அமுதமொழி – விகாரி – தை – 23 (2020)


பாடல்

வடிவமாக இருப்பதுவே சந்தோஷமாகும்
வரிசையுடன் ஆகம புராணந்தன்னை
பதிவாக விட்டுவிட நின்றுகொண்டு
பத்தியுடன் வேதாந்த பொருளென்றெண்ணி
முடிவாக அத்திவுரித் தடிமேல் நின்று
முன்பின்னாயாகுகின்ற முறையாதென்று
அடியார்கள் சொல்லுகிற கருவைக் கேளு
அவர்சொல்லும் பூரணமு மறிந்துபாரே

அகத்தியர் சௌமியசாகரரம்

கருத்து – அடியார்களை அணுகி அவர்கள் இடத்தில் இருந்து பூரணத்துவத்தை பெற வேண்டும் என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

உண்மையான சந்தோசம் என்பது இருப்பதைக் கொண்டு திருப்தி அடையும் மனத்துடன் இருக்கும் வடிவமே சந்தோஷமாகும்; சமய நெறிமுறைகளை எடுத்துச் சொல்லும் ஆகமம், அறுபத்துநாலு கலைகளுள் ஒன்றானதும், பழமையுடன் கூடியதான கதையைக் கூறுவதும் ஆன புராணம் ஆகியவற்றை  செய்திகள் என்று எண்ணாமல்  உண்மைத் தன்மைகளை பக்தியுடன் வேதத்தின் முடிவுகளாகிய வேதாந்தம் என்று எண்ணி, அனைத்தையும் முடிவாக அறிந்தவர்களானவர்களும், சாம்பல் எனப்படும் திருநீற்றினை மேனி முழுவதும் பூசி,  காக்கும் திருவடிகள் மேல் மனம் வைத்தவர்களும், மூச்சுக் காற்றினை முறையாக அறிந்து அதன்படி நிற்பவர்களுமான அடியவர்களாகிய கருத்தினை கேட்பாயாக; அவர்கள் உரைக்கக் கூடியதான பூரணத்துவம் என்பது என  அறிந்து பார்ப்பாயாக என அகத்தியர் புலத்தியருக்கு உரைக்கிறார்.

விளக்க உரை

  • புராணம் – பழமை, பழங்கதை, அறுபத்துநாலுகலையுள் ஒன்றும் வியாச முனிவரால்இயற்றப்பட்டதும், சருக்கம், பிரதிசருக்கம், வமிசம்,மன்வந்தரம், வமிசானுசரிதம் இவற்றைப்பற்றிக் கூறுவதுமான பழைய நூல்வகை
  • அத்திவுரித்து அடிமீது நின்று – அத்தி மரம், யானை என்று இருபொருள் பெறப்படும். அத்தி உரித்து என்பது வேழ முகத்தானுக்கு உரிய யானை குறிக்கும் மூலாதாரத்தில் உள்ள குண்டலினியை எழுப்பி அங்கு பிராணனை நிறுத்தி அதை மேலே ஏற்றுவது என்று பொருள்; பிராணன் எனும் குண்டலினியை  அது இருக்கும் இடமான மூலாதாரத்திலிருந்து எழுப்பி பின் நிலையான இடமான சகஸ்ராரத்துக்கு மாற்றுவது. குருமுகமாக அறியப்படவேண்டிய ரகசியம் இது.
  • அடியார் – அடியை உடையவர்கள், அதாவது மூலாதாரத்தை அறிந்தவர்கள் அடியவர்கள்.  அவர்களது விளக்கமே உண்மையான விளக்கமாகும் என்றும் பொருள் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 22 (2020)

பாடல்

மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட
குரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண்கொடுங் குன்றம்
அரவத்தொடு மிளவெண்பிறை விரவும்மலர்க் கொன்றை
நிரவச்சடை முடிமேலுடன் வைத்தானெடு நகரே

முதலாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து – திருக்கொடுங்குன்றம் எனும் திருத்தலத்தினையும் அதில் உறையும் ஈசனின் சிறப்புகளையும் உரைக்கும் பாடல்.

பதவுரை

பாம்பு, வெள்ளிக்கம்பி போன்று மின்னக்கூடியதான இளம்பிறை, மணம் பரப்பக்கூடியதான கொன்றை மலர் ஆகியவற்றை சமமாக தன் முடிமேல் அணிந்துள்ள சிவபிரானது நெடுநகரம் எதுவெனில் கடம்பு, குருக்கத்தி, பிரிந்தும் நீண்டும் இருக்கக் கூடியதுமான மரமல்லிகை ஆகியவற்றின் அரும்புகளும், குரவமலர்களும் மணம் பொருந்தி வானம் வரை நீண்டு இருக்கக் கூடியதானதும், குளிர்ச்சியும் அருளும் நிரம்பியதுமானதும், சோலைகள் சூழ்ந்ததுமானது  திருக்கொடுங்குன்றம் எனும் திருத்தலம் ஆகும்.

விளக்க உரை

  • விண்டுதல் = பிளத்தல், பிரித்தல்
  • மரவம் – கடம்பு. மாதவி – குருக்கத்தி.
  • நிரவ – நிரம்ப

திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – அடும்பு

புகைப்படம் : இணையம்
செய்தி : விக்கிப்பீடியா
  • தற்போதைய பெயர் மவ்வல், மரமல்லி, மரமல்லிகை, பன்னீர்ப் பூ
  • குறிஞ்சி நில மகளிர் பயன்படுத்தியது.
  • இரவில் பூக்கும் இதன் மலர்கள் மிகுந்த வாசனையைக் கொண்டவை.
  • வீட்டில் நட்டு வளர்க்கும் மௌவலையின் வேறு பெயர் ‘மனைநொச்சி’

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 21 (2020)


பாடல்

துரத்தி உன்னை ஆசை தொடராமல் என்றும்
விரத்தியினால் ஆங்கு அவற்றை விட்டுப் – பரத்தில் அன்பு
செய்யடா செய்யடா, சேரப்பா பஞ்சம் எல்லாம்
பொய்யடா பொய்யடா பொய்

சிவபோக சாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்

கருத்து – உடலினை பொய் என்று உணர்ந்து ஆசையை அறுத்து, பரத்தில் அன்பு செய்ய வேண்டி உபதேசம் செய்து வலியுறுத்தும் பாடல்.

