பாடல்
மூலம்
வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா உடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே
பதப்பிரிப்பு
வையின் கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்க்கு என்றும்
நொய்யின் பிளவு அளவேனும் பகிர்மின்கள் நுங்கட்கு இங்ஙன்
வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல்
கையில் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
கருத்து – தனது சாயல் தனக்கு உதவாது போல் செல்வம் உதவாது என்பதை உரைத்து முருகப்பெருமானை துதிக்கச் சொல்லும் பாடல்.
பதவுரை
இந்த உலகில் வெய்யில் காலத்தில் ஒதுங்கி நிற்கக் கூட உதவாத இந்த உடலின் பயனற்ற நிழலைப் போல தனது இறுதி வழிக்கு உங்கள் கையிலுள்ள பொருள் எனப்படுவதாகிய செல்வமும் துணை செய்ய மாட்டாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஆகவே செல்வத்தின் நிலையாமைக் கண்டு கொண்டும் உணர்ந்து கொண்டும் கூர்மையானதும் ஒளி வீசும் படியாகவும் அழகானதுமான வேலையுடைய திருமுருகப் பெருமானைத் துதித்து வினையின் காரணமாக தரித்திரனாக இருப்பவனுக்கு எப்போதும் நொய்யில் பாதி அளவாவாயினும் பங்கிட்டுக் கொடுங்கள்.
விளக்கஉரை
- வை – வைக்கோல், வைக்கவும், கூர்மை
- வறிஞன் – தரித்திரன்
- வடி – அழகு
- வெறு நிழல் – பயன்படாத நிழல்
- அரிசில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டதான நொய்யுணவாக உண்பவராக இருந்தாலும் பகிர்ந்து உண்ணுங்கள். வறுமை இருப்பினும் பகிர்ந்து உண்ணுதலை வலியுறுத்துகிறது.
- ‘தன்னது சாயை தனக்கு உதவாது கண்டு என்னது மாடு என்று இருப்பார்கள் ஏழைகள்‘ எனும் திருமந்திரப் பாடல் வரிகளுடனும் (செல்வம் நிலையாமை), ‘காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே‘ எனும் பட்டினத்தாரின் பாடல் வரிகளுடனும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது