
பாடல்
பாரப்பா உதயத்தில் எழுந்தி ருந்து
பதறாமற் சுழுமுனையில் மனத்தை வைத்துக்
காரப்பா பரிதிமதி யிரண்டு மாறிக்
கருவான சுழுமுனையில் உதிக்கும் போது
தேரப்பா அண்ணாக்குள் நின்று கொண்டு
தியங்காமற் சுழுமுனைக்குள் ளடங்கும் பாரு;
சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும்
சிதறாமல் மூன்றும் ஒன்றாய்ச் சேர்ந்து போமே
அகத்தியர் ஞானம்
கருத்து – அண்ணாக்கு தனில் நின்று சிவ ரூபம் காணுதலைப் பற்றிக் கூறும் பாடல்.
பதவுரை
உதய காலத்தில் எழுந்திருந்து மனதில் பதற்றம் கொண்டு அலையவிடாமல் சூரிய சந்திர நாடிகள் சந்தித்து ஒன்று கூடும் இடமான சுழுமுனையில் மனதை வைத்து அண்ட உச்சி, ஜோதி தரிசனம் என்று அழைக்கப்படும் அண்ணாக்கு தனில் நின்று மனதின் இயக்கங்கள் அனைத்தையும் நிறுத்தினால் மனமானது சுழுமுனைக்குள் அடங்கும். எட்டு என்பதைக் குறிக்கக்கூடியதான சிவ நிலையான யோகாக்கினி நிலையில் நின்று கர்மேந்திரியங்கள் மற்றும் ஞானேந்திரியங்களின் பின்னணியில் இருந்து கொண்டு அவற்றின் செயல்களை ஒருங்கிணைத்து, நமக்கு உள்ளே இருந்து அறிவை உண்டாக்குகின்ற, கண்களுக்கு தெரியாத புலனையே உண்டாக்கும் மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம் எனும் நான்கு வகையாக மாறுபட்டு செயல்படுகிற அந்தக்கரணம் சிதறாமல் அருள்வெளிப்படுத்த காரணமாக இருக்கும் இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூன்று நிலைகளில் நிற்க கூடிய சிவத்துடன் கூடி பதினாறு கலைகளையுடைய ஜோதிமயமானதும், ஆனந்தமயம் ஆனதும் ஆன சக்தி ரூபம் அடையலாம்.
விளக்க உரை
- நான்கும் என்பதை வித்யா கலையான கர்மா, ஞானம், பக்தி, பிரபக்தி எனும் மகாவிஷ்ணு நிலையை என்று பொருள் கூறுபவர்களும் உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.