பதவுரை

பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் ஆகியவற்றால் ஆன இந்த உடல் பொய்யானது என்பதை உணர்ந்து, கையறு நிலையினை மனதில் கொண்டு, எக்காலத்திலும் துன்பத்தை தருவதாகிய ஆசை என்றும் தொடராமல், மேலுலகமானதும், மோட்சத்தின் இருப்பிடமானதும், நிறைவானதும் ஆன பரத்தில் அன்பு செய்.

விளக்க உரை

  • காலம் – 16 ஆம் நூற்றாண்டு
  • இந்த நூல் 139 வெண்பாக்களைக் கொண்டது
  • துரத்துதல் – வெருட்டி ஓட்டுதல், அப்புறப்படுத்துதல், திருடன் முதலியோரைப் பிடிக்கப் பின் தொடர்தல், வண்டிமாடு முதலியவற்றைத் தூண்டி விரைந்தோடச் செய்தல்
  • பரம் – மேலானது, திருமால்நிலை ஐந்தனுள் ஒன்றான முதல் நிலை, கடவுள், மேலுலகம், திவ்வியம், மோட்சம், பிறவி நீக்கம், முன், மேலிடம், அன்னியம், சார்பு, தகுதி, நிறைவு, நரகம், பாரம், உடல், கவசம், கேடகவகை, குதிரைக்கலனை
  • செய்யடா செய்யடா, பொய்யடா பொய்யடா – அடுக்குத் தொடர். முதலில் சொன்னைதை உறுதிபடுத்த இரண்டாவது முறை.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 17 (2020)


பாடல்

எந்தனைப் போலவே செனன மேடுத்தோர்க
   ளின்பமாய் வாழ்ந் திருக்க,
யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில்
   உன்னடியேன் தவிப்பதம்மா,
உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன்
   உன் பாதஞ் சாட்சியாக
உன்னையன்றி வேறு துணை இனியாரை யுங்காணேன்
   உலகந்தனி லெந்தனுக்கு
பின்னை யென்றெண்ணி நீ சொல்லாமலென் வறுமை
   போக்கடித் தென்னை ரட்சி
பூலோக மெச்சவே பாலன் மார்க்கண்டன்போல்
   பிரியமாய்க் காத்திடம்மா
அன்னையே யின்னமுன் னடியேனை ரட்சிக்க
   அட்டி செய்யா தேயம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
   அம்மை காமாட்சி உமையே

காமாட்சியம்மை விருத்தம்

கருத்து – வேறு எந்த தெய்வத்தையும் துணையாக கொள்ளாமல் இருப்பதால் தன்னை பிள்ளையாகக் கருதி, வறுமையைப் போக்கி காக்க வேண்டும் என்பதை கூறும் பாடல்.

பதவுரை

அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே!  இந்த உலகம் முழுவதாலும் புகழப்படுபவரான மார்கண்டேயன் போல் என்னை பிரியமாக காத்திட வேண்டும் தாயே; உன்னுடைய திருவடிகளையே சாட்சியாக வைத்து  நியே துணை என்று உறுதியாக நம்பினேன்; இந்த உலகத்தில் உன்னைத் தவிர வேறு யாரையும் துணையாகக் கொள்ளவில்லை;  என்னைப்போலவே பிறவி எடுத்தவர்கள் இங்கே செல்வம், புகழ் என்று இன்பமாக வாழ்ந்திருக்க, உன்னுடைய அடியவன் ஆகிய யான் இத்தனை வறுமையில் தவிப்பது யான் செய்த பாவமா? நீ உன்னுடைய பிள்ளை என்று என்னை எண்ணி என்னிடம் எதுவும் உரையாமல் வறுமையை போக்கி என்னை ரட்சிக்க வேண்டும். தாயானவளே இன்னமும் உன்னுடைய அடியவன் ஆகிய என்னை ரட்சிக்காமல் தாமதம் செய்யாதே.

விளக்க உரை

  • அட்டி – தாமதம், தடை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 16 (2020)


பாடல்

சோம்பலா யிருந்தக்கால் காயசித்தியாமோ
சுணக்கணாய்த் திருந்தக்கால் வாதசித்தியாமோ
கூம்பலாய் மனம்போனால் யோகசித்தியாமோ
குளிகைக்குச் சாரணைதான் தீராயானால்
ஆம்பலா யாகாச கெவுனம்போமோ
அடியான வழலைவிட்டால் சித்தனாமோ
காம்பலாய்க் காமத்தின் வழியேசென்றால்
காலூன் றுஞ்சிவயோகக் கருத்துப்போச்சே

போகர் கற்பம் 300

கருத்து – குவிக்கப்படா மனத்தினால் எதையும் பெறமுடியாது என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

விதிக்கப்பட்ட மார்கங்கள் கொண்டு, மற்றும் உபதேசிக்கப்பட்ட மந்திரங்களை ஜபம் செய்யாமல் சோம்பல் கொண்டு இருந்தால் உடலை நரை, திரையின்றி நெடுநாள் இருக்கச்செய்யும் சித்தி ஆனதும், அணிமா மகிமா முதலிய சித்திகள் ஆனதுமான காயசித்தி அடையக் கூடுமோ? ஒன்றிலும் நிலை பெறாமலும் முழுமை பெறாமலும் நாய் போன்று அனைத்தையும் விரும்பி இருந்தால் ரச வாதம் எனப்படுவதான வாத சித்தி அடையக் கூடுமோ? மனமானது குவிக்கப்படாவிட்டால் யோக சித்தி என்றும், இறை நிலையை அடைதலை குறிப்பதானதுமான சமாதி நிலையை எய்த இயலுமோ? மந்திர சக்தி உடையதும், படர்ந்து செல்லும் வகையினதும் ஆன வெள்ளை நிறமுடையதுமான அல்லிப்பூ கொண்டு மிகப் பெரியதான ஆகாயத்தினை மூட இயலுமோ? மிகச் சிறியதாக இருப்பினும் காமத்தின் வழியே சென்றால் உயிர்கள் காலூன்றுவதற்கு காரணமாக இருக்கும் சிவயோகம் அதன் நிறம் மாறி கருமை நிறம் கொள்ளும்.

