
பாடல்
ஐயிரண்டும் ஆறொன்று மானார் போலும்
அறுமூன்றும் நான்மூன்று மானார் போலும்
செய்வினைகள் நல்வினைக ளானார் போலும்
திசையனைத்து மாய்நிறைந்த செல்வர் போலும்
கொய்மலரங் கொன்றைச் சடையார் போலுங்
கூத்தாட வல்ல குழகர் போலும்
எய்யவந்த காமனையுங் காய்ந்தார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே
ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – ஈசனை புற உலகங்களில் அனைத்திலும் நிறைந்து அதன் வடிவமாகவும் இருப்பவன் என்பதையும் அவன் வீரச் செயல்களையும் கூறிய பாடல்.
பதவுரை
இடைமருது எனும் திருத்தலத்தில் மேவிய ஈசனார், செய்யப்படுகின்றன தீவினைகளும் நல்வினைகளுக்கும் கர்ம சாட்சி ஆகி எண் திசைகளுடன் கூடியதான மேல், கீழ் சேர்த்து பத்துத் திசைகளாகவும் அதில் உள்ள பொருள்கள் யாவுமாய் நிறைந்த செல்வராவார்; ஆறுடன் ஒன்று சேர்ந்ததான ஏழு இசையாகவும் இருப்பவர்; ரிக், யஜுர், சாமம் மற்றும் அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களாகவும் அதன் அங்கம் ஆகிய சிக்ஷை சந்தசு சோதிடம் வியாகரணம் நிருத்தம் கற்பம் எனும் ஆறாகவும், மீமாஞ்சை நியாயம் புராணம் ஸ்மிருதி எனும் உபாங்கமாகவும், புராணம், நியாயம், மீமாஞ்சை, மிருதி என்னும் நான்காகவும், ஆயுள் வேதம், வில்வேதம், காந்தருவவேதம், அருத்தநூல் எனும் உபாங்கமாகவும், பூருவமோமாஞ்சை உத்தரமீமாஞ்சை எனும் இரு மீமாஞ்சையாகவும், கெளதம சூத்திரம் காணத சூத்திரம் எனும் இரு நியாயமாகவும் (ஆக பதினெட்டு வித்தைகள்) இருப்பவர்; ஒவ்வொரு மாதத்திற்கும் வேறு வேறு பெயர்களால் அழைக்கப்படும் சூரியனான தாதா, அர்யமா, மித்ரா, வருணா, இந்திரா, விவஸ்வான், த்வஷ்டா, விஷ்ணு, அம்சுமான், பகா, பூஷா, பர்ஜனா என பன்னிரெண்டாகவும் இருப்பவர்; புதியதான கொன்றை மலரினை சூடிய சடையினை உடையவர்; கூத்து நிகழ்த்துதலில் வல்லவரான அவர் என்றும் இளமைத் தோற்றம் கொண்டவர்; தம் மீது மலரம்புகளைச் செலுத்தவந்த மன்மதனைக் கோபித்து அவனை எரித்தவர்.
விளக்க உரை
- ஐயிரண்டு – பத்துத் திசைகள்.
- ஆறொன்று – ஏழு இசைகள்.
- ஐயிரண்டும் ஆறொன்றும் என்பதை முன்வைத்து 10 + 6 எனக் கொண்டு 16 வகைப் பேறுகளை அருளுபவன் எனக் கொள்வாரும் உளர். புறவடிவங்களில் இருக்கும் பிரமாண்டத்தின் அனைத்து வடிவங்களாகவும் அவன் இருக்கிறான் என்பதால் இப்பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
- அறுமூன்று – பதினெட்டு வித்தைகள். அறுமூன்று என்பதை முன்வைத்து பதினெட்டு புராணங்கள் என்று கூறுவோர்களும் உளர்.
- நான்மூன்று – பன்னிரண்டு சூரியர்கள்
- காய்தல் – உணங்குதல், உலர்தல், சுடுதல், மெலிதல், வருந்தல், விடாய்த்தல், எரித்தல், அழித்தல், விலக்குதல், வெறுத்தல், வெகுளுதல், கடிந்துகூறுதல், வெட்டுதல்