
பாடல்
எந்தனைப் போலவே செனன மேடுத்தோர்க
ளின்பமாய் வாழ்ந் திருக்க,
யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில்
உன்னடியேன் தவிப்பதம்மா,
உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன்
உன் பாதஞ் சாட்சியாக
உன்னையன்றி வேறு துணை இனியாரை யுங்காணேன்
உலகந்தனி லெந்தனுக்கு
பின்னை யென்றெண்ணி நீ சொல்லாமலென் வறுமை
போக்கடித் தென்னை ரட்சி
பூலோக மெச்சவே பாலன் மார்க்கண்டன்போல்
பிரியமாய்க் காத்திடம்மா
அன்னையே யின்னமுன் னடியேனை ரட்சிக்க
அட்டி செய்யா தேயம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே
காமாட்சியம்மை விருத்தம்
கருத்து – வேறு எந்த தெய்வத்தையும் துணையாக கொள்ளாமல் இருப்பதால் தன்னை பிள்ளையாகக் கருதி, வறுமையைப் போக்கி காக்க வேண்டும் என்பதை கூறும் பாடல்.
பதவுரை
அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே! இந்த உலகம் முழுவதாலும் புகழப்படுபவரான மார்கண்டேயன் போல் என்னை பிரியமாக காத்திட வேண்டும் தாயே; உன்னுடைய திருவடிகளையே சாட்சியாக வைத்து நியே துணை என்று உறுதியாக நம்பினேன்; இந்த உலகத்தில் உன்னைத் தவிர வேறு யாரையும் துணையாகக் கொள்ளவில்லை; என்னைப்போலவே பிறவி எடுத்தவர்கள் இங்கே செல்வம், புகழ் என்று இன்பமாக வாழ்ந்திருக்க, உன்னுடைய அடியவன் ஆகிய யான் இத்தனை வறுமையில் தவிப்பது யான் செய்த பாவமா? நீ உன்னுடைய பிள்ளை என்று என்னை எண்ணி என்னிடம் எதுவும் உரையாமல் வறுமையை போக்கி என்னை ரட்சிக்க வேண்டும். தாயானவளே இன்னமும் உன்னுடைய அடியவன் ஆகிய என்னை ரட்சிக்காமல் தாமதம் செய்யாதே.
விளக்க உரை
- அட்டி – தாமதம், தடை