விளக்க உரை

  • கூம்பல் – குமிழமரம்
  • ஆம்பல் – அல்லி, வெண்ணிறப் பூ, ஆம்பற்குழல், பண்வகை,  மூங்கில், ஊதுகொம்பு, யானை, ஆம்பன்முக வரக்கன், கள், துன்பம், அடைவு, சந்திரன்
  • கெவுனம் – மிக
  • வழலை என்பதை வாலை எனக்கொண்டு பொருள் உரைக்கப்பட்டு இருக்கிறது. குற்றம் இருப்பின் மன்னிக்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 10 (2020)


பாடல்

சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி
சோதியா நின்ற வுமையே.
சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள்
துன்பத்தை நீக்கி விடுவாய்.
சிந்தைதனில் உன்பாதந் தன்னையே தொழுமவர்கள்
துயரத்தை மாற்றி விடுவாய்
ஜெகமெலா முன்மாய்கை புகழவென்னாலாமோ
சிறியனால் முடிந்திராது
சொந்தவுன் மைந்தனா மெந்தனை யிரட்சிக்கச்
சிறிய கடனுன்னதம்மா.
சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீஸ்வரி
சிரோன்மணி மனோன்மணியு நீ.
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி
யனாத ரட்சகியும் நீயே,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அன்னை காமாட்சி உமையே

காமாட்சியம்மை விருத்தம்

கருத்து – அன்னையில் சிறப்புகளை உரைத்து தான் அன்னையின் மைந்தன் என்பதால் தன்னை காக்கும் பொறுப்பு அன்னைக்கு இருக்கிறது என்பதையும் கூறும் பாடல்.

பதவுரை

அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே! ஈசனுக்கும் உமைக்கும் உரித்தான சிவசிவ எனும் ஒலி வடிவமாகவும், மகேஸ்வரனிடத்தில் நிலைபெறும் மகேஸ்வரியாகவும், பரமனிடத்தில் நிலை பெறும் பரமேஸ்வரியாகவும், சிரசில் அமையப் பெற்றதும், புருவ மத்தியில் ஒளிரக் கூடியதுமான சிரோன்மணியாவும், பார்வதி ஆகிய மனோன்மணி ஆகியவளும் நீயே ஆகி, வனப்புடன் கூடிய  அழகிய வடிவம் கொண்டும், என்றும் அழிவில்லாவதலாகவும், அண்டங்கள் அனைத்தும் அதன் வழியில் நடைபெற பொறுப்பினை ஏற்றுக் கொண்டும், தோல்கருவியால் இசைக்கப்படும் ஒலியானவளாகவும், அந்த ஒலிக்கு காரணாமாகவும், நிரந்தரமானவளாகவும், பரம்பரையின் ஆதியாகவும், அனாத ரட்சகியாகவும் நீயே இருக்கிறாய்; இந்த ஜகம் எல்லாம் உன்னுடைய மாயத்தோற்றம் என்பதாலும் யான் சிறியவன் என்பதாலும் புகழ என்னால் முடியாது; (ஆனாலும்) உனக்குச் சொந்தமான உன்னுடைய மைந்தன் ஆனதால் என்னை இரட்சிக்க உனக்கு கடன் உள்ளதம்மா; வெள்ளிக்கிழமை உன்னை தரிசித்தவர்களின் துன்பங்களை நீக்கி விடுவாய்; மனத்தினால்  உன்னுடைய பாதம் எனப்படுவதான திருவடிகளைத் தொழுபவர்களின் துயரத்தினை மாற்றி விடுவாய்.

விளக்க உரை

  • சௌந்தரியம் – அழகு, எழில், கவர்ச்சி, ஈர்ப்பு, வனப்பு
  • துரந்தரி – பொறுப்பு ஏற்போள்
  • மாய்கை – பொய்த்தோற்றம்
  • துன்பத்தை நீக்கி விடுவாய், துயரத்தை மாற்றி விடுவாய் – இயலாமையால் வருவது துன்பம்; (இக லோகம் , குறுகிய கால அளவு), இல்லாமையால் வருவது துயரம்(பர லோகம், நீண்ட கால அளவு)
  • சிவசிவ — ஈசனுக்கும் உமைக்கும் உரித்தானது ஆகையால் சிவசக்தி ரூபமாக (பஞ்சாட்சரத்தின் வேறுவகையாக) ஜெபித்தல்
  • நிரந்தரி துரந்தரி என்றும் துரந்தரி நிரந்தரி என்றும் இருமுறை இப்பாடலில் இடம் பெறுகின்றன.
  1. தன்னிலை மறந்த யோகத்தில் இருப்பதால் இவ்வரிகள் என்றும்,
  2. இகம், பரம் என்பதற்காக இருமுறை என்றும்,
  3. சிவசக்தி வடிவமாக உரைத்தலில் பொருட்டு இருமுறை எனவும் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • ஜெகமெலா முன்மாய்கை –
  1. (புற) உலகம் பொய்வடிவானது, மெய்யானவள் நீ எனவும்,
  2. நீயே மாயையின் வடிவமாகவும் இருப்பதால் (மஹாமாயா – லலிதா சகஸ்ரநாமம்) உன்னைப் புகழ சிறியவனான என்னால் ஆகாது எனவும் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 9 (2020)


பாடல்

நெஞ்சுளே நினைவு தோன்றும் நினைவுகளே அறிவு தோன்றும்
மிஞ்சிய அறிவு தானே மெய்பொரு ளாகி நிற்கும்
பஞ்சுளே படும்பொ றிப்போல் பரந்துளே துரிய மாகும்
அஞ்சிலே துரிய மாகி யதனுறே யாதியாமே

முதுமொழி ஞானம் –  – அகத்தியர்

கருத்து – ஆதியானது அஞ்செழுத்தினில் பரவி இருத்தலையும், மெய்ஞான நிலையில் அதை அறிய முடியும் என்பதையும் உரைக்கும் பாடல்.

பதவுரை

ஆதியானது பஞ்சினில் இருக்கும் அனல் போல் பரவி அஞ்செழுத்தில் தன்மயமாய் நிற்கும் உயர்நிலையை ஆகிய துரிய நிலையில் நிற்கும்;  கற்று அறிந்ததைக் கொண்டு நெஞ்சத்தில் ஆதி பற்றிய எண்ணங்கள் முதலில் தோன்றும்;  அந்த எண்ணங்களைத் தொடர்ந்து  மெய்யறிவு பற்றிய ஞானம் தோன்றும்; அவ்வாறான அந்த நிலையில் அறிவு எனும் பேரறிவு தானே மெய்ப் பொருளாகிவிடும்.

