
பாடல்
ஓதிமா மலர்கள் தூவி யுமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கு மெண்டோட் சுடர்மழுப் படையி னானே
ஆதியே யமரர் கோவே யணியணா மலையு ளானே
நீதியா னின்னை யல்லா னினையுமா நினைவி லேனே
நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – ஈசனின் திருமேனி அமைப்பினையும் அவன் அருளும் திறத்தினையும் கூறும் பாடல்.
பதவுரை
பார்வதியினை தன்னில் ஒரு பாகமாக் கொண்டவனே, சோதி வடிவமாக இருப்பவனே, கூத்து நிகழும் காலத்தே அதில் வெளிப்படுத்த அசைகின்ற எட்டு வடிவமாக இருப்பவனே, ஆதியே, தேவர்களுக்குத் தலைவனே, அழகிய அண்ணாமலையில் இருப்பவனே! சிவார்ச்சனைக்கு விதித்த சிறந்த பூக்களான* கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ ஆகியவற்றை முறையாக உன் திருநாமங்களை ஓதி அர்ச்சித்து நின்னை அல்லால் நினையுமாறு செய்து வேறு ஒரு நினைவு இல்லாமல் உன்னைத் தியானிப்பதனைத் தவிர மற்ற பொருள்களை ஊன்றி நினையேன்.
விளக்க உரை
- ஓதிய நாமங்களுள் – உமையவள் பங்கா, மிக்க சோதியே, துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே , ஆதியே, அமரர்கோவே, அணி யணாமலையுளானே
- பங்கன் – பாகமுடையவன், இவறலன், ஒன்றும் கொடாதவன்
- கூத்து நிகழும் காலத்தே அதில் வெளிப்படுத்த அசைகின்ற எட்டுத் தோள்களை உடையவனே எனும் பொருளில் சில இடங்களிலும் எல்லாவுயிரும் உய்யும் பொருட்டு அங்கம் பிரத்தியங்கம் சாங்கம் உபாங்கம் உடைய திருவுருக் கொண்டு அருளினான் என்றும் சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. கூத்து வகைகள் முன் நிறுத்தில் 1) சிவன் – கொடுகொட்டி, பாண்டரங்கம், கபாலம் 2) திருமகள் – பாவை 3) திருமால் – குடம், மல், அல்லியம் 4) குமரன்(முருகன்) – குடை, துடி. 5) எழுவகை மாதர்(சபத கன்னியர்) – துடி 6) அயிராணி (இந்திரன் மனைவி) – கடையம் 7) துர்க்கை – மரக்கால் 8) காமன் – பேடு என இருப்பதால் இப்பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
- நீதி – சிவாகம முறையில் வகுக்கப்பட்ட முறைப்படி அல்லாமல் வேறு வகையில் ஓதித் தூவி நினையுமாறு மற்றொவரையும் நினைவு கொள்ளுதல்
- நின்னையல்லால் நினையுமா நினைவிலேன் – நினைதல் ( மனம் ) ஓதல் ( வாக்கு ) தூவுதல் ( காயம் ) என்னும் முப்பொறிக்குமுரிய வழிபாடு முன்நிறுத்தி உணர்த்தியது.
- *புட்ப விதி – கமலை ஞானப்பிரகாசர். காலம் 6-ஆம் நூற்றாண்டு