
பாடல்
பேறுடை யாள்தன் பெருமையை எண்ணிடில்
நாடுடை யார்களும் நம்வச மாகுவர்
மாறுடை யார்களும் வாழ்வது தான்இலை
கூறுடை யாளையும் கூறுமின் நீரே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – அனைத்துப் பேற்றையும் சத்தி தரவல்லவள் என்பதைக் கூறும் பாடல்
பதவுரை
பெறத் தக்கது என்று எண்ணக் கூடிய பேறுகள் அனைத்திற்கும் உரியவளாகிய சத்தியின் பெருமையை அறிந்து அவளை வழிபட்டால் நாட்டினை ஆளும் மன்னரும் நம் வசப்படுவர்; நம் கருத்திற்கு எதிரானவர்களான பகைவர்கள் உயிர்த்திருக்க மாட்டார்கள்; ஆதலினால், சிவனது பாகம் எனப்படுவதான ஒரு கூற்றைத் தனதாக உடைய அவளை நீங்கள் துதியுங்கள்.
விளக்க உரை
- நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.
- எண்ணுதல் – .இது தன் காரியம் தோன்ற நிற்பதன் பொருட்டு ஆய்ந்தளித்தல்