விளக்க உரை

  • துரியம் – நான்காம் அவத்தை, யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை, பொதியெருது, சுமத்தல்
  • பஞ்சுளே படும்பொ றிப்போல் – பஞ்சினில் தீ மறைந்திருக்கும், குவிஆடி மூலம் குவிக்கப்படும் போது அந்தப் பஞ்சானது பற்றிக் கொள்ளும். அத்தன்மை ஒத்து

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 8 (2020)


பாடல்

தொடைத்தலை மலைத்திதழி துன்னிய வெருக்கலரி வன்னிமுடியின்
சடைத்தலை மிலைச்சியத போதனனெ மாதிபயில் கின்றபதியாம்
படைத்தலை பிடித்துமற வாளரொடு வேடர்கள் பயின்றுகுழுமிக்
குடைத்தலை நதிப்படிய நின்றுபழி தீரநல்கு கோகரணமே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து –  திருக்கோகரணம் எனும் திருத்தலத்தில் உறையும் சிவனின் பெருமைகளைக் கூறும் பாடல்.

பதவுரை

அலைகளை உடைய புனித நதியில் குடைந்து மூழ்கி வணங்கத் தக்கவரான சிவபெருமான் அழிக்கப்பட்டதான தலைமாலை அணிந்தவர்; திருச்சடையில் கொன்றை, எருக்கு, அலரி, வன்னிப்பத்திரங்கள் ஆகியவற்றால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவர்; அவர் வீற்றிருந்து அருளுகின்ற இடமானது வெற்றி பொருந்திய வாளாயுதத்தை ஏந்திய வீரர்களுடன் வேடர்கள் நட்புக் கொண்டு கூடி இருக்கக் கூடியதும், பழிபாவத்தை நீக்கி அருள்புரியும் தலமான திருக்கோகரணம் எனும் திருத் தலமாகும்.

விளக்க உரை

  • தொடை – துடைத்தல் – தடவிப்போக்குதல், பெருக்கித் தள்ளுதல், அழித்தல், துவட்டுதல், கொல்லுதல், தீற்றுதல், காலியாக்குதல், நீக்குதல், கைவிடுதல், ஒப்பமிடுதல்
  • தொடைத்தலை மலைத்து – தலைமாலையை அணிந்து
  • இதழி – கொன்றைமலர்
  • வன்னி – வன்னிப் பத்திரங்கள்
  • மிலைச்சிய – அணிந்த
  • படைத்தலைபிடித்து – ஆயுதங்களின் அடிப்பாகங்களைப் பற்றி
  • மறம் – வெற்றி பொருந்திய
  • அலைநதி – அலைகளையுடைய நதியில்
  • பாடிய – முழுகி வணங்க

திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – அலரி

புகைப்படம் : திரைப்பட இயக்குனர் திரு.ஐயப்ப மாதவன்
செய்தி : இணையம்
  • வகைகள் – ஒற்றை அலரி, அடுக்கு அலரி
  • வண்ணங்கள் தற்காலப் பெயர் – அரளி
  • வகைகள் – மஞ்சள், வெள்ளை, சிவப்பு, குங்கும வண்ணம்
  • மருத்துவ குணங்கள் – ஆறாத புண்களை ஆற்றும், அக்கியை போக்கும், ரத்தத்தை சுத்தப்படுத்தும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 7 (2020)


பாடல்

மூலம்

பாலென் பதுமொழி பஞ்சென் பதுபதம் பாவையற்கண்
சேலென்ப தாகத் திரிகின்ற நீசெந்தி லோன்றிருக்கை
வேலென் கிலைகொற்ற மயூர மென்கிலை வெட்சித்தண்டைக்
காலென் கிலைமன மேயெங்ங னேமுத்தி காண்பதுவே?

பதப்பிரிப்பு

பால் என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர் கண்
சேல் என்பது ஆகத் திரிகின்ற நீ செந்திலோன் திருக்கை
வேல் என்கிலை கொற்ற மயூரம் என்கிலை வெட்சித் தண்டைக்
கால் என்கிலை மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே?

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்து – முருகப் பெருமானின் வடிவ அழகினையும், அவனின் ஆயுதங்களையும் பற்றி பேசாமல் பெண்ணாசையில் வீழ்ந்து இருப்பின் முக்தி அடைய இயலாது என்பதை கூறும் பாடல்.

பதவுரை

ஏ மனமே! திருச்செந்தூர் திருமுருகப் பெருமானின் திருக்கையில் விளங்குவதும் எப்பொழுதும் வெற்றியைத் தருவதுமான வேலாயும்  என்று சொல்லாமலும்; வெற்றியைத் தருவதாகிய மயில் என்று சொல்லாமலும்; வெட்சி மலரையும் தண்டையையும் அணிந்த திருவடிகள் என்று சொல்லாமலும் அவைகளைப் பற்றி புகழாமலும் பெண்களில் சொற்கள் பால் போன்று இருக்கிறது என்றும், அவர்கள் பாதங்கள் பஞ்சைப் போன்று மென்மையாக இருக்கிறது என்றும், அவர்களின் கண்கள் மீனைப் போன்று இருக்கின்றன எனவும் சொல்லித் திரிகின்றாய்; ஆதலால் நீ முத்திப் பேற்றை அடைவது எங்ஙனம்?

விளக்க உரை

  • கொற்றம் – வெற்றி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 6 (2020)


பாடல்

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை – நினைப்பதெனக்
கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க் கில்லை விதி

நல்வழி – ஔவையார்

கருத்து – வினைகள் அனுபவிக்கப்படாமல் தீர்க்கப்படுவதில்லை என்பதையும் அவற்றை தீர்க்க வழியும் இல்லை என்பதையும் அறுதியிட்டுக் கூறும் பாடல்.

