
பாடல்
அறிந்திடு வார்கள் அமரர்க ளாகத்
தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்
பரிந்திடு வானவன் பாய்புனல் சூடி
முரிந்திடு வாளை முயன்றிடும் நீரே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – நவாக்கரி சக்கரத்தில் உறையும் உமை சத்தி தன் பெருமைகளை கூறும் பாடல்
பதவுரை
மெய்யறிவு உடையோர் பிறப்பின்மையின் காரணமாக உண்மை அமரர்களாதல் அவர்களால் அறிந்து வழிபடுகின்ற தேவதேவனும், வானத்தைப் கிழித்துக் கொண்டு கீழே பாய்ந்த வலிய ஆகாய கங்கையை தன் சடையில் சூடிக்கொண்டவனும் ஆகிய சிவப் பரம்பொருள் பணிகின்ற சத்தியை நீங்கள் வழிபட்டு மேற்கூறிய (முந்தைய பாடல்களில் குறிப்பிடப்பட்டவை) பயன்களைப் பெறுங்கள்.
விளக்க உரை
- நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.
- அமரர் – இறவாதவர்கள்; மார்க்கண்டேயர் போன்ற ரிஷிகள் எனவும் கொள்ளலாம்.
- வானோர் – வானுலகில் உள்ளவர்.
- பாய்புனல் சூடி – திருச்சடையில் புல் நுனிமேல் துளியளவாக மலர் போல் பாய்ந்து வந்த கங்கையை எளிதில் ஏற்றமை குறித்து சூடி எனும் சொல்.
- முரிதல் – வளைதல்; நாயக நாயகி பாவம் பற்றி இன்பச்சுவை தோன்றச் சிவன் உமையின் ஊடலைத் தீர்க்க அவளை அடிபணிவதாக கூறும் இலக்கிய மரபினை இங்குச் சத்தியின் பெருமை புலப்படுதற்கு எடுத்தாளப்பட்டு இருக்கிறது