பாடல்
பிறவி யென்னுமிக் கடலை நீந்தத்தன்
பேர ருள்தந் தருளினான்
அறவை யென்றடி யார்கள் தங்க
ளருட்கு ழாம்புக விட்டுநல்
உறவு செய்தெனை உய்யக் கொண்ட
பிரான்தன் உண்மைப் பெருக்கமாம்
திறமை காட்டிய சேவ டிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – பிறவி நீக்கதின் பொருட்டு அருளிய திறமும், அடியவர் கூட்டத்துடன் இணைத்த திறமும் கூறிய பாடல்.
பதவுரை
பிறவியாகிய இந்தக் கடலை நீந்துவதற்குத் தன்னுடைய பேரருளினை கொடுத்து அருளினவனும், அவ்வாறான பிறவி கடலை கடக்க துணையில்லாதவன் என்று எண்ணி அதனால் இரக்கம் கொண்டு, அடியார்களுடைய அருள் கூட்டத்தில் புகுவித்தும் அவர்களோடு நல்ல உறவை உண்டாக்கியும் என்னைப் பிழைக்கும்படி ஆட்கொண்ட தலைவனும், பேரருளாகி வல்லமையைக் கொண்டவனும் ஆகிய இறைவனின் உண்மையான சிவந்த திருவடியின் கீழே, நமது தலை நிலைபெற்று நின்று விளங்கும்.
விளக்க உரை
- அறவை – துணையிலி
- உண்மைப் பெருக்கமாம் திறமை – உண்மையினது மிகுதியாகிய ஆற்றல்; சென்னியில் சூட்டிய பொழுதே மயக்கெலாம் அற்று அன்பு பிழம்பாகச் செய்த முறை