அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 12 (2019)


பாடல்

சித்திகள் எட்டொடும் திண்சிவ மாக்கிய
சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச்
சத்தியும் மந்திர சாதக போதமும்
பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசிவகுருவால் சிவஞானம் மட்டுமின்றி இன்ன பிறபயன்களும் கைகூடும் என்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

இறை முன்வைத்து ஓதப்படும் பலவகை மந்திரங்களும், அதலால் பெறப்படும் சித்திகளும், அவ்வாறு சாதித்தவனது அறிவு நிலையில் பெறப்படுவதான மெய் ஞானமும், யோகத்தில் நிலைபெற்று நிற்கும் உறுதிப் பாடும், அவ்வாறான யோகத்தால் அடையப்படும் அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய அட்டமா சித்திகளும், வாமை ஜேஷ்டை ரவுத்திரி காளி காலவிகாரணி பலவிகரமணி பலப்ரதமணி என விரிந்து நிற்கின்ற திரோதான சத்தியானது ஒடுக்கமுறையில் இறுதியில் நிற்கும் மனோன்மணியே அருட்சத்தியாய் மாறி அருளி நிற்பதாகவும், அவ்வாறு மட்டும் நில்லாது,  பாசத்தின் பக்கத்தைவிடுத்துச் சிவத்தின் பக்கமாகி பின் அதுவே சிவஞானமாகவும் ஆகி அருட்சத்தியாகி அருளுகின்ற சிவஞானமும், அந்த ஞானத்தின்வழி விளங்கியதும் சுத்தநிலை கொண்டதுமான சிவம் ஆன்மாவைத் தானாகச் செய்யும் முத்தியும் குருவருளால் இனிது கிடைக்கப் பெறும்.

விளக்க உரை

  • போதம் – ஞானம், அறிவு
  • திண்மை – நிலைபேறு; சிவமாகி விட்ட உயிர் சிவத்திடம் இருந்து வேறொன்று ஆகாமை
  • சுத்தம் – சுத்தநிலை
  • தூய்மை – பாசத்தின் பக்கத்தைவிடுத்துச் சிவத்தின் பக்கமாதல்
  • சாதக போதம் – சாதித்தவனது அறிவு நிலை
  • மேலே குறிப்பிடப்பட்ட சக்திகளுடன் சர்வபூதமணி, மனோன்மணி எனவும் விரியும் என்று சில இடங்களில் குறிப்பிடப்படுகிறது.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *