
பாடல்
துரத்தி உன்னை ஆசை தொடராமல் என்றும்
விரத்தியினால் ஆங்கு அவற்றை விட்டுப் – பரத்தில் அன்பு
செய்யடா செய்யடா, சேரப்பா பஞ்சம் எல்லாம்
பொய்யடா பொய்யடா பொய்
சிவபோக சாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்
கருத்து – உடலினை பொய் என்று உணர்ந்து ஆசையை அறுத்து, பரத்தில் அன்பு செய்ய வேண்டி உபதேசம் செய்து வலியுறுத்தும் பாடல்.
பதவுரை
பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் ஆகியவற்றால் ஆன இந்த உடல் பொய்யானது என்பதை உணர்ந்து, கையறு நிலையினை மனதில் கொண்டு, எக்காலத்திலும் துன்பத்தை தருவதாகிய ஆசை என்றும் தொடராமல், மேலுலகமானதும், மோட்சத்தின் இருப்பிடமானதும், நிறைவானதும் ஆன பரத்தில் அன்பு செய்.
விளக்க உரை
- காலம் – 16 ஆம் நூற்றாண்டு
- இந்த நூல் 139 வெண்பாக்களைக் கொண்டது
- துரத்துதல் – வெருட்டி ஓட்டுதல், அப்புறப்படுத்துதல், திருடன் முதலியோரைப் பிடிக்கப் பின் தொடர்தல், வண்டிமாடு முதலியவற்றைத் தூண்டி விரைந்தோடச் செய்தல்
- பரம் – மேலானது, திருமால்நிலை ஐந்தனுள் ஒன்றான முதல் நிலை, கடவுள், மேலுலகம், திவ்வியம், மோட்சம், பிறவி நீக்கம், முன், மேலிடம், அன்னியம், சார்பு, தகுதி, நிறைவு, நரகம், பாரம், உடல், கவசம், கேடகவகை, குதிரைக்கலனை
- செய்யடா செய்யடா, பொய்யடா பொய்யடா – அடுக்குத் தொடர். முதலில் சொன்னைதை உறுதிபடுத்த இரண்டாவது முறை.