
பாடல்
நடந்திடும் நாவினுள் நன்மைகள் எல்லாம்
தொடர்ந்திடும் சொல்லொடு சொற்பொருள்கள் [தானும்
கடந்திடும் கல்விக் கரசிவளாகப்
படர்ந்திடும் பாரில் பகையில்லை தானே.
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – வாகீசுவரி வழிபாட்டின் மேன்மைச் சொல்லி அவர்கள் நிறைபுலமை உடையவர்கள் ஆவர்கள் என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
நவாக்கரி சக்கர சத்தி ஆனவளாள் இந்த வாகீசுவரி; ஆதலின் இவளது அருள் கிடைக்கப் பெற்ற அடியவர்க்கு அவர்கள் நாவில் வழக்கும் செய்யுளுமாய் உரைத்த சொல்லாகவும் சொல் பொருளாகவும் இருப்பதால் வேண்டிய நன்மைகள் யாவும் அவர்கள் உரைத்து சொன்ன அளவிலே முடியும். பரந்து விரிந்து கிடக்கின்ற இவ்வுலகில் அனைவரும் நண்பராகவும் உறவினரும் ஆனதால் எந்த ஒரு இடத்திலும் அவர்களுக்கு பகையாவர் இல்லை.
விளக்க உரை
- நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.
- ‘கல்விக் கரசிவ ளாக’ என்பதனை முதலில் கொண்டு உரைக்க வாகீஸ்வரி எனும் பொருள் படும்.
- படர்ந்திடும் பார் – பிரபஞ்சம்
- கல்வியைக் கரை கண்டவர்க்கு, `யாதானும் நாடாம் ஊராம்` என்பது பற்றியும், ‘கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்பது பற்றியும் பகையில்லை எனும் சொல்.