பதவுரை

நெஞ்சே! நீ வினை வலிமையை கண்ணால் கண்டு அவற்றை வெல்வதற்காக  நினைத்துப் பார்த்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கலாம்.  ஆனால் நல்ல செயல்கள் புரிந்து விண்ணுலகம் செல்பவர்களின் தலைவிதியினை தடுத்து நிறுத்த முடியாது. வேதம் முதலான அனைத்து நூல்களை ஆராய்ந்து பார்த்தாலும் உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினை, அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும் ஏனைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினை, பிராப்தம் ஆகிய நிகழ்கால வினை, ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினை ஆகிய எல்லா வினைகளின்  பயன்களை அனுபவிக்காமல் இருப்பதற்கு வழி இல்லை.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 2 (2020)


பாடல்

ஆசானை அடுக்கிற விதம்
காரப்பா இந்நூலைத் திருந்தோர் பாதம்
காரடா வருடமது பனிரெண்டாண்டு
சீரப்பா பணிவிடைகள் எல்லாம் செய்து
சிவசிவா கேட்டதன்ம மெல்லாம் ஈய்ந்து
சாரப்பா நூல் எனக்குத் தாரு மென்று
சற்றும் நீ கேளாதே சும்மா நில்லு
பேரப்பா அவர் மனது கனிந்து தென்றால்
பேசாமல் நூல் கொடுத்து அருள் ஈவாரே

சித்தர் பாடல்கள் –  அகஸ்தியர் மெய்ஞானம்

கருத்து – சீடனின் ஆன்மீக நிலை குரு அறிவார் என்பதால் சீடன் தெரிவிக்காமலே குரு கற்றுத் தருவார் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

ஆசானை அடுத்து இருக்கின்ற விதத்தினை உரைக்கின்றேன்; சீடனானவன், மெய் ஞானத்தையும் மற்றும் அனைத்து விஷயங்களையும் போதிக்கின்ற உண்மையான ஆசானைச் சேர்ந்து அவருக்கு பன்னிரண்டு ஆண்டுகள் சேவை புரியவேண்டும். ஆசான் கேட்கின்ற அனைத்தையும் அவருக்கு அளித்து அவர் மனம் குளிரச் செய்யவேண்டும்; அவர் விரும்புகின்ற தனம் எல்லாம் ஈந்தாலும், அவரிடம் கற்றுத் தருவதைப்பற்றி குறிப்பிட்டு இதனை எனக்கு கற்றுத் தரவேண்டும் என்று கேட்கக் கூடாது; சீடனின் செயல்களில் மனம் குளிரும் ஆசானானவர் தேவையான அறிவையும் தந்து தனது அருளையும் ஈவார் என்று அகத்தியர் புலத்தியருக்குக் கூறுகிறார்.

விளக்க உரை

  • குரு இறைவுணர்வின் வடிகாலாக இருப்பதாலும், உடல் அளவில் கர்ம யோகத்தின்படி பக்குவப்படுத்தியும், மனதளவில் விருப்பு வெறுப்புகளை விலக்கச் செய்தும் வழிகாட்டுவதால் சீடனின் வாழ்வுக்கான வரங்களில் முக்கியமானது அவருடன் தங்கி இருந்து பெறும் அனுபவமே முதன்மையானது
  • நூல் – மெய்ஞான அனுபவங்கள்
  • குரு – வழிகாட்டுபவர்; ஆசான் – வழி வகுத்து அந்த நெறிபடி நின்று உதாரணமாக வாழ்ந்து காட்டுபவர்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 1 (2020)


பாடல்

முல்லையங் கண்ணி முடியாய் போற்றி
   முழுநீறு பூசிய மூர்த்தீ போற்றி
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி
   ஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி
சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி
   சென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி
தில்லைச்சிற் றம்பலம் மேயாய் போற்றி
   திருவீரட் டானத்தெஞ் செல்வா போற்றி

ஆறாம் திருமுறை –  தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – ஈசனின் குணங்களை சொல்லி அவரை வணங்குதலைப் பற்றி உரைக்கும் பாடல்.

பதவுரை

திருமுடியில் முல்லை மாலையை சூடியவனே, திருமேனி முழுவதும் திருநீறு பூசியவனே, எல்லை அற்றதான எண்குணங்களை உடையவனே, செங்கோட்டு யாழ் மற்றும் சீறி யாழ்போன்ற ஏழு நரம்புகள் உடைய யாழ் வகையில் ஏழுவகை ஓசையைப் படைத்தவனே, மயிர் நீக்கப்பட்ட உருண்டை வடிவினதாகிய கபாலம் எனும் மண்டை ஓட்டில் உணவு பெறுபவனே, உன்னை வந்து வழிபடுபவர்களின் தீவினைகளை முழுவதும் நீக்குபவனே, ஓதுதலை உடைய தில்லைச் சிற்றம்பலத்தை விரும்பி அடைந்து இருப்பவனே, அதிகை வீரட்டானத்தில் உகந்தருளியிருக்கும் எம் செல்வனே! உன்னை வணங்குகிறேன்.

விளக்க உரை

  • படைத்தல் – உடையனாதல்
  • சில்லை – வட்டம்
  • சிரை – மழிப்பு
  • செல்வன் – இன்பத்திற்கு ஏதுவாய் உள்ள பொருளாய் உள்ளவன்
  • எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி – சிவனுக்கு உரித்தானதும், சைவ ஆகமத்தில் கூறப்பட்ட முறைப்படியும் எண்வகைப்பட்ட குணங்கள் தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர்-அருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என்பதால் எல்லையற்ற நற்பண்புகளை உடையவனே எனும் பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ள கருத்து விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – முல்லை



புகைப்படம் மற்றும் செய்தி – விக்கிப்பீடியா
  • முல்லை என்னும் சொல் காட்டில் மலரும் வனமுல்லையை குறிக்கும்
  • பாரி வள்ளல் தன் தேரை வழங்கியது இந்த முல்லைக்குத்தான்
  • மருத்துவ குணங்கள் – மனோ ‌வியா‌திக‌ள் ‌நீ‌ங்‌கி மன‌த்தெ‌ளிவு பெறுதல், தலைவ‌லி நீக்குதல், கண் பார்வை கோளாறு நீக்குதல் போன்றவற்றை செய்யும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மார்கழி – 29 (2020)


பாடல்

மூலம்

முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கு
மிடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப்
பொடியாக் கியபெரு மாள்திரு நாமம் புகல்பவரே

பதப்பிரிப்பு

முடியாப் பிறவிக் கடலில் புகார், முழுதும் கெடுக்கும்
மிடியால் படியில் விதனப்படார், வெற்றிவேல் பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலம் அடங்கப்
பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்து – முருகப் பெருமானை வணங்குபவர்கள் பிறவிப் பெருங்கடலில் மூழ்காமல் இருப்பார்கள் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

