
பாடல்
தானே கழறித் தணியவும் வல்லனாய்த்
தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்
தானே தனிநடங் கண்டவள் தன்னையும்
தானே வணங்கித் தலைவனு மாமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – சக்தியை வழிபாடு செய்யும் அன்பர்களின் சில குணங்களை எடுத்துக் கூறும் பாடல்.
பதவுரை
பக்குவ முதிர்ச்சியால் நவாக்கரி சக்கரத்தில் உறையும் சத்தியை வழிபடுபவன், தனது தவற்றை உணர்ந்து தானே திருத்தி கொள்ள தக்கவனாகவும், தான் ஆய்ந்து உணர்ந்தவற்றை தான் உணர்ந்த வகையில் பிறருக்குச் சொல்லத் தக்கவனாகவும், இறைவனின் ஒப்பற்ற திருநடனத்தை எப்பொழுதும் காண்பவளாகிய சத்தியையும் தானே விரும்பி வழிபட்டு தலைவனாகவும் விளங்குவான்.
விளக்க உரை
- நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.
- தனி நடம் தானே கண்டவள் – ஊழிக் காலத்திற்கு பின்னான படைப்பிற்கு முன்னும், படைக்கப்பட்டவைகளைக் காக்கும் காலத்திலும், ஊழிக் கால அழிப்பிற்குப் பின்னும் திரு நடம் காண்பவள். அவ்வாறு காண்பவள் சத்தியன்றிப் பிறர் இல்லை என்பதை கூறுகிறது. சிவசக்தி இடத்தில் பேதம் இல்லை என்பதால் தானே பாத்திரமாகவும் தானே சாட்சி பாவமாகவும் இருக்கிறாள் எனவும் கூறலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
- கழறுதல் – இடித்துத் திருத்தல்.
- தணிதல் – அடங்குதல்.
- நினைத்தல் – காரியம் தோன்ற நின்றது.
- தானே வணங்குதல் – பிறர் தூண்டுதலின்றி தானே இயல்பால் வணங்குதல்.