
பாடல்
ஐம்முத லாக அமர்ந்தெழு சக்கரம்
ஐம்முத லாக அமர்ந்திரீம் ஈறாகும்
ஐம்முத லாகி யவற்றுடை யாளை
மைம்முத லாக வழுத்திடு நீயே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – இச்சக்கர வழிபாட்டின் சிறப்புகளைக் கூறி அது அஞ்ஞானத்தைப் போக்கும் என்பதை உணர்த்தும் பாடல்.
பதவுரை
நவாக்கரி சக்கர வகைகளுள் `ஐம்` எனும் பீஜத்தை முதலாகப் பொருந்திச் செல்லுகின்ற வகை ஒன்று உளது; அவ்வாறான அந்த முறையானது `ஐம்` என்பதை முதலாகப் பொருந்திப் பின்பு `ஹ்ரீம்` என்பதை முடிவில் உடையதாகும். அந்த `ஐம்` எனும் பீஜத்தை முதலாகக் கொண்டும் மற்றும் அனைத்து எழுத்துக்களையும் தன்னுடையனவாக உடைய அந்தச் சக்கர சத்தியையே உன்னுடைய அறியாமையைப் போக்கி மெய்யறிவினை தரும் தலைவியாக அறிந்து நீ துதிசெய்.
விளக்க உரை
- நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.
- அவ்வாறு துதித்தால் அறியாமை நீங்கி மெய்யறிவு பிறக்கும் என்பது உட்கருத்து.
- மை – இருள்; மலம். அதனை ஏற்றவழியால் கழுவுபவள் எனும் பொருள் பற்றியது.