எல்லா காலங்களிலும் வெற்றியை தரும் வேலாயுதத்தைத் தாங்கியவரும், தம்முடைய திருவடிகளை வணங்குகின்ற அடியவர்களுக்கு எப்பொழுதும் நன்மையைத் தருகின்ற பெருமாளும், அசுரர் கூட்டம் அழியும்படி அக்கூட்டத்தை தூளாகச் செய்த பெருமாளுமாக விளங்கும் திருமுருகப்பெருமானின் திருநாமத்தை ஓதுபவர்கள்,  தாண்டமுடியாத பிறவிப் பெருங்கடலில் மூழ்கமாட்டார்கள்; எல்லா நலன்களையும் கெடுக்க கூடியதான வறுமைப் பிணியால் வேதனைப்பட மாட்டார்கள்.

விளக்க உரை

  • சிவ, சக்தி அம்சமான சச்சிதானந்த ஸ்வரூபமே முருகப் பெருமான். அந்த சச்சிதானந்தப் பரப்பிரம்மத்தையே, சோமாஸ்கந்தர் என்று போற்றி வழிபடுகிறோம். ஞான வடிவான முருகப் பெருமானின் சித் எனும் சக்தியே பிரகிருதி மாயை ஆனதால் மாயைக்கு குக மாயை என்னும் பெயரும் உண்டு. பிரம்மா முதலான காரணம் மாயையே என்பதாலும் படைப்புத் தொழிலை செய்தவன் என்பதாலும் முருகப் பெருமானை வணங்குபவர்கள் பிறவிப் பெருங்கடலில் மூழ்காமல் இருப்பார்கள்.
  • அவுணர் – அசுரர்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மார்கழி – 28 (2020)


பாடல்

பிட்டு நேர்பட மண்சு மந்த
     பெருந்து றைப்பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்தி லாத
     சழக்க னேன்உனைச் சார்ந்திலேன்
சிட்ட னேசிவ லோக னேசிறு
     நாயி னுங்கடை யாயவெங்
கட்ட னேனையும் ஆட்கொள் வான்வந்து
     காட்டி னாய்கழுக் குன்றிலே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து – சிவன் கட்டளைக்கு இணங்கி வாராத குற்றத்தை உடையன் ஆயினும் தனக்கு அருளிய பெருங்கருணையை வியந்து உரைத்தது.

பதவுரை

முழுவதும் கற்று அறிந்தவனே, சிவலோகத்தினை தன் உலகமாக உடையவனே, பிட்டுக்கு மண் சுமந்த பெருந்துறையில் உறையும் பெருமானே! உன் உரைக்கப்படுகின்ற கட்டளைக்கு இணங்கி வாராத குற்றத்தை உடைய நான் உன்னை சார்ந்து அடைந்திலேன்;  அத்தகைய குற்றம் உடையவன் ஆகியவனும் சிறுமை உடைய நாயினும் கடைப்பட்ட என்னையும் ஆட்கொள்ளுதல் பொருட்டுத் திருக்கழுக்குன்றில் எழுந்தருளி உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய்; உன் பெருங்கருணையை எவ்வாறு வியந்து உரைப்பது?

விளக்க உரை

  • சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 63வது படலம் மண் சுமந்த படலம்
  • பிட்டு நேர்பட – உண்ட பிட்டுக்கு அளவுக்கு ஒப்ப
  • சழக்கன் – பொய்யன்
  • சிட்டன் – உயர்ந்தோன், பெரியோர், கல்வி நிரம்பிய சான்றோர்
  • வெங் கட்டன் – கொடிய துன்பத்தை உடையவன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மார்கழி – 25 (2020)


பாடல்

முன்னையோ சென்மாந்திர மென்னென்ன பாவங்கள்
மூடனான் செய்த னம்மா
மெய்யென்று பொய்சொல்லி கைதனிற் பொருள்தட்டு
மோசங்கள் பண்ணி னேனோ
என்னமோ தெரியாது இக்கணந் தன்னிலே
இக்கட்டு வந்த தம்மா
ஏழைநான் செய்தபிழை தாம்பொறுத்தருள் தந்து
என்கவலை தீரு மம்மா
சின்னங்களாகுது ஜெயமில்லையோ தாயே
சிறுநாணமாகு தம்மா,
சிந்தனை களென் மீதில் வைத்து நற்பாக்கியமருள்
சிவசக்தி காமாட்சி நீ
அன்னவாகனமேறி யானந்தமாக உன்
அடியன் முன் வந்து நிற்பாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே

காமாட்சியம்மை விருத்தம்

கருத்து – பல ஜென்மாக்களில் தான் செய்த தவறுகளை உரைத்து தனக்கு கதி அளிக்கும்படி வேண்டி நிற்கும் பாடல்.

பதவுரை

அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே! மூடனாக இருந்து முந்தைய பிறவிகளில் செய்த பாவங்களின் காரணமாக இதற்கு முன் எத்தனையோ ஜன்மங்கள் எடுத்து வந்தேன்; பொய்யான ஒன்றை உண்மை என்று உரைத்து கைகளில் பொருள்களை தட்டிப்பறித்து மோசங்கள் செய்தேன்; என்னவென்று தெரியாமல் இக்கணத்தில் இத்துன்பம் வந்தது தாயே; செய்வது அறியாமல் இருக்கும் ஏழை ஆகிய நான் செய்த பிழைகளை பொறுத்து அருள் தந்து என் கவலைகளை நீக்க வேண்டும்; இத்துன்பங்கள் எல்லாம் சேர்ந்து வெற்றி எனும் ஜெயம் இல்லாமல் செய்து வெட்கப்பட வைக்கும் அளவில் தனக்கான அடையாளத்தினை பதிக்கிறது; சிவசக்தி எனும் காமாட்சி ஆகிய நீ பல உயிர்களை காப்பதன் பொருட்டு சிந்தனை கொண்டவளான நீ என்மீதும் சிந்தனை வைத்து எனக்கு நற்பாக்கியத்தினை அருள்வாயாக; உன்னை விரும்பும் உன் அடியவன் ஆகிய என்முன் அன்ன வாகனத்தின் மீது ஏறி ஆனந்தமாக வந்து நிற்பாயாக.

