
பாடல்
சங்கிரண்டு தாரையொன்று சன்னல்பின்னல் ஆகையால்
மங்கிமாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை
சங்கிரண்டை யும்தவிர்த்து தாரையூத வல்லிரேல்
கொங்கை மங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே
சிவவாக்கியர்
கருத்து – சுழுமுனை வழியே வாசி பற்றி நிற்பவர்கள் ஈசனும் ஒன்றாக கூடி வாழும் தன்மை உடையவர்கள் ஆவார் என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டு இருப்பதான இடகலை, பிங்கலை எனப்படும் சங்குகள் இரண்டு கொண்டும் சுழுமுனை எனப்படுவதான தாரை கொண்டும் இருப்பதை அறியாமல் உலகில் எத்தனையோ மானிடர்கள் நெருப்பால் சுடப்பட்டு அழிகின்றனர். அவ்வாறு இல்லாமல் இடகலை, பிங்கலை இரண்டையும் தவிர்த்து சுழுமுனை எனப்படுவதான தாரை கொண்டு வாசி பற்றி அதை ஊத வல்லவர்கள் உலகிற்கு அமுது அளிக்கும் அன்னையுடன் கூடியவரான பாகம் உடையவராகிய ஈசனும் ஒன்றாக கூடி வாழ இயலும்.
விளக்க உரை
- அங்கி – ஆடை, மேலாடை, நெருப்பு, அக்கினி
- மாளுதல் – சாதல், அழிதல், கழிதல், இயலுதல்