
பாடல்
தொடைத்தலை மலைத்திதழி துன்னிய வெருக்கலரி வன்னிமுடியின்
சடைத்தலை மிலைச்சியத போதனனெ மாதிபயில் கின்றபதியாம்
படைத்தலை பிடித்துமற வாளரொடு வேடர்கள் பயின்றுகுழுமிக்
குடைத்தலை நதிப்படிய நின்றுபழி தீரநல்கு கோகரணமே
மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்
கருத்து – திருக்கோகரணம் எனும் திருத்தலத்தில் உறையும் சிவனின் பெருமைகளைக் கூறும் பாடல்.
பதவுரை
அலைகளை உடைய புனித நதியில் குடைந்து மூழ்கி வணங்கத் தக்கவரான சிவபெருமான் அழிக்கப்பட்டதான தலைமாலை அணிந்தவர்; திருச்சடையில் கொன்றை, எருக்கு, அலரி, வன்னிப்பத்திரங்கள் ஆகியவற்றால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவர்; அவர் வீற்றிருந்து அருளுகின்ற இடமானது வெற்றி பொருந்திய வாளாயுதத்தை ஏந்திய வீரர்களுடன் வேடர்கள் நட்புக் கொண்டு கூடி இருக்கக் கூடியதும், பழிபாவத்தை நீக்கி அருள்புரியும் தலமான திருக்கோகரணம் எனும் திருத் தலமாகும்.
விளக்க உரை
- தொடை – துடைத்தல் – தடவிப்போக்குதல், பெருக்கித் தள்ளுதல், அழித்தல், துவட்டுதல், கொல்லுதல், தீற்றுதல், காலியாக்குதல், நீக்குதல், கைவிடுதல், ஒப்பமிடுதல்
- தொடைத்தலை மலைத்து – தலைமாலையை அணிந்து
- இதழி – கொன்றைமலர்
- வன்னி – வன்னிப் பத்திரங்கள்
- மிலைச்சிய – அணிந்த
- படைத்தலைபிடித்து – ஆயுதங்களின் அடிப்பாகங்களைப் பற்றி
- மறம் – வெற்றி பொருந்திய
- அலைநதி – அலைகளையுடைய நதியில்
- பாடிய – முழுகி வணங்க
திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – அலரி
புகைப்படம் : திரைப்பட இயக்குனர் திரு.ஐயப்ப மாதவன்
செய்தி : இணையம்
- வகைகள் – ஒற்றை அலரி, அடுக்கு அலரி
- வண்ணங்கள் தற்காலப் பெயர் – அரளி
- வகைகள் – மஞ்சள், வெள்ளை, சிவப்பு, குங்கும வண்ணம்
- மருத்துவ குணங்கள் – ஆறாத புண்களை ஆற்றும், அக்கியை போக்கும், ரத்தத்தை சுத்தப்படுத்தும்