 

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மார்கழி – 24 (2020)


பாடல்

சாவாது இருந்திடப் பால்கற – சிரம்
தன்னில் இருந்திடும் பால்கற
வேவாது இருந்திடப் பால்கற – வெறு
வெட்ட வெளிக்குள்ளே பால்கற

இடைக்காடர்

கருத்து – இறவாமல் இருத்தலில் பொருட்டு அமுததாரிணை எனும் பால் கறத்தல் வேண்டும் என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

இறப்பு கொள்ளுதல் எனும் மரணம் நிகழாமல் இருத்தலில் பொருட்டு சிரத்தில் இருந்து வெட்டவெளி என்றும் ஆகாயம் என்றும் நடனசபை என்றும் அழைக்கப்படும் அழைக்கப்படும் இடமாகிய அண்ணாக்கில் இருந்து பால் கறத்தல் எனும் அமுததாரிணையைப் பெற வேண்டும்.

விளக்க உரை

  • அமுததாரணை – உணவின்றி நிட்டையிலிருக்கும் மௌனயோகிக்கு ஆதரவாகத் தலையினுள்ளிருந்து பெறும் அமிர்த ஒழுக்கு
  • பால்கறத்தல் – அமுததாரணை. உயிர்கள் பசு என்பதாலும் ஞானம் அவர்களிடத்தில் மறைந்திருக்கும் என்பதாலும், பசுக்கள் தன் இயல்பாய் பால் கறத்தல் செய்ய இயல்பு அற்றவை என்பதாலும் பதி அருள்கொண்டு முயற்சியினால் அது சித்திக்கும் என்பதாலும் இவ்வாறு உரைக்கப்படுகிறது.  

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மார்கழி – 23 (2020)


பாடல்

அடும்புங் கொன்றையும் வன்னியும் மத்தமும்
துடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான்
கடம்பன் தாதை கருதுங்காட் டுப்பள்ளி
உடம்பி னார்க்கோர் உறுதுணை யாகுமே

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – சிவன் சூடியுள்ள மலர்களை குறிப்பிட்டு அவர் அனைத்து உயிர்களுக்கு துணையாக இருப்பதை குறிப்பிடும் பாடல்.

பதவுரை

விரும்பத்தக்கதான காட்டுப்பள்ளி எனும் தலத்தில் உறைபவரும், அடும்பு மலர்கள், கொன்றை மலர்கள், வன்னி மலர்கள், ஊமத்த மலர்கள் ஆகியவற்றால் புனையப்பட்ட மாலையை சடையில் சூடி இருப்பவரும், ஒளிவீசும் முத்து போன்ற சோதி வடிவாக இருப்பவனும், கடம்ப மலர் மாலையினை அணிந்த முருகனின் தந்தையும் ஆகிய பெருமானே இந்த உடலோடு கூடி வாழும் உயிர்களுக்கு உற்ற துணைவர் ஆவார்.

விளக்க உரை

  • அடும்பு – அடம்பமலர்
  • துடும்பல் – நிறைந்திருத்தல்
  • தூமணிச்சோதி – தூயமணியினது ஒளியை உடையவன்
  • கடம்பன் – கடம்பமலர்மாலை சூடிய முருகன்
  • தாதை – தந்தை

திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – அடும்பு

புகைப்படம் மற்றும் செய்தி - விக்கிப்பீடியா

• வேறு பெயர் அடம்பு
• படரும் கொடி வகை சார்ந்தது
• கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும் தன்மை உடையது
• குணங்கள் – மருத்துவ மூலிகை, வயிற்றுப்போக்கை நிறுத்தக்கூடியது. மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது. சிறுநீரை பெருக்கும் தன்மை உடையது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மார்கழி – 22 (2020)


பாடல்

திருநில மருவிக் காலி னிருவழி யடைபட் டோடி
     சிவவழி யுடனுற் றேக …… பரமீதே
சிவசுட ரதனைப் பாவை மணமென மருவிக் கோல
     திரிபுர மெரியத் தீயி …… னகைமேவி
இருவினை பொரியக் கோல திருவரு ளுருவத் தேகி
     யிருள்கதி ரிலிபொற் பூமி …… தவசூடே
இருவரு முருகிக் காய நிலையென மருவித் தேவ
     ரிளையவ னெனவித் தார …… மருள்வாயே
பரிபுர கழலெட் டாசை செவிடுகள் படமுத் தேவர்
     பழமறை பணியச் சூல …… மழுமானும்
பரிவொடு சுழலச் சேடன் முடிநெறு நெறெனக் கோவு
     பரியினை மலர்விட் டாடி …… அடியார்கள்
அரஹர வுருகிச் சேசெ யெனதிரு நடனக் கோல
     மருள்செயு முமையிற் பாக …… ரருள்பாலா
அலரணி குழல்பொற் பாவை திருமக ளமளிப் போரொ
     டடியவர் கயிலைக் கான …… பெருமாளே

திருப்புகழ் – அருணகிரிநாதர்

கருத்து – வினை நீக்கம் செய்து முருகப் பெருமானும் ஒன்று சேர்தலை விரும்பி தெரிவிக்கும் பாடல்.

