
பாடல்
பண்ணாரும் காமம், பயிலும் வசனமும்,
விண்ணாம் பிராணன், விளங்கிய சத்தமும்,
புண்ணாம் உடலில் பொருந்து மனத்தையும்
அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – காமம் முதலிய சிறிய இன்பம் காரணமாக உடம்பை விரும்புதல் சிறப்புடையதாகாது என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
நன்கு அமையப் பெற்ற உடலால் எழுகின்ற காமமும், அதன் காரணமாக பொருந்தி ஒலிக்கக் கூடியதான பேச்சுக்களும், மேலே செல்லும் போது ஆகாயம் வரை நீட்டிக்கச் செய்வதான மூச்சும், மூச்சினை தொடர்ந்து எழுகின்றன ஓசையும், புலால் வடிவாகிய உடம்பின் உள்ளே இருப்பதாகிய மனமும் இவை எல்லாம் எங்கு சென்றன என்று எண்ணும்படியாக உடல் முதலில் நிலையழிந்து, பின்னர் உருவும் அழிந்து ஒழியும்.
விளக்கஉரை
- பயிலுதல் – தேர்ச்சியடைதல், சொல்லுதல், பழகுதல், சேவித்தல், நடமாடுதல், தங்குதல், கற்றல், நிகழ்தல், நெருங்குதல், பொருந்துதல், ஒழுகுதல், ஒலித்தல், அழைத்தல்
- விண்ணாம் பிராணன், விளங்கிய சத்தமும் – பிராணன் என்பதை முன்வைத்து அதன் முழுமையை உணர்த்துவதான தச தீட்சையினால் கிடைக்கப்பெறும் தச நாதங்கள் வாய்க்கப் பெறும் என்றும் பொருள் கொள்ளலாம்.
- முதல் தந்திரத்தில் `யாக்கை நிலையாமை` பற்றி கூறப்பட்டாலும், அதனை வலியுறுத்தி இங்கு ‘உடல் விடல்‘ எனும் தலைப்பில் வருவதாலும் காமம் முன்வைத்து எழுதப்பெற்று இருப்பதாலும் காமத்தின் இயல்புகளை எடுத்துரைத்து அதன் நிலையாமையை கூறி உடல் நிலையாமை கூறப்படுகிறது எனவும் கொள்ளலாம்.