
பாடல்
வடிவமாக இருப்பதுவே சந்தோஷமாகும்
வரிசையுடன் ஆகம புராணந்தன்னை
பதிவாக விட்டுவிட நின்றுகொண்டு
பத்தியுடன் வேதாந்த பொருளென்றெண்ணி
முடிவாக அத்திவுரித் தடிமேல் நின்று
முன்பின்னாயாகுகின்ற முறையாதென்று
அடியார்கள் சொல்லுகிற கருவைக் கேளு
அவர்சொல்லும் பூரணமு மறிந்துபாரே
அகத்தியர் சௌமியசாகரரம்
கருத்து – அடியார்களை அணுகி அவர்கள் இடத்தில் இருந்து பூரணத்துவத்தை பெற வேண்டும் என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
உண்மையான சந்தோசம் என்பது இருப்பதைக் கொண்டு திருப்தி அடையும் மனத்துடன் இருக்கும் வடிவமே சந்தோஷமாகும்; சமய நெறிமுறைகளை எடுத்துச் சொல்லும் ஆகமம், அறுபத்துநாலு கலைகளுள் ஒன்றானதும், பழமையுடன் கூடியதான கதையைக் கூறுவதும் ஆன புராணம் ஆகியவற்றை செய்திகள் என்று எண்ணாமல் உண்மைத் தன்மைகளை பக்தியுடன் வேதத்தின் முடிவுகளாகிய வேதாந்தம் என்று எண்ணி, அனைத்தையும் முடிவாக அறிந்தவர்களானவர்களும், சாம்பல் எனப்படும் திருநீற்றினை மேனி முழுவதும் பூசி, காக்கும் திருவடிகள் மேல் மனம் வைத்தவர்களும், மூச்சுக் காற்றினை முறையாக அறிந்து அதன்படி நிற்பவர்களுமான அடியவர்களாகிய கருத்தினை கேட்பாயாக; அவர்கள் உரைக்கக் கூடியதான பூரணத்துவம் என்பது என அறிந்து பார்ப்பாயாக என அகத்தியர் புலத்தியருக்கு உரைக்கிறார்.
விளக்க உரை
- புராணம் – பழமை, பழங்கதை, அறுபத்துநாலுகலையுள் ஒன்றும் வியாச முனிவரால்இயற்றப்பட்டதும், சருக்கம், பிரதிசருக்கம், வமிசம்,மன்வந்தரம், வமிசானுசரிதம் இவற்றைப்பற்றிக் கூறுவதுமான பழைய நூல்வகை
- அத்திவுரித்து அடிமீது நின்று – அத்தி மரம், யானை என்று இருபொருள் பெறப்படும். அத்தி உரித்து என்பது வேழ முகத்தானுக்கு உரிய யானை குறிக்கும் மூலாதாரத்தில் உள்ள குண்டலினியை எழுப்பி அங்கு பிராணனை நிறுத்தி அதை மேலே ஏற்றுவது என்று பொருள்; பிராணன் எனும் குண்டலினியை அது இருக்கும் இடமான மூலாதாரத்திலிருந்து எழுப்பி பின் நிலையான இடமான சகஸ்ராரத்துக்கு மாற்றுவது. குருமுகமாக அறியப்படவேண்டிய ரகசியம் இது.
- அடியார் – அடியை உடையவர்கள், அதாவது மூலாதாரத்தை அறிந்தவர்கள் அடியவர்கள். அவர்களது விளக்கமே உண்மையான விளக்கமாகும் என்றும் பொருள் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.