பதவுரை

சிலம்பு, வீரக் கழல்கள் ஆகியவற்றின் ஒலிகள் எட்டு திசைகளிளும் செவிடு ஆகுமாறு ஒலிக்கும்படியாக, பிரமன், ருத்திரன், திருமால் ஆகிய முத்தேவர்களும் மற்றும் பழமையான வேதங்களும் பணிந்து போற்ற, கைகளில் ஏந்தி உள்ள சூலம், மழு, மான் ஆகிய மூன்றும் பக்குவமாகச் சுழல, ஆதிசேஷனின் பணாமுடிகள் நெறு நெறு என்று முறிய, நந்தியாகிய வாகனத்தில் திருவடி மலரை வைத்திருக்காமல் நடனம் செய்து, அடியார்கள் அரகர என மனம் உருகியும் ஜெய ஜெய என்று போற்றியும் ஆனந்த நடனக் காட்சியைத் தந்தருளும் பார்வதியின் பாகத்தினை உடையவராகிய சிவ பெருமான் ஈன்றருளிய குழந்தையே, மலர் அணிந்த கூந்தலை உடைய அழகிய பாவையும், திருமகள் போன்றவளுமான வள்ளியுடன் கூடுதலை விரும்பியும் அடியார்கள் வாழும் கயிலை மலையிடத்தும் உரித்தான பெருமாளே! பிராண வாயு செல்லும் இடகலை, பிங்கலை ஆகிய மார்க்கங்கள் அடைபடும்படி மூச்சை செலுத்தி, சிவ நெறியில் நின்று, தனித்து  மேலிடத்தே நிற்கும் சிவ ஜோதியை திருமணம் செய்து ஒன்று கூடுதல் போலக் கூடி, பிறவி தோறும் தொடர்ந்து விளங்கி நிற்கும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மும்மலங்களும் உனது புன்னகையால் விளைந்த தீயில் எரிபட்டு அழிய, நல் வினை, தீ வினை ஆகிய இரண்டு வினைகளும் தீய்ந்து சாம்பலாக, அழகிய உனது திருவருளாகிய உருவத்தில் ஈடுபாடு கொண்டு, இருளும் ஒளியும் இல்லாத அழகிய பூமியிடத்தே, தவ நெறிப் பயனாய் நீயும் நானும் ஒன்றுபடக் கலந்து, அத்தகையக் கலப்பால் இவ்வுடல் நிலைபட்டதெனப் பொருந்தி, தேவர்கள் இவன் புதுமையானவன் என்று என்னை வியந்து கூறும்படியான விசித்திரப் பெரும் பேற்றை அருள்வாயாக.

விளக்க உரை

  • இலி – இல்லாதவன், இல்லாதவள், இல்லாதது, இல்லாததைக் குறிக்கும் பின்னொட்டு
  • திரு ஒளி – ஞான ஒளி வீசுகின்ற மேருவெளியில் ஏறி நிற்றல்
  • காலின் இருவழி அடைபட்டு ஓடி – (கால்-பிராணவாயு) இடை, பிங்கலை என்ற இரு நாடிகள் வழியே செல்லும் பிராணவாயுவினை அடைத்து சுழுமுனை வழி மேலேற்றுதல்
  • சிவ வழியுடன் உற்று – சிவயோக நெறியை அடைந்து மூச்சைப் பிடித்து கும்பித்து நிறுத்திச் செய்வதாகிய ஹடயோகம்
  • ஏகபர மீதே – கருவி கரணங்கள் யாவும் கழன்று, முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அதற்கு அப்பாலாக இருக்கக் கூடியதான  ஏகாந்தமான மேலிடத்தே ஆன்மா நிற்றல்.

தன்னம் தனி நின்றது தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?
மின்னும் கதிர்வேல் விகிர்தா, நினைவார்
கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே (கந்தர்அநுபூதி)

எனும் பாடலும் ஒப்பு நோக்கி அறிக.

  • பாவை மணம் என மருவி – சிறுமியர்கள் சிறு பிராயத்தில் பொம்மைக் கல்யாணம் புரிந்து மகிழ்வது போல்  இறைவனை அடைகின்ற முழுப் பக்குவம் இல்லை எனினும்,  சிறியேன் இறைவனுடன் ஒன்றி இன்புறுவேன்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மார்கழி – 21 (2020)


பாடல்

வேலை முகடும் விசும்பகடும் கைகலந்த
காலைநீர் எங்கே கரந்தனையால் – மாலைப்
பிறைக்கீறா கண்ணுதலா பெண்பாகா ஐயோ
இறைக்கூறாய் எங்கட்(கு) இது

பதினொன்றாம் திருமுறை – சிவபெருமான் திருமும்மணிக்கோவை – இளம்பெருமான் அடிகள்

கருத்து – சிவனின் வடிவ அழகை குறிப்பிட்டு ஊழிக்காலத்தில் தண்நீர் அனைத்தையும் எங்கு வைத்திருந்தாய் எனும் வியப்புடன் கேள்வி எழுப்பும் பாடல்.

பதவுரை

சாயுங்காலத்தில் தோன்றும் சந்திரனின் பிறைக்கீற்றையும், நெற்றிக் கண்ணையும், இடப்பாகத்தில் உமா தேவியையும் கொண்டுள்ளவரே! கடலின் உச்சியையும் ஆகாயத்தின் நடு இடத்தையும் இரண்டும் ஒன்றி நிற்கும் படியான ஊழிக்காலத்தில் நீரை எங்கே உள்ளடக்கி வைத்தாய்? இதனை அறியாது திகைக்கின்றோம். ஆகவே இதன் பொருட்டு எங்களுக்குப் பதில் சொல்வீராக.

விளக்க உரை

  • வேலை – பணி, தொழில், உத்தியோகம், காரியம், கடல்
  • கீற்றன் – இடைக் குறைந்து கீறன்
  • வேலை முகடு – கடலின் உச்சி
  • விசும்பு அகடு – வானத்தின் நடுவிடம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மார்கழி – 19 (2020)


பாடல்

உடலின்வே றுயிரேன் இந்த உடலன்றோ உணர்வ தென்னின்
உடல்சவ மான போதும் உடலினுக் குணர்வுண் டோதான்
உடலினின் வாயுப் போனால் உணர்ச்சியின் றுடலுக் கென்னின்
உடலினின் வாயுப் போகா துறக்கத்தும் உணர்வ தின்றே

திருநெறி 2 – சிவஞான சித்தியார்

கருத்து – உறக்கத்தில் உயிர் தன்னை அறியாமையினால் உடலில் இருந்து வேறுபட்டு மற்றொரு உயிர் என்பதை மறுதலிக்கும் பாடல்.

பதவுரை

அவயவங்கள்  குறைபாடுகள் இல்லாமல் வாயுக்கள் ஒன்று கூடி உண்டான இந்த உடலில்  அவற்றில் இருந்து வேறுபட்டு இருக்கும் மற்றொரு உயிர் என்று அறியத் தக்க உணர்வு தோன்றுமானால் உணர்ச்சி அற்ற நிலைக்கு செல்லக்கூடியதான இந்த உடலானது, பூதக்கூட்டத்தால் ஒன்றாக கூடி, குறைவின்றி கிடைக்கும் நிலை ஆகியதும்  உறக்கத்திலும் அறிவு வெளிப்பட்டு உடலுக்கு உணர்வு உண்டாக வேண்டும் அல்லவா?

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!