந்திடு நீயே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து –  நவாக்கரி சக்கர வழிபாட்டின் இம்மைப் பயன்களைக் கூறும் பாடல்

பதவுரை

நவாக்கரி  சக்கரத்தின் மீது நீ அன்பு கொண்டு அதுபற்றி நின்றால் இவ்வுலகில் நீ நினைக்கின்ற நன்மைகள் எல்லாம் நினைத்தபடியே முடியும்; காலன் எனப்படுபவனாகிய கூற்றுவன் உன்னைக் கொண்டுபோவதற்குக் குறித்துவைத்த நாள் அதுவும் அங்ஙனம் உயிரினைக் கொண்டுபோகாமலே கடந்துவிடும்; உனது பெயர் உலகம் எங்கும் பரவும்; உடம்பின் நிறம் பகலவனது விரிந்து வீசுகின்ற கதிர்கள் போல மாறும்; இப் பயன்களை எல்லாம் இவ்வகையில் நீ எய்துவாயாக.

விளக்க உரை

  • நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம் , ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.

Loading

சமூக ஊடகங்கள்