
பாடல்
குறியென்ற உலகத்தில் குருக்கள் தானும்
கொடிய மறை வேதம் எலாம் கூர்ந்துபார்த்து
அறியாமல் பிரமத்தைப் பாராமல்தான்
அகந்தையாய்ப் பெரியோரை அழும்புபேசி
விரிவான வேடம் இட்டுக் காவிபூண்டு
வெறும் பிலுக்காய் அலைந்திடுவான் நாயைப் போலே;
பரியாச மாகவும் தான் தண்டும் ஏந்திப்
பார்தனிலே குறடு இட்டு நடப்பான் பாரே
சித்தர் பாடல்கள் – காகபுசுண்டர்
கருத்து – போலி குருவின் தோற்றத்தினையும் அவர்களின் குண நலன்களையும் கூறி அவ்வாறான குருவினை தேர்ந்தெடுப்பதில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை கூறும் பாடல்.
பதவுரை
போலி குருவாக இருப்பவர்கள் அறிய இயலாத மறை வேதம் எல்லாம் ஓதி அதன் உட்பொருளையும் மெய் ஞானத்தினையும் உணர்ந்த பின்னும் உண்மையான பிரமத்தை அறியாதவர்கள்; மேலும் தான் எனும் அகங்காரம் கொண்டு கற்றறிந்த பெரியோர்களை தாழ்மையாக பேசுபவர்களாக இருப்பார்கள்; குருவினை போன்று காவி உடை, யோக தண்டம் மற்றும் பாத குறடு இவைகளைக் கொண்ட தோற்றம் உடையவர்களாகவும் பகட்டான தோற்றம் உடையவர்களாகவும் நாயைப் போல் பொருளுக்கு அலைபவர்களாகவும் இருப்பார்கள்; இவர்கள் நோக்கம் யாவும் பணம் சம்பாதிப்பதிலே குறியாக இருக்கும்.
விளக்க உரை
- பிலுக்குதல் – விமரிசை, பகட்டான தோற்றம்;பகட்டு, ஆடம்பரம்