
பாடல்
பூமியிற் பிள்ளையாய் பிறந்தும் வளர்ந்தும்நான்
பேரான ஸ்தலமு மறியேன்
பெரியோர்கள் தரிசன மொருநாளும் கண்டுநான்
போற்றிக் கொண்டாடி யறியேன்,
வாமியென்றுனைச் சிவகாமி யென்றே சொல்லி,
வாயினாற் பாடியறியேன்,
மாதா பிதாவினது பாதத்தை நானுமே
வணங்கியொரு நாளுமறியேன்,
சாமியென்றே எண்ணிச் சதுருடன் கைகூப்பிச்
சரணங்கள் செய்து மறியேன்,
சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு,
சாஷ்டாங்க தெண்ட னறியேன்,
ஆமிந்த பூமியிலடியனைப் போல்மூடன்
ஆச்சி நீ கண்ட துண்டோ,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே
காமாட்சியம்மை விருத்தம்
கருத்து – மனித பிறவி எடுத்து செய்யப்பட வேண்டிய காரியங்கள் எதுவும் செய்யாமல் இருக்கும் தன் போல் மூடன் உண்டோ எனும் தன் நிலை கொண்டு நொந்து பேசும் பாடல்.
பதவுரை
அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே, என் அன்னையே! இந்த பூமிதனில் குழந்தையாக பிறந்தும் வளர்ந்தும் இறை ஆகிய நீ உறையும் இடமாகிய பெரியதான இடத்தினை நான் அறியேன்; எண்ணங்களால் முதிர்ச்சி உடையவர்களாகி எப்பொழுதும் இறை சிந்தனையோடு இருக்கும் பெரியோர்களை தினமும் தரிசித்து அவர்களைப் போற்றிக் கொண்டாடி அறியவில்லை; நீயே உமையம்மை எனும் பார்வதி என்றும் சிவகாமி என்றும் சொல்லி உன்னை வாயினால் புகழ்ந்து பாடுதலை அறியேன்; அன்னை அவள் பாதத்தையும், தந்தை அவர் பாதத்தையும் ஒருநாளும் வணங்காதவனாக இருந்துவிட்டேன்; சாமி என்று கூறும் சாமர்த்தியமும் உபாயமும் உடையவர்களுடன் கை கூப்பி நின்று சரணங்கள் எதும் விளித்து செய்யாது இருந்தேன்; ஞான ஆசிரியர் ஆகிய சற்குருவின் பாதாரங்களைக் கண்டு தலை முதல் பாதம் வரையில் எட்டு அங்கங்கள் தரையில் படுமாறு வணங்குதலைச் செய்தல் அறியேன்; இந்த பூமிதனில் என்னைப் போல மூடனைக் கண்டது உண்டோ?
விளக்க உரை
- வாமி – பார்வதி, துர்க்கை
- ஆச்சி – அம்மா, அக்கா, பாட்டி, ஆசானின் மனைவி